×

இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது திருவண்ணாமலை பியூட்டி பார்லரில்

திருவண்ணாமலை, பிப். 27: திருவண்ணாமலையில் இன்ஸ்டாகிராம் மூலம் பழகிய பெண் திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரமடைந்து இளம் பெண்ணை கத்தியால் குத்தி விட்டு தலைமறைவான வாலிபரை நேற்று போலீசார் கைது செய்தனர். செங்கம் அடுத்த முறையாறு கிராமத்தைச் சேர்ந்தவர் ராமசாமி மகள் சுதா (34). கணவரை பிரிந்து 9 வயது குழந்தையுடன் திருவண்ணாமலையில் தங்கி, சின்ன கடை தெருவில் உள்ள ஒரு பியூட்டி பார்லரில் வேலை செய்து வந்தார். இந்நிலையில், இன்ஸ்டாகிராம் மூலம் மோனிக் ராஜா என்ற வாலிபருடன் இவருக்கு அறிமுகம் ஏற்பட்டது. இருவரும் கடந்த ஒரு ஆண்டாக செல்போனில் நட்புடன் பேசி பழகி வந்துள்ளனர். திருமணம் செய்து கொள்ள வற்புறுத்தியதால், மோனிக் ராஜாவினுடைய செல்போன் எண்ணை சுதா பிளாக் செய்து விட்டதாக கூறப்படுகிறது. எனவே, பலமுறை சுதாவை தொடர்பு கொள்ள முயன்ற மோனிக்ராஜா ஏமாற்றம் அடைந்துள்ளார். ஆத்திரமடைந்த மோனிக்ராஜா கடந்த 18ம் தேதி திருவண்ணாமலைக்கு வந்து சுதா பணிபுரியும் பியூட்டி பார்லருக்கு சென்று சுதாவை கத்தியால் குத்தி விட்டு தப்பி தலைமறைவானார். படுகாயம் அடைந்த சுதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தலைமறைவான வாலிபரை தனிப்படை போலீசார் தேடி வந்தனர். இந்நிலையில், சென்னையில் தலைமறைவாக இருந்த கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தாலுகா பெருநகர் கிராமத்தை சேர்ந்த மோனிக் ராஜா(28)வை தனிப்படை போலீசார் நேற்று இரவு கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

The post இளம்பெண்ணை கத்தியால் குத்திய வாலிபர் கைது திருவண்ணாமலை பியூட்டி பார்லரில் appeared first on Dinakaran.

Tags : Thiruvannamalai ,parlor ,Ramaswamy ,Sengam ,Matyaru ,Tiruvannamalai ,
× RELATED குடிநீர் பாட்டிலில் காலாவதி தேதி...