×

₹1 கோடியில் கட்டப்பட்ட உலர் வசதி கிடங்கு மானாமதுரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும்

திருத்துறைப்பூண்டி, பிப்.27: திருவாரூர் மாவட்ட ரயில் உபயோகிப்பாளர்கள் சங்க மாவட்ட தலைவர் வழக்கறிஞர் நாகராஜன், மாவட்டச் செயலாளர் எடையூர் மணிமாறன் ஆகியோர் தென்னக ரயில்வே பொது மேலாளர், திருச்சி கோட்ட ரயில்வே மேலாளர் ஆகியோருக்கு அனுப்பியுள்ள கோரிக்கை மனுவில் தெரிவித்துள்ளதாவது.

திருவாரூர் – காரைக்குடி அகலரயில் பாதை பணி ரூபாய் 1500 கோடி செலவில் 2018 மற்றும் 2019 ஆம் ஆண்டில் நிறைவு செய்யப்பட்டது. ஆனால் ஐந்து வருடங்கள் ஆகியும் திருத்துறைப்பூண்டியிலிருந்து சென்னைக்கு நேரடியாக நிரந்தர இரவு நேர ரயில் போக்குவரத்து ஏற்படுத்தப்படவில்லை.

120 வருடங்கள் பாரம்பரியமான போட் மெயிலில் இருந்து இரண்டு இரயில் பெட்டிகள் மயிலாடுதுறையில் பிரிக்கப்பட்டு மயிலாடுதுறை காரைக்குடி பாஸ்ட் பாசஞ்சரில் இணைக்கப்பட்டு திருவாரூர் பட்டுக்கோட்டை காரைக்குடி வரை இயக்கப்பட்டது. 1980ம் ஆண்டு முதல் மனோரா எக்ஸ்பிரஸ் என்று அழைக்கப்பட்ட ரயில் சென்னை எழும்பூரிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக காரைக்குடிக்கு இயக்கப்பட்டது. பிறகு மனோரா எக்ஸ்பிரஸ் கம்பன் எக்ஸ்பிரஸ் ரயிலாக பெயர் மாற்றம் செய்யப்பட்டு இயக்கப்பட்டது. திருவாரூர் காரைக்குடி அகல ரயில் பாதை நடைபெறுவதை காரணம் காட்டி இந்த தடத்தில் ஓடிக்கொண்டிருந்த கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்காலுக்கு மாற்றப்பட்டு காரைக்காலில் இருந்து திருவாரூர் வழியாக சென்னைக்கு தினமும் இயக்கப்பட்டு வருகிறது.

அகல ரயில் பாதைக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்ட கம்பன் எக்ஸ்பிரஸ் ரயில் காரைக்குடியிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக மீண்டும் இயக்கப்படவில்லை என்பது பெரிய குறைபாடாக உள்ளது. திருத்துறைப்பூண்டியில் இருந்து திருவாரூர் வழியாக இரவு நேரத்தில் சென்னை செல்வதற்கு நேரடியான நிரந்தர ரயில் போக்குவரத்து இல்லை. இதனால் அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் கர்ப்பிணி பெண்களும், முதியோர்களும், மாற்றுத்திறனாளிகளும் சென்னைக்கு பயணம் செய்து வருகின்றனர். பேருந்துகளில் கழிவறை போன்ற வசதிகள் இல்லாததால் முதியோர்கள், மாற்றுத்திறனாளிகள், மற்றும் கர்ப்பிணி பெண்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

இரவு நேர எக்ஸ்பிரஸ் ரயில்களில் மிகக் குறைந்த கட்டணமே ரயில்வே துறையால் படுக்கை வசதி கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.
திருத்துறைப்பூண்டி வேதாரண்யம் முத்துப்பேட்டை பட்டுக்கோட்டை பேராவூரணி அறந்தாங்கி காரைக்குடி போன்ற பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களும், ஏழை விவசாய கூலித் தொழிலாளர்களும், மீனவர்களும் குறைந்த பயணகட்டணத்தில் வசதியுடன் கூடிய இரவு நேர ரயில் பயணத்தை அதிகம் விரும்புகின்றனர்.

மூத்தக்குடி மக்கள், நோயாளிகள் உயர் மருத்துவ சிகிச்சை பெற அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளுக்கு ரயில் மூலம் சென்னை செல்ல வேண்டி உள்ளது. மாணவர் மற்றும் மாணவியர் மருத்துவ படிப்பு மற்றும் பொறியியல் படிப்புக்காக சென்னை செல்ல வேண்டி உள்ளது. வியாபாரிகள் புடவை வேஷ்டிகள் மற்றும் மொத்த விற்பனை கடைகளில் மளிகை பொருட்கள் வாங்கி விற்பதற்காக இரவு நேர ரயில் பயணமே உகந்ததாக இருக்கிறது என்று கருத்து தெரிவித்துள்ளனர்.

எனவே, ஏற்கனவே ஓடிக் கொண்டிருந்த கம்பன் விரைவு இரயில் போன்ற இரவு நேர நிரந்தர விரைவு ரயிலை தினசரி மானாமதுரையில் இருந்து சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பேராவூரணி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, விழுப்புரம் வழியாக சென்னை எழும்பூருக்கு இயக்க வேண்டும் என்று அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

The post ₹1 கோடியில் கட்டப்பட்ட உலர் வசதி கிடங்கு மானாமதுரையிலிருந்து திருத்துறைப்பூண்டி வழியாக சென்னைக்கு எக்ஸ்பிரஸ் ரயில் இயக்க வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Manamadura ,Chennai ,Thiruthurapundi ,Thiruvarapuondi ,Thiruvarur District Rail Users Association District ,President ,Advocate Nagarajan ,District Secretary ,Edaiur Manimaran ,General Manager ,Southern Railway ,Manager ,Trichy Kota Railway ,Thiruvarur ,
× RELATED தங்க நகை முதல் காய்கறி வரை எடை குறைவாக...