×

குரல் வழியில் எப்ஐஆர் தகவல் அறிய வசதி

 

கோவை, பிப். 27: கோவை உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் தனியார் நிறுவனத்தினர் உதவியுடன், பல்வேறு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டது. புகார் அளிக்க வரும் மாற்றுத்திறனாளிகள், முதியவர்கள் மற்றும் கர்ப்பிணி ஆகியோருக்கு உதவிடும் வகையில் மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் சக்கர நாற்காலிகள், நாற்காலிகள் சென்று வர சரிவு பாதை, காது கேளாதோர் மற்றும் வாய் பேச முடியாதவர்களுக்கான சைகை மொழி வசதி செய்யப்பட்டிருந்தது.

படிக்க முடியாதவர்கள் தங்களது எப்ஐஆர் விவரங்களை தெரிந்து கொள்ள குரல் வழி தகவல் அறியும் வசதியும் செய்யப்பட்டுள்ளது. புகார் தந்து எப்ஐஆர் விவரங்களை குரல் பதிவு மூலமாக பெற்று அந்த தகவல்களை படிக்க முடியாதவர்கள் பயன்படுத்தும் வசதி முதல் முறையாக கோவை போலீஸ் ஸ்டேஷனில் அறிமுகம் செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது. தனியார் நிறுவனத்தின் மூலமாக போலீஸ் துறையில் பல்வேறு உதவிகள் பெறப்பட்டு வருகிறது.

உக்கடம் போலீஸ் ஸ்டேஷனில் மாற்று திறனாளிகளுக்கான வசதிகளை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் நேற்று துவக்கி வைத்தார். மேலும் போலீசில் புகார் அளிக்க வந்தவர்கள், மாற்றுத்திறனாளிகளிடம் குறைகளை கேட்டார். கோவை நகரில் பொதுமக்களின் பாதுகாப்பு வசதிக்காக சாலையை நோக்கி கண்காணிக்கும் வகையில் 2 ஆயிரம் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் பொதுமக்கள் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க முன் வர வேண்டும் என போலீசார் தெரிவித்தனர்.

The post குரல் வழியில் எப்ஐஆர் தகவல் அறிய வசதி appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Coimbatore Ukkadam Police Station ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...