×

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி

*ஆட்சியர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் வலியுறுத்தல்

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூர் கிராம எல்லை பகுதியில் ரூ.398 கோடி மதிப்பில் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை அமைக்கப்பட்டது. அதனை தொடர்ந்து கடந்த ஆண்டு மார்ச் மாதம் 11ம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டது. இதையடுத்து கள்ளக்குறிச்சி மாவட்ட மக்கள் மட்டுமின்றி கடலூர் மாவட்டத்தை சேர்ந்த வேப்பூர், விருத்தாசலம், தொழுதூர், திட்டக்குடி ஆகிய பகுதிகளை சேர்ந்த ஏராளமான நோயாளிகள் சிகிச்சைக்கு வந்து செல்கின்றனர். ஆனால் இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் அடிப்படை வசதிகள் சரிவர செய்யப்படாததால் தினந்தோறும் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் அவதிப்படுகின்றனர்.

இந்த மருத்துவக்கல்லூரி மருத்துவமனை 6 தளங்கள் கொண்டதாகும். முதல் தளத்தில் நோயாளிகள் பதிவு சீட் வாங்கும் அருகில் ஆண்கள் கழிப்பறை அமைக்கப்பட்டுள்ளது. அந்த கழிவறையின் கதவுகள் உடைந்த நிலையில் இருப்பதால் அக்கதவினை அருகில் சாய்த்து வைக்கப்பட்டுள்ளது. இதனால் கழிப்பறை கதவின்றி திறந்த நிலையில் கிடக்கிறது. இந்நிலையில் அந்த வழியாக தான் நோயாளிகள் மாத்திரை வாங்க செல்ல வேண்டும்.

மருத்துவர்கள் பரிந்துரையின்படி மருந்து, மாத்திரைகள் வாங்க அவ்வழியாக செல்லக்கூடிய பெண்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். மேலும் அந்த வழி தடத்தில் சில அறைகள் அமைக்கப்பட்டு சிகிச்சையும் அளிக்கப்படுகிறது. மேலும் இதுபோன்றே அனைத்து கழிப்பறைகளிலும் அமைக்கப்பட்டுள்ள கதவுகள் தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதனால் கழிப்பறை கதவுகள் உடைந்து விடுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மேலும் கழிப்பறை பகுதியில் உள்ள தண்ணீர் பைப்லைன்களும் உடைந்து தண்ணீர் வீணாகி வெளியேறுகிறது. அதிலும் சில பைப்லைன் சேதமடைந்த நிலையில் உள்ளதால் பொதுமக்கள் தண்ணீரை பயன்படுத்த முடியாத அவலநிலையும் இருந்து வருகிறது. மேலும் இந்த மருத்துவமனையில் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் பயன்படுத்தும் வகையில் குடிநீர் சுத்திகரிப்பு (ஆர்.ஓ.) வாட்டர் ஒவ்வொரு தளத்திலும் 4 மூலை பகுதிகளிலும் தலா ஒன்று வீதம் 6 தளங்களிலும் சுமார் 24க்கும் மேற்பட்ட இடங்களில் குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. வாட்டர் மிஷின் அமைக்கப்பட்டுள்ளன.

அதனை நோயாளிகள் சில தினங்கள் மட்டுமே பயன்படுத்தி வந்ததாக கூறபடுகிறது. ஆனால் தற்போது அனைத்து ஆர்.ஓ. வாட்டர் மிஷின்களும் பழுதாகிய நிலையில் பெயர் அளவுக்கு காட்சி பொருளாகவே அமைந்துள்ளது. இதனால் நோயாளிகள் மற்றும் பொதுமக்கள் சுகாதாரமான குடிநீர் கிடைக்காததால் தினந்தோறும் அவதிப்பட்டு வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு தினந்தோறும் சிகிச்சைக்கு வருகின்ற நோயாளிகள் நடக்க முடியாதவர்களை வார்டுகளுக்கு அழைத்து செல்லும் வகையில் பேட்டரியால் இயங்கக்கூடிய வாகனம் மூலம் நோயாளிகளை அழைத்து செல்வதற்கு பேட்டரி வாகனம் ஒன்று மருத்துவமனைக்கு அரசு வழங்கியுள்ளது.

அந்த பேட்டரி வாகனம் அரசு வழங்கிய நாள் முதல் இதுவரை நோயாளிகளுக்கு எந்த வகையிலும் பயன்படுத்தப்படாமல் அவசர சிகிச்சை வார்டு பகுதியின் அருகில் ஒரு அறையில் ஓரமாக மறைத்து காட்சி பொருளாகவே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

எனவே பொதுமக்கள் பயன்படுத்தக்கூடிய கழிப்பறையின் கதவுகள் மற்றும் தண்ணீர் பைப்லைன் சேதமடைந்த நிலையில் உள்ளதை விரைந்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டியும், மேலும் அனைத்து தளத்திலும் காட்சி பொருளாக அமைந்துள்ள குடிநீர் சுத்திகரிப்பு ஆர்.ஓ. வாட்டர் மிஷின்களையும் பராமரிப்பு செய்திடவும், நடக்க முடியாத நோயாளிகளை அழைத்து செல்லக்கூடிய பேட்டரி வாகனம் நோயாளிகளுக்கு பயன்படுத்தும் வகையில் மாவட்ட ஆட்சியர் மற்றும் மருத்துவமனை டீன் ஆகியோர் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் மற்றும் நோயாளிகள் வலியுறுத்தியுள்ளனர்.

The post கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் குடிநீர், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதி இல்லாததால் நோயாளிகள் அவதி appeared first on Dinakaran.

Tags : Kallakurichi Government Medical College Hospital ,Kallakurichi ,
× RELATED கள்ளக்குறிச்சியில் நின்று...