×

பால் பற்கள் பராமரிப்பு!

நன்றி குங்குமம் டாக்டர்

மழலை சிரிப்புக்கு மயங்காதவர்கள் யாருமில்லை. குழந்தைகளின் முத்துப் போன்ற பற்களைப் பாதுகாக்க வேண்டியது மிக அவசியம். பெரியவர்களின் பல் பராமரிப்பு போலவே, சிறியவர்களின் பல் பராமரிப்பானது, பற்களுக்கு வலிமையையும், நீடித்த ஆயுளையும் தருமென்கிறார் சென்னை திருவான்மியூரைச் சேர்ந்த வாய்புற்றுநோய் நிபுணரும், பல் மருத்துவருமான கிடியோன் அருளரசன்.

ஆரோக்கியமான உடலுக்கான அடிப்படை என்பது வாய் பராமரிப்பிலிருந்து தான் துவங்குகிறது. இப்போதெல்லாம் பள்ளிப் பருவத்திலேயே பலர் ஏராளமான பல் பிரச்னைகளால் அவதிப்படுபவர்களைப் பார்க்க முடிகிறது. அவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டுமென்றால் குழந்தைப் பிறந்த நாளிலிருந்தே பல் பராமரிப்பில் பெற்றோர்கள் அதிக அக்கறையுடன் இருக்க வேண்டும். பால் பற்களில் ஏதும் பிரச்னையென்றால் பெற்றோர்கள் அதிக அக்கறை கொள்ள மாட்டார்கள். ஏனெனில், அவை விழுந்து நிரந்தரப் பற்கள் வந்துவிடுமென்று நினைப்பார்கள். ஆனா, அது தவறு. நிரந்தப் பற்கள் வளர்வதற்கான சக்தியுடன் தான் பால் பற்கள் வளர்கின்றன என்பதை மறக்க வேண்டாம்.

மழலைகளுக்கும் பல் பராமரிப்பு அவசியமா?

குழந்தை பிறந்த முதல் நாளிலிருந்து வாய் பராமரிப்பைத் துவங்க வேண்டும். பல் முளைத்திராத நேரமாக இருந்தாலும், பால் குடித்து முடித்தவுடன் ஈறுகளை மென்மையான காட்டன் துணி கொண்டு சுத்தம் செய்ய வேண்டும். ஏனெனில், பெரும்பாலான அம்மாக்கள், இரவு நேரங்களில் குழந்தை தூங்கும்போது வாயிலேயே பால் புட்டியை வைத்தபடியே தூங்க வைப்பார்கள். அப்படி வைக்கும் போது வாயில் அதிக நேரம் பால் இருக்க வேண்டிய சூழல் ஏற்படும். அது பாக்டீரியாவுடன் வினைபுரிந்து பல் சேதத்தை ஏற்படுத்தும். பல் சொத்தை ஏற்படுத்தக் கூட வாய்ப்பிருக்கிறது. புட்டிப்பால் மட்டுமல்ல, தாய் பாலாக இருந்தாலும் பல் சேதத்தை ஏற்படுத்தும் என்பதை மறக்க வேண்டாம்.

ஆறு மாத காலம் வரையிலான பல் பராமரிப்பு!

தினமும் காலையில் வழக்கமான பல் துலக்குவது போல, குழந்தைகளுக்கு பல் சுத்தம் அவசியம். அதற்கு நம்முடைய ஆள்காட்டி விரலைச் சுற்றி ஈரமான துணியை சுற்றிக் கொண்டு, குழந்தைகளின் ஈறுகளில் அல்லது வளர்ந்துகொண்டிருக்கும் பால் பற்களில் லேசான மசாஜ் செய்ய வேண்டும். பொதுவாக, நான்கு முதல் ஆறு மாதமென்பது பல் ஈறுகளிலிருந்து பற்கள் லேசாக முளைத்து வரும் தருணம். அந்த நேரங்களில் குழந்தைகள் லேசான வலி, வீக்கம் உள்ளிட்ட சிரமங்களை சந்திக்க நேரிடும்.

