×

மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

மாமல்லபுரம்: மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். யுனெஸ்கோ அமைப்பால் 1984ம் ஆண்டு அங்கீகரிக்கப்பட்ட உலக புகழ் வாய்ந்த சுற்றுலா நகரமான மாமல்லபுரத்திற்கு தினமும் உள்நாடு மற்றும் ஏராளமான வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இங்கு, பல்லவ மன்னர்கள் செதுக்கிய பல்வேறு புராதன சின்னங்கள் உள்ளன. தற்போது, தலசயன பெருமாள் கோயிலுக்கு எதிரே உள்ள ஒரு குறுகிய இடத்தில் திறந்தவெளி பகுதி பேருந்து நிலையமாக கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வருகிறது.

இங்கு, வரும் பேருந்துகள் நிறுத்த போதிய இடம் இல்லாததால் சாலையை ஆக்கிரமித்து நிறுத்துவதால், அடிக்கடி கட்டுப்படுத்த முடியாத அளவிற்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. கடந்த 1992ம் ஆண்டு சுற்றுலா பயணிகள், உள்ளூர் மக்கள் நலனை கருத்தில் கொண்டு போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தும் வகையில், வெளிநாடுகளில் உள்ளது போன்று ஒரு நவீன பேருந்து நிலையம் அமைக்க அரசு முடிவெடுத்தது. அதன்படி, மாமல்லபுரத்தின் எல்லை பகுதியான ஸ்ரீகருக்காத்தம்மன் கோயில் எதிரில் 6.79 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, அங்கிருந்த குடியிருப்புகளை அகற்றி வருவாய்த்துறை மூலம் நிலம் ஆர்ஜிதப்படுத்தப்பட்டு மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சி குழுமத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

இதையடுத்து, 2006 முதல் 2011ம் ஆண்டு வரை அப்போதைய தமிழ்நாட்டின் துணை முதல்வராக இருந்த மு.க.ஸ்டாலின் நெரிசலை குறைந்து சிரமமின்றி மக்கள் வந்து செல்லும் வகையில், நவீன பேருந்து நிலைய பணிகள் மேற்கொள்ள ரூ.18 கோடி நிதி ஒதுக்கப்பட்டு, பொதுப்பணி துறையிடம் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் ஒப்படைத்தது. பின்னர், ஆட்சி மாற்றம் ஏற்பட்டு பணிகள் தொடங்காமல் கிடப்பில் போடப்பட்டது. கடந்த 2020ம் ஆண்டு அங்கு மண் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பேருந்து நிலையம் கட்டுவதற்கு உகந்த இடம் என சான்றிதழ் பெறப்பட்டது.

இதையடுத்து, கடந்த சட்டமன்ற மானிய கோரிக்கையின் போது, மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையத்தின் கட்டுமான பணி பிப்ரவரி மாத இறுதியில் தொடங்கும் என அமைச்சர் பி.கே.சேகர்பாபு தெரிவித்தார். தற்போது, நவீன பேருந்து நிலையம் அமைய இருக்கும் இடத்தில் பொக்லைன் இயந்திரம் மூலம் வேலிகத்தான் மரங்கள் உள்ளிட்ட செடி, கொடிகள் அகற்றியும், இடத்தை சமன்படுத்தப்பட்டு பல்வேறு அம்சங்களுடன் பேருந்து நிலையம் கட்டுவதற்கு தயார் நிலையில் இருந்தது.

இந்நிலையில், மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடி மதிப்பீட்டில் நவீன பேருந்து நிலையம் அமைப்பதற்கு நேற்று மாலை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். இதையடுத்து, மாமல்லபுரத்தில் நடந்த நிகழ்ச்சியில் திருப்போரூர் எம்எல்ஏ பாலாஜி, செங்கல்பட்டு சார் ஆட்சியர் நாராயண சர்மா, திமுக மாவட்ட பொருளாளர் விசுவநாதன், விசிக காஞ்சி – செங்கல்பட்டு மண்டல செயலாளர் கிட்டு, விசிக திருக்கழுக்குன்றம் ஒன்றிய செயலாளர் அன்பு, நகர செயலாளர் ஐயப்பன், திமுக பேரூராட்சி கவுன்சிலர்கள் மோகன் குமார், பூபதி, வள்ளி ராமச்சந்திரன், லதாகுப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

The post மாமல்லபுரத்தில் ரூ.90.50 கோடியில் நவீன பேருந்து நிலையம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார் appeared first on Dinakaran.

Tags : Mamallapuram ,Chief Minister ,M K Stalin ,M. K. Stalin ,UNESCO ,M.K.Stalin ,
× RELATED தமிழகத்தில் கோடைகாலத்தில் தடையின்றி...