×

தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை

கும்மிடிப்பூண்டி: கும்மிடிப்பூண்டியில் தொழிற்சாலையை மூடக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை போராட்டம் நடத்தினர். கும்மிடிப்பூண்டி அடுத்த புது கும்மிடிப்பூண்டி ஊராட்சியில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராமப்புற மக்கள் வசித்து வருகின்றனர். இங்கு பெரும்பாலான தொழிற்சாலைகளில் இருந்து தினந்தோறும் கருப்பு புகை மற்றும் கருப்பு துகள்கள் மேற்கண்ட ஊராட்சியில் காற்றின் மூலம் படிவதால் பொதுமக்களுக்கு பல்வேறு நோய்கள் உண்டாகிறது. இந்நிலையில், மேற்கண்ட ஊராட்சிக்கு உட்பட்ட ராமாச்சேரி பண்டிகையையொட்டி பழைய டயர்களை அரைத்து, அதில் பவுடர் மற்றும் ரசாயன எண்ணெய் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்குகிறது. இந்த தொழிற்சாலையில் இருந்து அடிக்கடி துகள்கள் வெளியேறி பொதுமக்களுக்கு மூச்சுத் திணறல், சுவாசக் கோளாறு கடந்த 20 தினங்களுக்கு முன்பு ஏற்பட்டது.

இதில் கிராமப்புற மக்கள் தொழிற்சாலை முன்பு ஒன்றுகூடி ஆர்ப்பாட்டம் நடத்த முயன்றனர். அப்போது, சிப்காட் போலீசார் மற்றும் மாசு கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் தொழிற்சாலையை 10 தினங்களுக்கு மூடி வைக்குமாறு உத்தரவிட்டனர். இந்தநிலையில் நேற்று வழக்கம்போல் அப்பகுதியைச் சேர்ந்த கிராம இளைஞர்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் ராமாச்சேரி கண்டிகை சாலையிலிருந்து சிப்காட் சென்றது தொழிற்சாலையிலிருந்து கருப்பு துகள்கள் வெளியேறி கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த கிராமப்புற மக்கள் 50க்கும் மேற்பட்டோர் கும்மிடிப்பூண்டி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு முற்றுகை போராட்டம் நடத்தினர். அப்போது மேற்கண்ட தொழிற்சாலையை நிரந்தரமாக மூடவேண்டுமென்று வலியுறுத்தினர். இது சம்பந்தமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் அவர்கள் புகார் மனு அளித்தது குறிப்பிடத்தக்கது.

The post தொழிற்சாலையை நிரந்தரமாக மூடக்கோரி வட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் முற்றுகை appeared first on Dinakaran.

Tags : District Collector ,Kummidipoondi ,Pudu Kummidipoondi ,
× RELATED பறவைக் காய்ச்சல் எதிரொலி: நாமக்கல்...