×

நினைவிடத்துக்கு வாருங்கள் கலைஞர் வாழ்ந்த வாழ்க்கையை காணலாம்; கலைஞரோடு வாழலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: கலைஞர் என்றால் போராட்டம், இதுதானே அவரது வாழ்வும் வரலாறும் நானிலத்துக்குச் சொல்கிறது. போராட்டம் மட்டுமல்ல, கலைஞர் என்றால் வெற்றி என்பதன் அடையாளம் இந்த நினைவிடம் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் கூறினார். கலைஞர் நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின் உரை: கலைஞருக்கு வங்கக் கடலோரம் வாஞ்சை மிகு தென்றலின் தாலாட்டில் அவரது உயிரனைய அண்ணனுக்குப் பக்கத்தில் நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது. பேரறிஞர் அண்ணாவின் நினைவிடம் மறு உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. முத்தமிழறிஞர் கலைஞரின் நினைவிடம் புது உருவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இந்த அண்ணனும் தம்பியும் தானே தமிழ்நாட்டுக் குடும்பங்களின் தலைப்பிள்ளைகள். இன்று நாம் பார்க்கும் தமிழ்நாட்டை உருவாக்கியவர்கள். நம்மையெல்லாம் இன்றும் என்றும் இயக்கும் தலைவர் கலைஞருக்கு இதோ உங்களுக்கு சென்னைக் கடலின் கரையில் கண்ணைக் கவரும் கம்பீர நினைவிடம் அமைக்கப்பட்டுள்ளது.

14 வயதில் தமிழ்க் கொடி ஏந்தி அதை 95 வயது வரையில் விடாமல் பிடித்திருந்த கனத்த கரங்களுக்குச் சொந்தக்காரரான தலைவர் கலைஞரின் முழு வாழ்க்கையையும் இந்த நினைவிடத்தைச் சுற்றிப் பார்க்கும்போது மொத்தமாய் தெரிந்து கொள்ளலாம். தன் கையில் இருந்த செம்மொழி எழுதுகோலைச் செங்கோலாக மாற்றி அவர் உருவாக்கிக் கொடுத்த திட்டங்கள்தான், இன்று தமிழ்நாட்டின் நான்கு திசைகளிலும், எட்டுக் கோணத்திலும், எதிரில் தென்படுவது அத்தனையுமாகும். மக்கள் போராடிப் பெற்ற விடுதலை நாளன்று கொடியேற்றும் உரிமை மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநிலத்து முதலமைச்சர்களுக்குத்தான் உண்டு என்ற உரிமையை, இந்தியாவின் அனைத்து மாநில முதலமைச்சர்களுக்கும் பெற்றுத் தந்த அகில இந்தியத் தலைவர், கோபாலபுரத்தில் இருந்து அவர் கோலோச்சிய தமிழ் அரசவைக்கு வந்து செல்லாத அகில இந்தியத் தலைவர்களே இல்லை.

கலைஞர், கலையானவர், அரசியலுமானவர், இரண்டாலும் இயங்கியவர் இரண்டு உலகங்களையும் இயக்கியவர். 5 முறை முதலமைச்சராக இருந்து அவர் போட்ட கையெழுத்தின் காரணமாகத்தான் தமிழ்நாட்டின் முன்னெழுத்தாக ‘மு.க.’ என்ற இரண்டெழுத்து உருவானது. திருவாரூரில் புறப்பட்ட கலைஞர், தமிழ்நாட்டையே திருவூராக ஆக்கினார். தமிழ்நாடே ஆரூரார் உருவாக்கிய நாடாகக் காட்சி அளிக்கிறது. கலைஞர் போகாத ஊரில்லை, பேசாத நகரில்லை. தமிழ்மண் பயனுற வாழ்ந்த கலைஞரை எல்லாத் திட்டங்களும் நினைவூட்டியபடியே, அவர் நினைவைப் போற்றும் சின்னங்களாக வானுயர அமைந்து வாழ்த்துகின்றன. தமிழ்நாட்டுப் பெருந்தலைவர்களுக்கு எல்லாம் நினைவு மண்டபங்கள் எழுப்பிய கலைஞருக்கு, ஆறடி மண் கேட்டுப் போராட வேண்டியதாக இருந்தது.

கலைஞர் என்றால் போராட்டம், இதுதானே அவரது வாழ்வும் வரலாறும் நானிலத்துக்குச் சொல்கிறது. போராட்டம் மட்டுமல்ல, கலைஞர் என்றால் வெற்றி என்பதன் அடையாளம் இந்த நினைவிடம் பொதுப்பணித் துறை அமைச்சரும் – எதிலும் வல்லவர் என்று தலைவரால் போற்றப்பட்டவருமான எ.வ.வேலு அர்ப்பணிப்பு உணர்வால் மிகச்சீரிய முறையில் கட்டி எழுப்பப்பட்டுள்ளது ‘கலைஞரின் உலகம், கலைஞரின் உலகம்’ என்ற இந்த நினைவிடம் இந்தியாவின் இரண்டாவது பெரிய கடற்கரையில் இருக்கும் முதல் அதிசயம் கலைஞர் எனும் உலகத்தால் நாம் சுற்றுகிறோம். தமிழ்நாடு சுற்றுகிறது, கலைஞர் உலகு ஆள்வார், உலகம் கலைஞர் பெயரை உச்சரித்துக் கொண்டே இருக்கும். கலைஞர் நினைவிடத்துக்குள் வாருங்கள். கலைஞர் வாழ்ந்த வாழ்க்கையைக் காணலாம். கலைஞரோடு வாழலாம், வாழலாம், வாழலாம். இவ்வாறு முதல்வர் மு.க.ஸ்டாலின் உரையில் கூறியுள்ளார்.

The post நினைவிடத்துக்கு வாருங்கள் கலைஞர் வாழ்ந்த வாழ்க்கையை காணலாம்; கலைஞரோடு வாழலாம்: முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,M. K. Stalin ,CHENNAI ,Nanilam ,Tamil Nadu ,M.K.Stalin ,M.K.Stal ,
× RELATED வாக்குப்பதிவு தொடங்கி நிறைவடையும்...