×

தொலைக்காட்சி உரிமம் தருவதாக ரூ.1.46 கோடி மோசடி திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது

சென்னை: காதல் கோட்டை, வெற்றிக்கொடி கட்டு உள்ளிட்ட பல திரைப்படங்களை தயாரித்தவர் சிவசக்தி பாண்டியன். இவர் கடந்த 2010ல் நடிகர் ஜெய் மற்றும் நடிகை பூர்ணாவை வைத்து அர்ஜுனன் காதலி என்ற திரைப்படத்தை தயாரித்தார். இந்த திரைப்படத்தின் உரிமத்தை தனியார் தொலைக்காட்சிக்கு வழங்குவதாக கூறி முன்பணமாக ரூ.50 லட்சம் சிவசக்தி பாண்டியன் பெற்றுள்ளார். பின்னர் தொலைக்காட்சி உரிமத்தை சிவசக்தி பாண்டியன் வழங்காமல் காலம் தாழ்த்தி வந்ததால் கொடுத்த பணத்தை தனியார் டிவி நிறுவனம் திருப்பி கேட்டுள்ளது. வட்டியுடன் சேர்த்து சிவசக்தி பாண்டியன் செக் ஒன்றை நிறுவனத்திற்கு கொடுக்க, அதை வங்கியில் செலுத்திய போது பவுன்ஸ் ஆகியதால் சம்பந்தப்பட்ட நிறுவனம் 2012ல் சிவசக்தி பாண்டியன் மீது மோசடி வழக்கை சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் தொடர்ந்தது.

இந்த வழக்கு கடந்த 10 வருடமாக சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில் வட்டியுடன் சேர்த்து ரூ.1 கோடியே 46 லட்சம் நிறுவனத்திற்கு தர வேண்டிய சூழலில், முதற்கட்டமாக 60 நாட்களுக்குள் 30 சதவீதம் தொகையை நீதிமன்றத்தில் வழங்க வேண்டும், இல்லையென்றால் 11 மாதம் சிறை தண்டனை வழங்கப்படும் என கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் சிவசக்தி பாண்டியன் தொகையை செலுத்தாததால் கைது நடவடிக்கையை மேற்கொள்ள பிடிவாரன்ட் பிறப்பித்தது. இதையடுத்து நுங்கம்பாக்கம் போலீசார் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியனை அவரது இல்லத்தில் நேற்று கைது செய்து சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். செக் மோசடி வழக்கில் தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைதானது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post தொலைக்காட்சி உரிமம் தருவதாக ரூ.1.46 கோடி மோசடி திரைப்பட தயாரிப்பாளர் சிவசக்தி பாண்டியன் கைது appeared first on Dinakaran.

Tags : Sivashakti Pandian ,CHENNAI ,Jai ,Poorna ,
× RELATED மழை நீரை சேகரிப்பதற்காக நாட்டு...