×

செல்போன் தொலைந்த விவகாரத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது

ஆலந்தூர்: சென்னை நங்கநல்லூர் வோல்ட்ஸ் காலனியை சேர்ந்தவர் சக்திவேல்(52). இவர் மளிகை கடை நடத்துகிறார். உள்ளகரம் பகுதியை சேர்ந்த அதிமுக மாவட்ட வர்த்தக அணி செயலாளர் தனசேகரன்(48). இவர் குடிபோதையில் பைக்கில் தனது வீட்டுக்கு சென்றபோது மளிகை கடை அருகே நிலைதடுமாறி கீழே விழுந்துள்ளார். இதை பார்த்த மளிகை கடை உரிமையாளர் சக்திவேல் கொடுத்த தகவல்படி, சக்திவேலின் மகன் சதீஷ்குமார் மற்றும் உறவினர்கள் சிலர் வந்து தனசேகரனை தூக்கி உதவி செய்து வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர்.

இதன்பிறகு சுமார் அரைமணி நேரம் கழித்து வந்த தனசேகரன், வியாபாரி சக்திவேலிடம் சென்று, ‘’ எனது செல்போனை யார் எடுத்தது’’ என்று கேட்டு கடும் வாக்குவாதம் செய்துள்ளார். இதில் கோபம் அடைந்த சக்திவேல் தனசேகரனை பிடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதை பார்த்ததும் தனசேகரின் உறவினர்கள் வந்து மளிகை கடையை அடித்து நொறுக்கியுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்ததும் பழவந்தாங்கல் போலீஸ் இன்ஸ்பெக்டர் விமல், எஸ்ஐ ராஜேந்திரன் மற்றும் போலீஸ்காரர் கார்த்தி ஆகியோர் வந்து விசாரித்துள்ளனர்.

அப்போது அதிமுக நிர்வாகி மற்றும் அவரது உறவினர்கள் சேர்ந்து போலீஸ்காரர் கார்த்தியின் சட்டையை பிடித்து இழுத்து வாக்குவாதம் செய்து தாக்கியதாக தெரிகிறது. இன்ஸ்பெக்டர் வந்து தடுத்தபோது அவரிடமும் தகராறு செய்து தாக்குதல் நடத்த முயன்றுள்ளனர்.இதுகுறித்து வியாபாரி சக்திவேல் கொடுத்த புகாரின்படி, பழவந்தாங்கல் போலீசார் வழக்குபதிவு செய்து அதிமுக நிர்வாகி தனசேகரன், அவரது உறவினர்கள் ரவி, பிரகாஷ், சதீஷ், முருகேசன் ஆகிய 5 பேரை கைது செய்தனர்.

 

The post செல்போன் தொலைந்த விவகாரத்தில் போலீஸ்காரர் மீது தாக்குதல் நடத்திய அதிமுக நிர்வாகி உள்பட 5 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : AIADMK ,ALANTHUR ,Sakthivel ,Nanganallur Volts Colony, Chennai ,Thanasekaran ,Unagaram ,Dinakaran ,
× RELATED நான் செல்லும் இடங்களில் எல்லாம்...