×

ஆக்கிரமிப்பை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி

*விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு

விழுப்புரம் : விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று வாராந்திர பொதுமக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெற்றது. மனு அளிப்பதற்காக ஏராளமான பொதுமக்கள் வந்து சென்றனர். அப்போது மனு அளிக்க வந்த பெண் ஒருவர் தன் மீது மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார், அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர். அதில் விழுப்புரம் அருகே நன்னாட்டாம்பாளையம் கிராமத்தை சேர்ந்த தனலட்சுமி என்பது தெரியவந்தது.

தொடர்ந்து தற்கொலை முயற்சிக்கான காரணங்கள் குறித்து அவரிடம் விசாரித்த போது அவர் கூறியதாவது, எங்களுக்கு பானாம்பட்டு பகுதியில் நிலம் உள்ளது. எங்கள் நிலத்தில் தெற்கு பகுதியில் ஆனாங்கூர் செல்லும் பாதை உள்ளது. அந்த பாதை முழுவதுமாக தனி நபர்கள் சிலர் ஆக்கிரமித்து சாலையில் செல்வதை தடுக்கின்றனர். இந்த பாதையே நன்னாட்டாம்பாளையத்துக்கு செல்லும் பிரதான சாலையாகும்.

விவசாயத்துக்கான இடு பொருட்களும் இந்த பாதை வழியாகவே கொண்டு செல்லப்படுகிறது. ஆக்கிரமிப்புகளை அகற்றி வழிவகைகளை ஏற்படுத்தி தர வேண்டும் என்று தெரிவித்தார். தொடர்ந்து போலீசார் இதுபோன்ற தற்கொலை முயற்சியில் ஈடுபடக்கூடாது என்றும், ஆட்சியரிடம் மனு அளிக்குமாறும் அறிவுறுத்தினர். இதையடுத்து அவர் கோரிக்கை தொடர்பாக மனு அளித்து விட்டு சென்றார்.

The post ஆக்கிரமிப்பை கண்டித்து பெண் தற்கொலை முயற்சி appeared first on Dinakaran.

Tags : Villupuram ,
× RELATED கோடை காலம் துவங்கிய நிலையில்...