×

இணையதளத்தில் வேலைக்கு பதிவு செய்த இன்ஜினியரிடம் ரூ.1.24 லட்சம் அபேஸ்: புழல் பகுதியில் தொடரும் ஆன்லைன் மோசடி

புழல்: இணையதளத்தில் வேலைக்கு பதிவு செய்த இன்ஜினியர்வங்கி கணக்கில் இருந்து மோசடி கும்பல் ரூ.1.24 லட்சத்தை எடுத்துள்ளது. புழல் பகுதியில் இதுபோன்று ஆன்லைன் மோசடி சம்பவம் தொடர்ந்து அதிகரித்து வருவதால் மக்கள் அச்சமடைந்துள்ளனர். புழல் அடுத்த லட்சுமிபுரத்தை சேர்ந்த பெர்ஸி ஷெர்லின் (29) ராஜஸ்தானில் ஒன்றிய அரசின் தர கட்டுப்பாட்டு பொறியாளராக ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றி வருகிறார். இவர் வேறு வேலை தேடி பிரபல வேலைவாய்ப்பு இணையதளத்தில் இலவச சேவையை தவிர்த்து, பணம் செலுத்தி பிரீமியம் சேவையில் பதிவு செய்துள்ளார்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு வேலை வாய்ப்பு இணையதள பிரதிநிதி எனக் கூறி மோஹித் என்பவர் பெர்ஸி ஷெர்லினை செல்போனில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். தற்போதைய சந்தை சூழலில் உங்களது தேவைக்கேற்ப வேலை ஏதும் இல்லை எனவும், அதனால் நீங்கள் சேவையை ரத்து செய்துவிட்டு செலுத்திய பதிவு கட்டணத்தை திரும்ப பெறுமாறு கூறியுள்ளார். மீண்டும் சந்தையில் ஏற்றம் கண்டு உங்களுக்கு பொருத்தமான வேலை வாய்ப்பு வரும்போது தொடர்பு கொள்வதாகவும் அவர் கூறியுள்ளார். அதற்கு பெர்ஸி ஷெர்லின் மறுப்பு தெரிவித்துள்ளார்.

அப்போது எதிர்முனையில் பேசிய மோஹித், நீங்கள் தற்போது சேவையை ரத்து செய்து உங்களது பணத்தை திரும்பப் பெறாவிடில் உங்களது கணக்கு காலாவதியாகி விடும் எனவும், பலரும் இதேபோன்று சேவையை ரத்து செய்துள்ளதாகவும் கூறியுள்ளார். அதன் பேரில் தனது சேவையை ரத்து செய்வதற்கான படிவத்தை பூர்த்தி செய்த ஷெர்லின் அதற்கான கட்டணம் 10 ரூபாயை, தனது டெபிட் கார்டில் இருந்து செலுத்த முயன்றபோது, தொழில்நுட்ப கோளாறு காரணமாக பணம் செலுத்த முடிவில்லை. இதை தொடர்ந்து இன்டர்நெட் பாங்கிங் மூலம் மீண்டும் பணம் செலுத்தினார்.

அப்போது ரூ.32,999, ரூ.33,128, ரூ.32,929 என டெபிட் கார்டில் இருந்தும், ரூ.25000 இன்டர்நெட் பாங்கிங் சேவை வழியே என மொத்தமாக ரூ.1,24,056 பெர்ஸி ஷெர்லின் வங்கி கணக்கில் இருந்து அபேஸ் செய்யப்பட்டது கண்டு அவர் அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து வேலை வாய்ப்பு பிரதிநிதியை தொடர்பு கொண்டு கேட்டபோது, சர்வரில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு எனவும், மீண்டும் உங்களது கணக்கில் பணம் வரவு வைக்கப்படும் எனவும் கூறியுள்ளார். மறுநாள் மீண்டும் அவரை தொடர்பு கொள்ள முயற்சித்தபோது அவரது செல்போன் அணைத்து வைக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக வங்கியிலும், சைபர் மோசடி தொடர்பான 1930 எண்ணிலும் ஷெர்லின் புகார் அளித்தார். தொடர்ந்து தன்னை ஏமாற்றி பணத்தை மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுத்து, தனது பணத்தை மீட்டுத் தருமாறு புழல் காவல் நிலையத்திலும் அவர் புகார் அளித்தார். அதன்பேரில் புழல் போலீசார் மோசடி, தகவல் தொழில்நுட்ப சட்டம் என இரு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து ஆன்லைன் மோசடி கும்பல் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். புழல் சுற்றுவட்டார இடங்களில் நடைபெற்று வரும் ஆன்லைன் மோசடி சம்பவங்களை கட்டுப்படுத்த முடியாமலும், தொடர் மோசடியில் ஈடுபடும் குற்றவாளிகளை துப்பறிய முடியாமலும் புழல் போலீசார் திணறி வருகின்றனர்.

The post இணையதளத்தில் வேலைக்கு பதிவு செய்த இன்ஜினியரிடம் ரூ.1.24 லட்சம் அபேஸ்: புழல் பகுதியில் தொடரும் ஆன்லைன் மோசடி appeared first on Dinakaran.

Tags : Abes ,Puzhal ,Percy Sherlin ,Lakshmipur ,Dinakaran ,
× RELATED புழல் சிறைச்சாலையில் பெண் கைதி உயிரிழப்பு