×

`இங்கிலாந்து விரித்த வலையில் தப்பினேன்’ – சுப்மன் கில் சூழலுக்கு தகுந்த மாதிரி ஆடியதால் வெற்றி வசப்பட்டது: ஆட்ட நாயகன் துருவ் ஜூரல் மகிழ்ச்சி பேட்டி

ராஞ்சி: இங்கிலாந்துக்கு எதிரான 5வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வெற்றி பெற்றதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் துருவ் ஜூரெல். 23 வயதான இவர் ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடினார். தற்போது இந்திய அணியின் விக்கெட் கீப்பராக டெஸ்ட் கிரிக்கெட்டில் விளையாடுகிறார். இந்நிலையில் தாம் ஆடிய 2வது டெஸ்டிலேயே இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்து ஆட்ட நாயகன் விருது பெற்றுள்ளார். இவர் முதல் இன்னிங்சில் எடுத்த 90 ரன்களும், 2வது இன்னிங்சில் அவுட் ஆகாமல் எடுத்த 39 ரன்களும் இந்திய அணியின் வெற்றிக்கு உதவியது. இதையடுத்து ஆட்டநாயகன் விருது பெற்ற துருவ்ஜூரல் கூறியதாவது:- நாங்கள் சூழலுக்கு தகுந்த மாதிரி ஆடினோம். முதல் இன்னிங்சிலும் நான் அவ்வாறு தான் விளையாடினேன். முதல் இன்னிங்சில் ஆடும்போது நாம் இப்போது எவ்வளவு அதிக ரன் அடிக்கிறோமோ அந்த அளவு 2வது இன்னிங்சில் குறைந்த இலக்கே நமக்கு வரும் என்று எனக்கு தெரியும். அதனால் தான் முதலில் சூழலுக்கு தகுந்தார் போல் விளையாடினேன். முதல் இன்னிங்சில் விக்கெட்டுகள் சரிந்த போது நான் கீழ் வரிசை பேட்ஸ்மேனுடன் விளையாட நேரிட்டது. அவர்களுடன் நல்ல ஒரு பார்ட்னர்ஷிப்பை அமைத்தேன். எனவே இந்த பாராட்டுக்கள் என்னை மட்டும் சேராது. அவர்களுக்கும் கிடைக்க வேண்டும். ஆண்டர்சன், மார்க் வுட் போன்ற வீரர்களை எல்லாம் டெஸ்ட் தொடரில் எதிர்கொண்டது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. ஏனென்றால் நான் அவர்களை எல்லாம் டிவியில் தான் பார்த்திருக்கிறேன். நான் ஒவ்வொரு பந்திலும் கவனம் செலுத்தி அதன் பிறகு விளையாடுவேன். பந்தைதான் பார்ப்பேனே தவிர பவுலர்களை பார்க்க மாட்டேன். இந்தப் போட்டியில் நானும் கில்லும் விளையாடும் போது பத்து, பத்து ரன்களாக இலக்கை பிரித்துக்கொண்டு அதன் பிறகு ஆட்டத்தை கட்டமைத்து விளையாடினோம். அதனால்தான் வெற்றி வசப்பட்டது. இவ்வாறு அவர் கூறினார்.

இதுபோல் இந்த போட்டியில் சுப்மன்கில்லும் அபாரமாக ஆடி 124 பந்துகளில் 52 ரன்கள் சேர்த்து இந்தியாவின் வெற்றிக்கு வழிவகுத்தார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த போட்டியில் நாங்கள் கடும் அழுத்தத்தை சந்தித்தோம். எங்களுக்கு இங்கிலாந்து பவுலர்கள் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்தனர். எனினும் எங்களது தொடக்க வீரர்கள் சிறப்பாக ஆடி எங்களுக்கு நல்ல அடித்தளத்தை போட்டுக் கொடுத்தனர். இதேபோல் துருவ் எனக்கு நல்ல கம்பெனி கொடுத்தார். இதன் மூலம் என் மீது இருந்த அழுத்தம் குறைந்தது. இதையடுத்து சூழலுக்கு தகுந்தார் போல் இன்னிங்சை கட்டமைக்க திட்டமிட்டோம். இங்கிலாந்து வீரர்கள் பவுண்டரியை விடக்கூடாது என்பதற்காக எல்லைக்கோட்டில் நின்று கொண்டார்கள். எனவே இதனை ஒரு வாய்ப்பாக கருதி நாங்கள் சிங்கிள்ஸ்களை அதிகம் எடுக்க தொடங்கினோம். துருவ் ஜூரல் முதல் இன்னிங்ஸில் நன்றாக விளையாடினார். அவர் எந்த மனநிலையில் இருந்தாரோ அதே மனநிலையை நானும் ஏற்படுத்திக் கொண்டேன். நான் இந்த தொடரில் அதிகம் எல்பிடபிள்யூ ஆனேன். இம்முறை அப்படி ஆகிவிடக் கூடாது என்று எண்ணினேன். அதன் காரணமாக என் கால்களை நான் பயன்படுத்தி பேட்டிங் செய்யும்போது இறங்கி வந்து ரன்கள் சேர்த்தேன். இதனால் இங்கிலாந்து விரித்த வலையில் இருந்து தப்பித்தேன். டெஸ்ட் கிரிக்கெட்டில் தொடரை வெல்வது என்பது எங்களுக்கு மிகவும் முக்கியமான விஷயமாகும். இந்த தொடரில் அனுபவ வீரர்கள் பலரும் இல்லை. முதல் டெஸ்ட்டுக்கு பிறகு கே.எல்.ராகுல் விலகி சென்றதும் எங்களுக்கு பின்னடைவாக இருந்தது. ஆனால் ரோகித் சர்மா எங்கள் மீது நம்பிக்கை வைத்திருந்தார். எங்களுக்கு உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்தார். எங்களை சுதந்திரமாக விளையாட அவர் வற்புறுத்தினார்’’ என்றார்.

 

The post `இங்கிலாந்து விரித்த வலையில் தப்பினேன்’ – சுப்மன் கில் சூழலுக்கு தகுந்த மாதிரி ஆடியதால் வெற்றி வசப்பட்டது: ஆட்ட நாயகன் துருவ் ஜூரல் மகிழ்ச்சி பேட்டி appeared first on Dinakaran.

Tags : England ,Subman Gill ,Dhruv Jural ,Ranchi ,Dhruv Jurel ,India ,IPL ,England'' ,Dinakaran ,
× RELATED நடு வரிசையில் அதிக விக்கெட்டுகளை...