×

குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றம் ₹53 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை நடவடிக்கை

பூந்தமல்லி: மதுரவாயல் அருகே குளத்தை ஆக்கிரமித்து கட்டப்பட்ட குடியிருப்புகள் மற்றும் வணிக கட்டிடங்களை வருவாய் துறை அதிகாரிகள் இடித்து அகற்றினர். மதுரவாயல் அடுத்த அடையாளப்பட்டு ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் அரசுக்கு சொந்தமான குளம் இருந்தது. இந்த குளத்தை சிலர் மண் கொட்டி மூடி, வணிக பயன்பாடு மற்றும் வீடுகள் கட்டி பயன்படுத்தி வந்தனர். இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, அரசு நிலத்தை மீட்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட வருவாய் அலுவலரிடம் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.

அதன்பேரில், பூந்தமல்லி வட்டாட்சியர் கோவிந்தராஜ் தலைமையில், மண்டல துணை வட்டாட்சியர் யுகேந்தர், வருவாய் ஆய்வாளர் ஜெயசுதா, அடையாளப்பட்டு ஊராட்சி அலுவலர் கிரி முன்னிலையில் வருவாய்த்துறையினர் நேற்று மேற்கண்ட பகுதியில் ஆய்வு நடத்தினர். அப்போது, குளத்தை ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டப்பட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து, பொக்லைன இயந்திரம் மூலம் ஆக்கிரமிப்பு கட்டிடங்களை இடித்து, ₹53 கோடி மதிப்பிலான 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை மீட்டனர். அசம்பாவிதங்களை தவிர்க்க, மதுரவாயல் காவல் உதவி ஆணையர் சுப்பிரமணி, ஆய்வாளர் பூபதிராஜா தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறை அதிகாரி செல்வன் தலைமையில் தீயணைப்பு துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

The post குளத்தை ஆக்கிரமித்த கட்டிடங்கள் அகற்றம் ₹53 கோடி மதிப்பு அரசு நிலம் மீட்பு: வருவாய்த்துறை நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : POONTHAMALLI ,Maduravayal ,Panchayat ,Revenue ,Dinakaran ,
× RELATED பூந்தமல்லி அருகே தேர்தல் பறக்கும் படையால் ரூ.2.29 கோடி பணம் பறிமுதல்