×

தாய்மொழி மீதான பற்று பிறப்பால் வருவதில்லை, உணர்வால் வருவதாகும்

*உலக தாய்மொழி நாள் விழாவில் புகழாரம்

மன்னார்குடி : தாய்மொழி மீதான பற்று பிறப்பால் வருவதில்லை, உணர்வால் வருவதாகும் என்று மன்னார்குடியில் நடந்த விழாவில் விளக்கம் அளிக்கப்பட்டது.
தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் சார்பில் உலகத் தாய்மொழி நாள் விழா கிளை தலைவர் செல்வகுமார் தலைமையில் மன்னார்குடி கோபால சமுத்திரம் நகராட்சி நடுநிலைப்பள்ளியில் நேற்று நடந்தது. மாவட்ட தலைவர் அரவிந்தன், மாவட்ட பொருளாளர் அன்பழகன் எழுத்தாளர் மணி கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

முன்னாள் மாநில பொதுச்செயலாளர் பேராசிரியர் காமராசு, மாநில செயற்குழு உறுப்பினர் செல்வராசு, ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் செல்வி ஆகியோர் தாய்மொழியின் சிறப்புகள் குறித்து வாழ்த்திப் பேசினர்.

சிறப்பு அழைப்பாளராக மாநில செயற்குழு உறுப்பினரும் , கவிஞருமான திருச்சி கலியமூர்த்தி கலந்து கொண்டு பேசியதாவது, தமிழ் மொழி தொன்மையானது மட்டுமல்ல. காலந்தோறும் தம்மைத் தகவமைத்துக் கொண்டே வளரும் தனித்தன்மை மிக்க மொழியாகும்.மழலையர் கல்வி முதல் கல்லூரிக் கல்வி வரை தாய்மொழியாம் தமிழ் மொழியைப் புறக்கணிக்கும் அவலநிலை களையப்பட வேண்டும். தாய்மொழி மீதான பற்று பிறப்பால் வருவதில்லை. உணர்வால் வருவதாகும் என்றார்.

முன்னதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகரன், ஆசிரியர் இள ராகவன் ஆகியோர் தாய்மொழியின் தேவை குறித்த விழிப்புணர்வைத் தூண்டும் மக்கள் இசைப் பாடல்களைப் பாடினர்
மாநில அளவில் இதன் பொருட்டு நடத்தப்பட்ட கல்லூரி மாணவர்களுக்கான கவிதைப் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டுச் சான்றிதழுடன் புத்தகங்கள் பரிசாக வழங்கப்பட்டன. முன்னதாக கிளை செயலாளர் தங்கபாபு வரவேற்றார்.கிளைப் பொருளாளர் கோபால் நன்றி கூறினார்.

The post தாய்மொழி மீதான பற்று பிறப்பால் வருவதில்லை, உணர்வால் வருவதாகும் appeared first on Dinakaran.

Tags : World Mother ,Day ,Mother Language Day ,Tamil Nadu Arts and Literature Council ,
× RELATED புதுக்கோட்டையில் குடிநீர் கேட்டு 2வது நாளாக மறியல்