×

திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும் குப்பைகளை தொடர்ந்து பாலாற்று படுகையில் கொட்டி எரிக்கும் ஊராட்சி நிர்வாகம்

*விரிஞ்சிபுரம் பொதுமக்கள் குற்றச்சாட்டு

பள்ளிகொண்டா : பள்ளிகொண்டா அடுத்த விரிஞ்சிபுரம் ஊராட்சியில் சேகரிக்கப்படும் குப்பைகளை தொடர்ந்து பாலாற்றில் கொட்டி எரிக்கப்பட்டு வருவதால் சுகாதார சீர்கேடு ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, விரிஞ்சிபுரம் ஊராட்சியில் 12 வார்டுகளில் சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இவர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள் ஊராட்சி நிர்வாகத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. மேலும், துப்புரவு பணியாளர்கள் மூலம் வீடு, கடைகள், பொது இடங்களில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து மக்கும் குப்பைகளை உரமாக்கவும், மக்காத பிளாஸ்டிக் குப்பகளை சிமெண்ட் குடோனுக்கு பிரித்து அனுப்ப ஊராட்சியில் திடக்கழிவு மேலாண்மை திட்டம் செயல்படுத்த கடந்த ஒரு வருடத்திற்கு முன்னதாகவே நிதி ஒதுக்கப்பட்டிருந்தது.

ஆனால் இதுவரை திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கான கட்டிட பணிகள் மேற்கொள்ளவில்லை என பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். மேலும், ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகளை பாலாற்று படுக்கையில் கொட்டி வந்தனர். அதனால் நிலத்தடி நீர் மாசுடுவதாக எழுந்த குற்றச்சாட்டினையடுத்து தினகரன் நாளிதழில் அப்போது படத்துடன் செய்தி வெளியானது. அதனையடுத்து சில மாதங்கள் பாலாற்றில் குப்பைகள் கொட்டாமல் இருந்த நிலையில், தற்போது மீண்டும் ஊராட்சி நிர்வாகம் பாலாற்று படுகையில் குப்பைகளை கொட்டி துப்பரவு பணியாளர்கள் மூலம் அதனை அங்கேயே எரித்து வருகின்றனர்.

இதனால் பிளாஸ்டிக் கழிவுகள் உட்பட அனைத்து குப்பைகளும் எரிந்து பாலாற்றில் தண்ணீரில் அந்த சாம்பல்கள் கலந்து வருகின்றன. இதனால் தண்ணீர் மாசடைந்து குடிநீர் ஆதாரம் பாதிக்கப்படுவதோடு நிலத்தடி நீரும் பாதிக்கப்படுகின்றது. மேலும், விரிஞ்சிபுரம் ஊராட்சி பகுதிகளில் உள்ள கோழி, ஆடு, மாடு இறைச்சி கடைகளில் உள்ள கழிவுகளை அந்த கடை வியாபாரிகள் இரவு நேரங்களில் பாலாற்றில் வீசி விட்டு செல்வதால் துர்நாற்றம் அதிகமாகி அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளை முகம் சுழிக்க வைக்கின்றது.

மேலும், திருமண மண்டபங்களில் முகூர்த்த நாட்களின் போது சாப்பாட்டு இலை கழிவுகள், வாழை மரங்கள், பிளாஸ்டிக் குப்பைகளை திருமண மண்டப உரிமையாளர்கள் பாலாற்றில் கொட்டி விட்டு செல்வதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதில் சம்பந்தப்பட்ட கடைக்காரர்களுக்கும், திருமண மண்டப உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்து நடவடிக்கை எடுப்பதோடு ஊராட்சி நிர்வாகமும் பாலாற்றில் குப்பை கொட்டுவதை கைவிட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும், ஊராட்சிக்கு திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு ஒதுக்கியுள்ள நிதியில் புதிய கட்டிடத்தை கட்டுவதற்கு அணைக்கட்டு ஊராட்சி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் நேரில் பார்வையிட்டு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை வலுத்துள்ளது.

The post திடக்கழிவு மேலாண்மை திட்டத்திற்கு நிதி ஒதுக்கியும் குப்பைகளை தொடர்ந்து பாலாற்று படுகையில் கொட்டி எரிக்கும் ஊராட்சி நிர்வாகம் appeared first on Dinakaran.

Tags : panchayat administration ,Virinchipuram ,Pallikonda ,Virinchipuram Panchayat ,Vellore District ,Amandakattu Taluk ,
× RELATED வேலூர் சைபர் கிரைம் போலீஸ்...