×

பெரிய, சிறிய வெங்காயம் விலை குறைந்தது

 

ஊட்டி, பிப்.27: பெரிய மற்றும் சிறிய வெங்காயத்தின் விலை குறைந்துள்ளதால் இல்லத்தரசிகள், ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.  நீலகிரி மாவட்டத்தில் தேயிலை மற்றும் மலை காய்கறி விவசாயம் மேற்கொள்ளப்படுகிறது. இங்கு கேரட், பீட்ரூட், உருளைக்கிழங்கு, முட்டைகோஸ், பட்டாணி, பீன்ஸ் போன்ற காய்கறிகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. சிறிய மற்றும் பெரிய வெங்காயம் உட்பட பல்வேறு சமவெளிப் பகுதிகளில் விளையும் காய்கறிகள் வெளி மாவட்டங்களில் இருந்தே கொண்டு வந்து விற்பனை செய்யப்படுகிறது.

இதனால், பொதுவாக வெங்காயம் உட்பட சில காய்கறிகளின் விலை சமவெளிப் பகுதிகளை காட்டிலும் சற்று அதிகமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். குறிப்பாக சிறிய மற்றும் பெரிய வெங்காயம் வெளி மாவட்டங்களில் இருந்து வரும் நிலையில், இவைகளின் விலை எப்போதும் சற்று உயர்ந்தே காணப்படும். கடந்த மாதம் வரை நீலகிரியில் சிறிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.60 முதல் 80 வரை விற்பனை செய்யப்பட்டது. அதேபோல், பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.50 வரை விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதனால், பொதுமக்கள் கடும் அவதிக்குளாகினர். ஆனால், கடந்த ஒரு மாதமாக வெங்காயத்தின் விலை படிப்படியாக குறைய துவங்கியது. தற்போது ஊட்டியில் பெரிய வெங்காயம் கிலோ ஒன்று ரூ.25 முதல் 30 வரையில் விற்பனை செய்யப்படுகிறது. பெரும்பாலான கடைகளில் பெரிய வெங்காயம் 4 கிலோ ரூ.100க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், சிறிய வெங்காயமும் விலை குறைந்த நிலையில், தற்போது கிலோ ஒன்று ரூ.30 முதல் 35-க்கும், சில கடைகளில் 3 கிலோ ரூ.100க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

இரு வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ள நிலையில் தற்போது இல்லத்தரசிகள் மற்றும் ஓட்டல் உரிமையாளர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
இதுகுறித்து வியாபாரிகள் கூறுகையில், ‘‘பொதுவாக மழைக்காலங்களில் தான் வெங்காயத்திற்கு பாதிப்பு ஏற்படும். அச்சமயங்களில் விலை உயர்ந்து காணப்படும். தற்போது அனைத்து மாநிலங்களிலும் வெயில் வாட்டி வருகிறது. இதனால், வெங்காயத்தின் விலை குறைந்துள்ளது. இது மேலும், குறைய வாய்ப்புள்ளது’’ என்றனர்.

The post பெரிய, சிறிய வெங்காயம் விலை குறைந்தது appeared first on Dinakaran.

Tags : Nilgiris district ,
× RELATED கோடை சீசன் எதிரொலி மலை ரயிலில் பயணிக்க சுற்றுலா பயணிகள் ஆர்வம்