×

திருவள்ளூரில் 1.5 கிலோ கஞ்சா போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது; 3 செல்போன், கத்தி சிக்கியது

திருவள்ளூர்: திருவள்ளூரில் 1.5 கிலோ கஞ்சா மற்றும் போதை பொருட்கள் விற்றது தொடர்பாக 3 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து 3 செல்போன், கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. திருவள்ளூர் மாவட்டத்தில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனையை கட்டுப்படுத்த மாவட்ட எஸ்பி சீனிவாச பெருமாள் உத்தரவின் பேரில் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே நேரத்தில் கஞ்சா, போதை மாத்திரைகள் விற்பனை குறித்து மாவட்ட எஸ்பிக்கு தகவல் தெரிவிக்குமாறு 100க்கும் மேற்பட்ட இடங்களில் விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல்வேறு பகுதிகளில் இருந்து புகார்கள் வந்தது. இதையடுத்து தீவிர சோதனை நடத்தி நடவடிக்கை எடுக்கும்படி எஸ்பி உத்தரவிட்டார். அதன்படி போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் நேற்று திருவள்ளூர் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் மற்றும் போலீசார் பெரியகுப்பம் ரயில்வே மேம்பாலம் அருகே சந்தேகப்படும்படியாக நின்றிருந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர். அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால் காவல் நிலையத்துக்கு கொண்டு வந்து விசாரித்தனர். அவர்கள் திருவள்ளூர் ஜவஹர் நகர் ராகவேந்திரா தெருவை சேர்ந்த அரவிந்தன் (31), பூங்கா நகர், சக்தி தெருவை சேர்ந்த அபினேஷ் (21), சேலை காலனி பகுதியை சேர்ந்த பிராட்ரிக் சாமுவேல் (23) என்பதும் கஞ்சா மற்றும் போதை மாத்திரைகளை விற்பனை செய்வதும் தெரியவந்தது.

இதையடுத்து 3 பேரையும் கைது செய்து ஜவஹர் நகரில் உள்ள அரவிந்தன் வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 102 போதை மாத்திரைகள், 1.5 கிலோ கஞ்சா, 3 செல்போன், கத்தி, சிறிய எடைமெஷின், பிளாஸ்டிக் கவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பின்னர் அவற்றை திருவள்ளூர் மதுவிலக்கு அமலாக்க பிரிவு போலீசாரிடம் ஒப்படைத்தனர். பின்னர், அரவிந்தன், அபினேஷ், பிராட்ரிக் சாமுவேல் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

The post திருவள்ளூரில் 1.5 கிலோ கஞ்சா போதை மாத்திரைகள் பறிமுதல்: 3 பேர் கைது; 3 செல்போன், கத்தி சிக்கியது appeared first on Dinakaran.

Tags : Tiruvallur ,
× RELATED திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூர் அருகே...