×

பித்தத்தைத் தடுக்கும் பருப்புக்கீரை!

நன்றி குங்குமம் டாக்டர்

உயிர்தொழில்நுட்பத் துறை முனைவர் ஆர். சர்மிளா

வெயில்காலம் தொடங்கிவிட்டடது அன்றாட உணவில் கீரைகளை எடுத்துக் கொள்வது மிகச்சிறந்தது. ஏனெனில் கீரைகள் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்று. இதனால் உடல்வெப்பத்தை குறைத்து குளிர்ச்சியுடன் உடல் இயங்க உதவுகிறது. அந்தவகையில் பருப்புக்கீரை உடல் வெப்பத்தினை குறைத்து, நோய் எதிர்ப்புச் சக்தியினை மேம்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கிறது. பருப்புக்கீரை தரையிலிருந்து 40செ.மீ. உயரம் வரை வளரக்கூடிய தாவரமாகும். இது மிதமான வெப்பம் கொண்ட நாடுகளில் அதிகளவு காணப்படுகிறது.

இந்தக் கீரை ஆரம்ப காலத்தில் களைச்செடியாக பார்க்கப்பட்டுவந்தது. பின்னர், மூலிகைச் செடியாக சீனா, அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட நாடுகளில் பல ஆண்டுகளுக்கு முன்பாகவே பயன்படுத்தப்பட்டுவருகிறது. பருப்புக்கீரைக்கு சாரணைக்கீரை, சாரநெத்தி, சொக்காம்புல் கீரை, கொத்துக்கீரை, வட்டமொட்டுக்கீரை என பல்வேறு பெயர்கள் உண்டு. இக்கீரை போர்டுலகேசியா எனும் தாவரக் குடும்பத்தை சார்ந்தது. இக்குடும்பத்தில் 40க்கும் மேற்பட்ட வகைகள் உள்ளன. இவற்றில் பருப்புக்கீரையும் ஒன்றாகும்.
இதன் அறிவியல் பெயர் போர்டுலேகா ஒலிரேசியா ஆகும். இக்கீரை அமெரிக்கா, ஆஸ்திரேலியா, எகிப்து, சீனா, இலங்கை மற்றும் இந்தியா உள்ளிட்ட பல நாடுகளில் காணப்படுகிறது.

பருப்புக்கீரையில் காணப்படும் சத்துகள்:

பருப்புக்கீரையில் நார்ச்சத்து, இரும்புச்சத்து மற்றும் வைட்டமின்கள் ஏ,பி,சி மற்றும் ஈ உள்ளன.மேலும் கால்சியம், பாஸ்பரஸ், மெக்னீசியம் மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட தாதுக்களை இக்கீரை கொண்டுள்ளன. குறிப்பாக, ஒமேகா -3 எனும் பேட்டி ஆசிட் மூலக்கூறு இந்தக் கீரையில் காணப்படுவது இதன் சிறப்பாக கருதப்படுகிறது.

பருப்புக்கீரையில் காணப்படும் தாவர மூலக்கூறுகள்:

ஆல்கலாய்டுகள், பிளேவோனாய்டுகள் மற்றும் பாலிசாக்கரைடுகள், டெரிபினாய்டுகள், ஸ்டிரால் போன்ற மூலக்கூறுகளை இக்கீரை கொண்டுள்ளது.குறிப்பாக, பிளேவோனாய்டுகளான லூடியோலின், அபிஜெனின், ஜெனிஸ்டின், மைரிசிடின், கேம்ப்பெரால் காணப்படுகின்றன. மேலும் போர்ச்சிலகோனன் பி-டி, ஒலிரசின் ஏ,பி,சி,டி மற்றும்ஈ போன்ற மூலக்கூறுகளும் இத்தாவரத்தில் காணப்படுகின்றன.

பருப்புக்கீரையின் மருத்துவ பண்புகள்:

நார்ச்சத்து மிகுதியாக காணப்படுவதினால் இக்கீரை செரிமான சிக்கல் உள்ளிட்ட பல்வேறு வயிறு சம்பந்தமான நோய்களுக்கு ஓர் சிறந்த தீர்வாக விளங்குகிறது. குறிப்பாக, வயிற்றில் அமிலத்தன்மையை குறைத்து நெஞ்செரிச்சலை குறைக்கிறது.ஒமேகா -3 பேட்டி ஆசிட் இக்கீரையில் அதிகளவில் காணப்படுவதினால் மூளையினை சுறுசுறுப்பாக செயல்படுத்தவும், கெட்ட கொலஸ்ட்ராலை குறைத்து நல்ல கொலஸ்ட்ராலை மேம்படுத்தி இதயத்தை பாதுகாக்கவும் உதவுகிறது.

