×

அம்ரித் பாரத் திட்டம் மூலம் தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தல்: பிரதமர் மோடி அடிக்கல்; 2 ஆண்டில் பணிகள் முடியும்

சென்னை: அம்ரித் பாரத் திட்டம் மூலம், தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்த பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். “அம்ரித் பாரத் நிலையம்” எனும் திட்டத்தை பிரதமர் மோடி கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தினார். இத்திட்டத்தில் தேர்வான 1,318 ரயில் நிலையங்களில், முதற்கட்டமாக 508 ரயில் நிலையங்களை உலக தரத்தில் மேம்படுத்துவதற்கான பணிகளை பிரதமர் மோடி கடந்த ஆண்டு தொடங்கி வைத்தார். அதில் தமிழ்நாட்டைச் சேர்ந்த சில ரயில் நிலையங்களும் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில், “அம்ரித் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாம் கட்டமாக 554 ரயில் நிலையங்களுக்கான மேம்பாட்டுப் பணிகளை காணொலி வாயிலாக பிரதமர் மோடி நேற்று தொடங்கி வைத்தார்.

இதற்காக தெற்கு ரயில்வே மண்டலம் முழுவதும் 237 இடங்கள்/ரயில் நிலையங்களில் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த விழாவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள், பல்வேறு துறைகளைச் சேர்ந்த பிரபலங்கள், புகழ்பெற்ற விளையாட்டு வீரர்கள், சுதந்திரப் போராட்ட வீரர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள், அரசு அலுவலர்கள், பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் கலந்து கொண்டனர். தமிழகத்தில், சென்னை செயின்ட் தாமஸ் மவுண்ட் ரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார் . மேட்டுப்பாளையம் ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில், தகவல் மற்றும் ஒலிபரப்பு, கால்நடை பராமரிப்பு, பால்வளம் மற்றும் மீன்வளத்துறை இணை அமைச்சர் எல்.முருகன் கலந்துகொண்டார். “அம்ரித் பாரத் நிலையம்” திட்டத்தின் இரண்டாவது கட்டத்தில், தமிழ்நாட்டைச் சேர்ந்த 34 ரயில் நிலையங்களில் மேம்பாட்டுப் பணிகள் நடைபெற உள்ளன.

அதன்படி, தமிழகத்தின் சென்னை கோட்டத்தில் 7 ரயில் நிலையங்கள், சேலம் கோட்டத்தில் 8 ரயில் நிலையங்கள், திருச்சி கோட்டத்தில் 4 ரயில் நிலையங்கள், மதுரை கோட்டத்தில் 13 ரயில் நிலையங்கள், கேரளத்தின் பாலக்காடு கோட்டத்தில் 9 ரயில் நிலையங்கள், திருவனந்தபுரம் கோட்டத்தில் 3 ரயில் நிலையங்களும் மேம்படுத்தப்பட உள்ளன. தமிழகத்தில் தெற்கு ரயில்வே சார்பில் 32 ரயில் நிலையங்கள், தென் மேற்கு ரயில்வே சாா்பில் தருமபுரி, ஓசூர் ஆகிய இரு ரயில் நிலையங்கள் என 34 ரயில் நிலையங்கள் மேம்படுத்தப்பட உள்ளன. இதில் திருநெல்வேலி ரயில் நிலையம் ரூ.270 கோடியிலும், கும்பகோணம் ரயில் நிலையம் ரூ.118 கோடியிலும், திருச்சூர் ரயில் நிலையம் ரூ.384.81 கோடியிலும், செங்கனூா் ரயில் நிலையம் ரூ.205 கோடியிலும் ஒரே கட்டமாக மேம்படுத்தப்படவுள்ளன. மற்ற ரயில் நிலையங்களை பல்வேறு கட்டங்களாக மேம்படுத்த திட்டமிடப்பட்டு உள்ளன. இந்த பணிகள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் முடிக்கப்படும்.

அடிக்கல் நாட்டப்பட்ட ரயில் நிலையங்கள்: தெற்கு ரயில்வேயில் சென்னை கடற்கரை, சென்னை பூங்கா, அம்பத்தூர், செயின்ட் தாமஸ் மவுண்ட், கிண்டி, மாம்பலம், சூளுர்பேட்டை, சின்னசேலம், நாமக்கல், திருப்பத்தூர், திருவண்ணாமலை, திருவாருர், பழனி, அம்பாசமுத்திரம், ராமநாதபுரம், ராஜப்பாளையம், பரமக்குடி, பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், கோயம்புத்தூர் வடக்கு, ஈரோடு, மொரப்பூர், திண்டுக்கல் தூத்துக்குடி, திருச்செந்தூர், மயிலாடுதுறை, கும்பகோணம், விருத்தாசலம், செங்கனூர், திருச்சூர், குருவாயூர், ஓணப்பாலம், நிலம்பூர் சாலை மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 44 ரயில் நிலையங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

இங்கு, சுற்றுப்புறங்களை தூய்மையாக வைத்திருப்பது, இலவச வைபை, காத்திருப்பு அறை மற்றும் லிப்ட் வசதிகள், வாகன நிறுத்துமிடம் போன்றவை ஏற்படுத்தப்பட உள்ளன. மேலும்,லெவல் கிராசிங் கேட்களுக்குப் பதிலாக பாலம் அமைக்கப்படுகிறது. இந்தப் பாலம் மற்றும் கீழ்ப்பாதைகள் சாலையைப் பயன்படுத்துபவர்களின் பாதுகாப்பை மேம்படுத்தும், சாலையில் வாகனங்கள் நீண்ட நேரம் சிக்னலுக்காக காத்திருப்பதைக் குறைக்கும் .இதன் மூலம் ரயிலின் வேகத்தை மேம்படுத்துதல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படவுள்ளன.இதுதவிர தமிழகத்தில் 4 ரயில்வே மேம்பாலத்தையும், 114 சுரங்க ரயில் பாதையையும் மோடி திறந்து வைத்தார். அமிர்த் பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் 77 ரயில் நிலையங்கள் ரூ.4100 கோடி செலவில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அடிக்கல் நாட்டப்பட்ட 18 ரயில் நிலையங்களில் முதல் கட்டப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

The post அம்ரித் பாரத் திட்டம் மூலம் தெற்கு ரயில்வேயில் 44 ரயில் நிலையங்கள் உலக தரத்தில் மேம்படுத்தல்: பிரதமர் மோடி அடிக்கல்; 2 ஆண்டில் பணிகள் முடியும் appeared first on Dinakaran.

Tags : Southern Railway ,PM Modi ,CHENNAI ,Modi ,Amrit Bharat ,Station ,Amrit ,Dinakaran ,
× RELATED கூட்ட நெரிசலைக் குறைக்கும் விதமாக...