×

‘விற்பனைக்காக தாலி தயாரிக்கப்படும்’ ஏழுமலையான் கோயில் கதவுகளில் புதிதாக தங்கதகடுகள் பதிக்கப்படும்: அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் தேவஸ்தான அறங்காவலர் குழு கூட்டம் திருமலை அன்னமய்யா பவனில் செயல் அதிகாரி தர்மாரெட்டி தலைமையில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு பிறகு அறங்காவலர் குழு தலைவர் கருணாகர் ரெட்டி நிருபர்களுக்கு அளித்த பேட்டி: பக்தர்கள் நடந்துவரும் மலைப்பாதையில் வனவிலங்குகளினால் எவ்வித பாதிப்பு இல்லாமல் இருக்க மலைப்பாதையில் காளிகோபுரம், ஆஞ்சநேய சுவாமி சிலை, மொக்காலமெட்டு ஆகிய பகுதிகளில் தொடர்ந்து பக்தி பஜனை இசை நிகழ்ச்சி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏழுமலையான் கோயிலில் துவாரபாலகர்களான ஜெய-விஜயபேரி நுழைவு கதவுகளில் ரூ.1.69 கோடி செலவில் புதிதாக தங்கதகடுகள் பதிக்கப்படும். 4 கோடியில் 4, 5 மற்றும் 10 கிராமில் பக்தர்களுக்கு விற்பனை செய்யும் விதமாக தாலி தயாரிக்கப்பட உள்ளது. இனி, ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 24ம் தேதி திருப்பதி நகரத்தின் பிறந்தநாளை தேவஸ்தானம் ஏற்று நடத்தும். திருப்பதி அலிபிரியில் கோ பிரதட்சண மந்திர் அருகே சீனிவாச அனுகிரக யாகம் நடத்த ரூ.4.12 கோடி செலவில் நிரந்தர யாகசாலை கட்டப்பட உள்ளது. திருப்பதியில் உள்ள கோவிந்தராஜ சுவாமி கோயிலில் தேவி, பூதேவி உற்சவ மூர்த்தி சிலைகளுக்காக ரூ. 15 லட்சத்தில் தங்க கவசம் தயாரிக்கப்பட உள்ளது.

திருப்பதியில் ஹரே ராம ஹரே கிருஷ்ணா சாலையில் ரூ. 7.5 கோடியில் விளையாட்டு வளாகம் கட்டப்படும். ரூ.3.72 கோடி மதிப்பில் புதிய தலைமுறையினர் இந்து சம்பிரதாயம் மற்றும் கலாச்சாரம் ஆகியவற்றை அறியும் வகையில் 98 லட்சம் பகவத் கீதை புத்தகங்களை அச்சடிக்க உள்ளோம். இலங்கையில் ஏழுமலையான் கோயில் கட்டுவதற்கு பக்தர் ஒருவர் முன்வந்துள்ளார். அங்கு தேவஸ்தானத்தின் சார்பில் தேவையான பங்களிப்பு வழங்கப்படும்.
தேவஸ்தான நிர்வாகம், அதிகாரிகள், ஜீயர் சுவாமிகள், பிரசாத தயாரிப்பு ஊழியர்கள், அகோபில மடத்தின் ஜீயர்கள் ஆகியோர் குறித்து தொடர்ந்து உண்மைக்கு புறம்பான மற்றும் மத உணர்வை சீர்குலைக்கும் வகையில் கருத்து தெரிவித்துவரும் கவுரவ அர்ச்சகர் ரமண தீட்சிதரை பணியில் இருந்து நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

 

The post ‘விற்பனைக்காக தாலி தயாரிக்கப்படும்’ ஏழுமலையான் கோயில் கதவுகளில் புதிதாக தங்கதகடுகள் பதிக்கப்படும்: அறங்காவலர் குழு தலைவர் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tirumala ,Tirupati Eyumalayan Temple ,Devasthanam ,Tirumala Annamayya Bhawan ,Executive ,Dharmareddy ,Trustee ,Karunakar Reddy ,
× RELATED திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விஐபி...