×

பாஜவில் சேரப் போன அதிமுக மாஜி எம்பி? பாதி வழியில் மடக்கிய ஆர்.பி.உதயகுமார்

உசிலம்பட்டி: தேனி மக்களவை தொகுதி அதிமுக மாஜி எம்பி பார்த்திபன் பாரதிய ஜனதாவில் இணையப் போவதாக தகவலை வந்ததையடுத்து, நேற்று மாலை உசிலம்பட்டி பொதுக்கூட்டத்தில் இருந்த மாஜி அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பாதியில் சென்று, ஆண்டிபட்டி அருகே மடக்கி, காரில் அழைத்து வந்து பொதுக்கூட்டத்தில் பேச வைத்தார். தமிழகத்தில் பாஜவை பலப்படுத்த போகிறேன் என மாநில தலைவர் அண்ணாமலை அவ்வப்போது மாற்றுக்கட்சிகளில் இருக்கும் போணி ஆகாத சிலரை பாஜவில் சேர்த்து வருகிறார். குறிப்பாக அதிமுகவில் இருக்கும் மாஜிக்களை இழுக்க அண்ணாமலை பெரு முயற்சி எடுத்து வருகிறார். இந்நிலையில், மதுரை மாவட்டம், உசிலம்பட்டியில் ஜெயலலிதா பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் நேற்று மாலை நடந்தது. இதில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் பேசி கொண்டிருந்தார். அப்போது தேனி மக்களவை அதிமுக மாஜி எம்பி பார்த்திபன், மதுரைக்கு இன்று வரும் பிரதமர் மோடி முன்னிலையில் பாஜவில் இணையப்போவதாகவும், இதற்காக அவர் காரில் மதுரை வந்து கொண்டிருப்பதாகவும் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, கூட்டத்தில் இருந்து பாதியிலேயே வெளியேறி ஆர்.பி உதயகுமார் உடனடியாக காரில் தேனிக்கு பறந்தார். தேனியில் இருந்து மதுரை வந்த பார்த்திபனை ஆண்டிபட்டியில் சந்தித்து பேசினார். பின்னர் தனது காரில் உசிலம்பட்டிக்கு அழைத்து வந்து பொதுக்கூட்டத்தில் பேச வைத்தார். இது குறித்து நிருபர்களிடம் பார்த்திபன் கூறுகையில், ‘மாஜி அமைச்சர் உதயகுமார் என்னை சந்திக்க விரும்புவதாக கிடைத்த தகவலின் பேரில் வந்தேன். தேனியில் எந்த ஆலோசனைக் கூட்டமும் நடத்தவில்லை. நான் பாஜவில் இணைய உள்ளேன் என வெளியாகும் செய்தி யாரோ வேண்டுமென்றே கிளப்பி விடப்பட்ட தகவல்’ என்றார்.

 

The post பாஜவில் சேரப் போன அதிமுக மாஜி எம்பி? பாதி வழியில் மடக்கிய ஆர்.பி.உதயகுமார் appeared first on Dinakaran.

Tags : AIADMK ,BJP ,RB Udayakumar ,Usilambatti ,ADMK ,Theni ,Lok Sabha ,Parthiban ,Bharatiya Janata Party ,minister ,Andipatti ,Dinakaran ,
× RELATED ஜெயலலிதா குறித்து கருத்து: அண்ணாமலைக்கு ஆர்.பி.உதயகுமார் கண்டனம்