அப்படியான நேரங்களில் ‘டீத்திங் ரிங்ஸ்’ (Teething Rings)-யை மருத்துவ ஆலோசனையுடன் (தரமான ரப்பர் வளையம்) பயன்படுத்தலாம். அதுபோல, குளிரான ஈரத்துணியைக் கொண்டு ஈறுகளில் மசாஜ் செய்யலாம். ஏனெனில் குளிரான வெப்பநிலை டீத்தரிங் காலங்களில் ஈறுகளுக்கு சுகத்தைத் தரும். தவிர, குழந்தைகளுக்கு தரப்போகும் உணவின் சூட்டினைத் தெரிந்துகொள்ள குழந்தைகளின் பால் புட்டி அல்லது ஸ்பூனினை பெற்றோர்கள் வாயில் வைத்து சோதனை செய்வது தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஏனெனில், பல் சொத்தை பிரச்னையானது, நம்மிடமிருந்து பரவ அதிக வாய்ப்பிருக்கிறது.

குழந்தை பராமரிப்பு ஆறு மாதம் முதல் 1 வருடம் வரை

குழந்தைகளின் பஞ்சு போன்ற பால் பற்கள் ஆறு மாதத்திலிருந்து ஒரு வருடத்துக்குள் முளைத்துவிடும். பற்கள் அங்குமிங்குமென வளரத்துவங்கியதும் குழந்தைகளுக்கென பிரத்யேகமாக இருக்கும் மிருதுவான பற்கள் பிரஷ் கொண்டு சுத்தம் செய்யலாம். இந்தக் காலக்கட்டத்தில் பற்பசை பயன்படுத்த வேண்டிய அவசியமில்லை. ஆனால், குழந்தைக்கு கை சூப்பும் பழக்கம் இருந்தால் பற்கள் சீராக இருக்கும் படி ஈறுகளை அவ்வப்போது நேரான கோணத்தில் மசாஜ் செய்யலாம். இதன்மூலம், பல் சூப்புவதால் ஏற்படும் சீரற்ற பல் வளருதல் தடுக்கப்படும்.

ஒரு வயது முதல் இரண்டு வயதுவரை

12 மாதத்திலிருந்து 14 மாதத்தை குழந்தைகள் கடக்கும் போது புட்டியிலிருந்து குவளையில் நீர், ஜூஸ் குடிக்க பழக்கப்படுத்துங்கள். அப்படியே திட உணவுக்கு மாறும் போது இனிப்பு சார்ந்த பொருட்களை அதிகமாக கொடுப்பதை தவிருங்கள். அதோடு, குழந்தையின் பற்களில் வெள்ளை அல்லது பழுப்பு நிற புள்ளிகள் தென்படுகிறதென்றால் பற்சிதைவுக்கு (cavities) காரணமாக கூட இருக்கலாம். அதனால், மருத்துவரின் ஆலோசனை மிக முக்கியம். இறுதியாக, உங்கள் குழந்தை ஒரு வயது முதல் அல்லது பல் வளர்ந்த ஆறு மாதத்துக்குள் பல் மருத்துவரை ஒருமுறை சந்தித்து பொது ஆலோசனை எடுத்துக் கொள்வது மிக நல்லது.

இரண்டு வயதுக்குப் பிறகு, சிறிய அளவிலான ஃப்ளூரைடு (fluoridated) பற்பசை கொண்டு பல் துலக்க துவங்கலாம். அதே நேரத்தில் எப்படி துப்ப வேண்டுமென்பதையும் கற்றுக் கொடுங்கள். முதலில் வெறும் தண்ணீரை வாயில் ஊற்றி விளையாட்டாக பயிற்சியைத் துவங்குங்கள். அந்த பழக்கம் பல் துலக்கும் போது தானாக வந்துவிடும். அதோடு, பற்பசையை முழுங்கிவிட வில்லையென்பதை ஒவ்வொரு நாளும் உறுதி செய்ய வேண்டியதும் அவசியம்.

கொஞ்சம் கொஞ்சமாக தானாகவே பல் துலக்க துவங்கிவிட்டாலும் ஆறு முதல் ஏழு வயது வரை பெற்றோர்களின் மேற்பார்வையில் தான் குழந்தைகள் பல் துலக்க வேண்டும். குழந்தைகளுக்கு 7-12 வயதுக்குள் பால் பற்கள் விழுந்து நிரந்தரப் பற்கள் முளைத்துவிடும். இதில் எதாவது பிரச்னை என்றாலும் மருத்துவரை அணுக வேண்டும்.

தொகுப்பு: ஜாய் சங்கீதா

The post பால் பற்கள் பராமரிப்பு! appeared first on Dinakaran.

Tags : Kumkum ,Dr. ,Malai ,Thiruvanmuir ,Chennai ,
× RELATED மனவெளிப் பயணம்