×

பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பதாக அறிவிப்பு காஞ்சியில் நிலம் எடுப்பு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூர் சுற்று வட்டாரத்தில் 20 கிராமங்களை உள்ளடக்கி சுமார் 5,746 ஏக்கர் பரப்பளவில் பரந்தூர் பசுமைவெளி விமான நிலையம் அமைக்கும் பணிகளை ஒன்றிய, மாநில அரசுகள் தொடங்கியுள்ளது. இந்நிலையில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 581வது நாளாக போராட்டங்களை கிராம மக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்கிடையில்தொழில் முதலீட்டு கழகம், நாளிதழ்களில் நிலம் கையகப்படுத்தப்பட உள்ள சர்வே எண்கள் மற்றும் விவரங்களை வெளியிட்டு ஏப்ரல் 4ம் தேதிக்குள் கருத்து தெரிவிக்க வேண்டும் என அலுவலக முகவரி அறிவித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது கிராம மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் கூறுகையில், ‘ஆட்கள் நடமாட்டம் இல்லாத, உரிமை கோராத, விளைநிலங்கள், அதாவது வெட்ட வெளியாக உள்ள விளைநிலங்கள் பகுதியில் நிலம் எடுப்பதாக அறிவிப்பு வெளியிட்டிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. போராட்டம் நடைபெறும் பகுதியில் உள்ள நிலங்களை எடுத்தால் எதிர்ப்பு தெரிவிக்கப்படும் என்பதால், யாருக்குமே தெரியாத இடங்களில் நிலங்களை கையகப்படுத்தி விமான நிலைய திட்டத்திற்கு எதிர்ப்பு இல்லை என பதிவு செய்யும் வகையில் இந்த பணி நடக்கிறது’ என்று குற்றம் சாட்டினர்.

மேலும் பரந்தூர் பசுமை வெளி விமான நிலையம் எதிர்ப்பு போராட்ட குழுவினர் கலந்தாலோசனை மேற்கொண்டனர். அப்போது, காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் புதியதாக அமைக்கப்பட்டுள்ள நில எடுப்பு அலுவலகம் முன்பு இன்று போராட்டம் நடத்தப்படும் என்று நேற்று அறிவித்தனர். அதன்படி ஏகானபுரம், பொடவூர் கிராம மக்கள் மற்றும் விவசாயிகள் அனைவரும் ஏகானபுரத்தில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சிலையில் இருந்து டிராக்டரில் புறப்பட்டு காஞ்சிபுரம் பொன்னேரி கரை பகுதியில் உள்ள நில எடுப்பு அலுவலகத்தை முற்றுகையிட்டனர். இதையடுத்து, காஞ்சிபுரம் தாலுகா போலீசார் விரைந்து வந்து விவசாயிகள் 100க்கு மேற்பட்டோரை கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர். இதனால் அப்பகுதியில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

The post பரந்தூர் விமான நிலையத்துக்கு நிலம் எடுப்பதாக அறிவிப்பு காஞ்சியில் நிலம் எடுப்பு அலுவலகத்தை விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு appeared first on Dinakaran.

Tags : Bharandoor airport ,Kangxi ,Kanchipuram ,Bharandoor ,Green Space Airport ,Barantur district ,Kanchipuram district ,Dinakaran ,Kanji ,
× RELATED கொரோனா காலத்தில் நோயாளிகளுக்கு உணவு...