×

திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம்

திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம் இன்று கோலாகலமாக நடந்தது. திருவாரூரில் வரலாற்று சிறப்புமிக்க தியாகராஜ சுவாமி கோயில் உள்ளது. இக்கோயிலில் மூலவர் வன்மீகநாதர், உற்சவர் தியாகராஜர். கோயிலின் ஆழித்தேர் ஆசியா கண்டத்திலேயே மிகப்பெரியது. ஆழித்தேர் மற்ற ஊர் தேர்களை போல் எண்பட்டை அறுகோணம், வட்ட வடிவமைப்பு போன்று இல்லாமல் பட்டை வடிவ அமைப்பை கொண்டது. 20 பட்டைகளை கொண்ட இந்த தேர் 4 அடுக்குகளை கொண்டது. கீழ்பகுதி 20 அடி உயரம், 2வது பகுதி 4அடி உயரம், 3வது பகுதி 3 அடி உயரம் கொண்டது. இறுதியாக 4வது பகுதியாக தேரின் மேடை பகுதி அமைக்கப்பட்டுள்ளது. இதில் தான் தேரோட்டத்தின் போது தியாகரஜசுவாமி அமர்ந்து வலம் வருவார். 30 அடி உயரம், 30 அடி அகலம் கொண்ட இந்த தேர் 4 ராட்சத இரும்பு சக்கரங்கள் உட்பட மொத்தம் 220 டன் எடை கொண்டது.
மூங்கில்கள், பனஞ்சப்பைகள் கொண்டு விமானம் வரை 48 அடி உயரத்திற்கு கட்டுமான பணி, அதன் மேல் 12 அடி உயரத்திற்கு சிகரம், அதற்கும் மேல் 6 அடி உயரத்தில் தேர் கலசம் என மொத்தம் 96 அடி உயரத்தில் தேர் அலங்கரிக்கப்பட்டிருக்கும்.

அதோடு 300 டன் எடையுடன் முன் பகுதியில் 33 அடி நீளமும், 11 அடி உயரமும் கொண்ட கம்பீரமான 4 மர குதிரைகள் கட்டப்பட்டு நகரின் 4 வீதிகளிலும் அசைந்தாடியபடி ஆழித்தேர் நகர்ந்து செல்லும் காட்சி கண்கொள்ளா காட்சியாகும்.
வருடந்தோறும் பங்குனி உத்திர திருவிழாவில் ஆழித்தேரோட்டம் நடைபெறும். இந்தாண்டு வரும் மார்ச் 21ம்தேதி ஆழித்தேரோட்டம் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு கடந்த மாதம் 25ம் தேதி பந்தக்கால் முகூர்த்தம் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிலையில் மஹாத்துவஜாரோகணம் எனப்படும் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம் நிகழ்ச்சி இன்று(27ம் தேதி) காலை 10.30 மணியளவில் நடைபெற்றது. இதனையொட்டி காலை 8.30 மணியளவில் விநாயகர், சுப்ரமணியர், சண்டிகேஸ்வரர் மற்றும் சந்திரசேகரர் சுவாமிகளின் வீதியுலா நடைபெற்றது. பின்னர் தியாகராஜ சுவாமிக்கும், இந்த சன்னதிக்கு எதிரே உள்ள பெரிய கொடிமரத்திற்கும் சிவாச்சாரியார்கள் மூலம் சிறப்பு பூஜை செய்யப்பட்டு கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.

 

The post திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் ஆழித்தேரோட்ட விழா கொடியேற்றம்: திரளான பக்தர்கள் தரிசனம் appeared first on Dinakaran.

Tags : Tiruvarur ,Thiagaraja ,Swamy ,Temple ,Azhitherot Ceremony Flag ,Thiagaraja Swami Temple ,Thyagaraja Swamy ,Vanmikanath ,Utsavar ,Thyagaraja ,Asia ,Azhitherot ,Tiruvarur Thyagaraja Swamy Temple ,
× RELATED தேர்தல் பணியில் ஈடுபடவுள்ள...