வைட்டமின் ஏ, நிறைந்து காணப்படுவதினால் கண்பார்வைக்கு உதவவும் இக்கீரை பயன்படுகிறது. வைட்டமின் சி நிறைந்து இருப்பதினால் சருமப் பொலிவினை மேம்படுத்தவும், தோல் சார்ந்த நோய்களை தடுக்கவும் இக்கீரை பயன்படுகிறது. குறிப்பாக, வெயில் காலங்களில் ஏற்படும் அக்கி, அம்மை போன்ற வைரஸ் நோய்களால் ஏற்படும் கொப்புளங்களை போக்க இக்கீரையை அரைத்து பயன்படுத்தலாம்.இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் ரத்தசோகை போன்ற பிரச்னைகளுக்கு தீர்வாக இக்கீரையை பயன்படுத்தலாம்.

பித்தம், தலைசுற்றல் பிரச்னையை தவிர்க்க இக்கீரை உதவுகிறது. மேலும் நீரிழிவு நோய், புற்றுநோய், கல்லீரல் சார்ந்த நோய்கள் என பல நோய்களை தடுக்கக்கூடியதாக இக்கீரை திகழ்வதாக ஆய்வுகள் கூறுகின்றன. இருப்பினும் பித்தப்பை கல், சிறுநீரகக் கல் சார்ந்த பிரச்னையுடைவர்கள் மருத்துவரின் ஆலோசனைக்கு பிறகு இந்தக் கீரையை எடுத்துக் கொள்வது நலம். பதார்த்த குணபாட நூலில் இக்கீரையின் பயன்களை கீழ்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.

பாடல்:

வள்ளைக் கீரைதனில் மாபெரும்பாலுண்டாகும் பிள்ளைப் பருப்பிலைக்கும் பித்தமறுங் – கொள்ளதெரியுங் கடல்சூழித் தேசத் தோருக்குக் கரிய குழலணங்கே காண்.

இக்கீரையை மிளகு, சின்ன வெங்காயம், சீரகம் மற்றும் பருப்புடன் சேர்த்து உணவில் சேர்த்துக்கொள்ள நலம் பயக்கும்.இக்கீரையை சாம்பார், மசியல், கூட்டு என பலவகைகளில் சமைக்கலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோருக்கும் ஏற்ற ஆரோக்கியமான கீரை பருப்புக்கீரை. இது ரத்தத்தை சுத்தப்படுத்தி நீண்ட கால நோய்களின் தாக்கத்தைக் குறைக்கக்கூடியது.பிரசவித்த பெண்களுக்கு தாய்ப்பால் சுரப்பை அதிகரிக்கச் செய்யும்.பருப்புக்கீரையுடன் பூண்டு சேர்த்து சமைத்து சாப்பிடுவது உடலில் உள்ள கெட்ட கொழுப்பை அகற்ற உதவும். அடிக்கடி பருப்புக்கீரையை உணவில் சேர்த்துக் கொள்பவர்களுக்கு உடல் சூடு தணியும். மலச்சிக்கல் நீங்கும்.

பருப்புக் கீரை மசியலுடன் நீராகாரம் சேர்த்து சாப்பிட்டு வர வெயில் காலத்தில் ஏற்படுகிற உடல்சூடு, நீர்க்கடுப்பு, வியர்க்குரு, வேனல்கட்டிகள் போன்றவை தவிர்க்கப்படும்.
கால்சியம் சத்து குறைவாக உள்ளவர்கள் பருப்புக்கீரையைப் பயன்படுத்தினால் எளிதில் கால்சியம் கிடைக்கும்.பருப்புக்கீரையில் அபரிமிதமான அளவில் வைட்டமின் ஏ, சி மற்றும் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின்கள் உள்ளன. இவை நுரையீரல் பாதிப்புகளிலிருந்து காக்கக்கூடியவை.இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் சீதபேதி நிற்கும். வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் போகும்.இத்தகைய பயனுள்ள கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்ள ஆரோக்கியம் மேம்படும்.

The post பித்தத்தைத் தடுக்கும் பருப்புக்கீரை! appeared first on Dinakaran.

Tags : Dr. ,Kungum ,R. Sharmila ,Dinakaran ,
× RELATED சர்க்கரையைக் கட்டுப்படுத்தும் சிறுகுறிஞ்சான் கீரை!