×

பாறைகள் வெடிகள் வைத்து தகர்ப்பு – மண் வெட்டி எடுப்பு அதிசய மூலிகைகள் நிறைந்த மருந்துவாழ்மலை அழிக்கப்படுகிறதா?

*பாதுகாக்க நடவடிக்கை எடுக்க கோரிக்கை

நாகர்கோவில் : அதிசய மூலிகைகள் நிறைந்த மருந்துவாழ்மலையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். வெடிகள் வைத்து பாறைகள் உடைக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. நாகர்கோவில் – கன்னியாகுமரி தேசிய நெடுஞ்சாலையில், கன்னியாகுமரியில் இருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள மருந்துவாழ்மலை. பல்வேறு விதமான நோய்களை தீர்க்கும் அரிய வகை மூலிகைகள் இந்த மலையில் உள்ளன. இயற்கையின் பாதுகாப்பு பெட்டகமாக உள்ள மருந்துவாழ்மலையை, ராமாயண காலத்துடன் ஒப்பிட்டு கூறுவார்கள். ராவணனுடன் போர் செய்த போது மயங்கிய லட்சுமணனுக்கும், வானரங்களுக்கும் வைத்தியம் செய்ய சில மூலிகைகள் தேவைப்பட்டன.

அந்த மூலிகைகளுக்காக அனுமன் சஞ்சீவி மலையைப் பெயர்த்து எடுத்துச் சென்ற போது விழுந்த சிறிய துண்டு தான் இந்த மருந்துவாழ்மலை என்பார்கள். சஞ்சீவி மலையின் ஒரு பாகம் என்றும் இதை அழைப்பார்கள். இந்த மருந்துவாழ்மலை பாதுகாக்கப்பட்ட பகுதியாக உள்ளது. இந்த மலைப்பாதையில் பரமார்த்தலிங்க சுவாமிகள் உள்பட பல கோயில்களும் உள்ளன. சித்தர்கள் இங்கு குடியிருந்துள்ளனர்.

இதனால் இங்கு இயற்கை நேசிப்பாளர்கள் மட்டுமல்ல, ஆன்மீக நம்பிக்கை கொண்டவர்களும் அதிகமானோர் வருகிறார்கள். ஒவ்வொரு பவுர்ணமியின் போது, இங்கு 500க்கும் அதிகமானோர் மலையை சுற்றி உள்ள 9 கி.மீ. தூரம் கிரிவலம் வருகிறார்கள். மற்ற நாட்களில் உடல் ஆரோக்கியத்துக்காக மலையேறுபவர்களும் அதிகளவில் வருகிறார்கள்.

குறிப்பாக ஞாயிற்றுக்கிழமைகளில் குடும்பம், குடும்பமாக மலையேறி செல்பவர்களும் உண்டு. சமீப காலமாக கன்னியாகுமரி வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் மருந்துவாழ்மலை வந்து செல்கிறார்கள். மிகப்பெரிய சுற்றுலா தலமாகவும் மருந்துவாழ்மலை மாறி வருகிறது. சுமார் 640 ஏக்கர் பரப்பளவையும், 1,800 அடி உயரத்தையும் கொண்டுள்ள இம்மலையில் 1000க்கும் அதிகமான மூலிகைகள் உள்ளதாக கூறுகிறார்கள். மலையில் ஏராளமான குகைக் கோயில்களும் அமைந்துள்ளன.

இப்போதும் சித்தர்கள் இம்மலையில் வாழ்வதாக இப்பகுதி மக்களுக்கு ஒரு நம்பிக்கை உண்டு. சித்தர்களில் முதன்மையானவரும், மருத்துவ சாஸ்திரம் அறிந்தவருமான அகத்திய மாமுனி இங்கு தங்கி பல ஏட்டுச் சுவடிகள் எழுதியதாகவும் ஒரு கருத்து உண்டு. இதேபோல் இங்குள்ள பிள்ளைத்தடம் குகையில் அய்யா வைகுண்டர், நாராயணகுரு ஆகியோரும் தங்கியிருந்து தவம் செய்துள்ளதாக கூறுகிறார்கள். இத்தகைய சிறப்புகளைப் பெற்ற மருந்துவாழ் மலையை புராதனச் சின்னமாக அறிவிக்க வேண்டும் என்று தொடர்ந்து கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.

ஆனால் சத்தமில்லாமல் ஒரு கும்பல் இந்த மருந்து வாழ்மலையின் மகத்துவத்தை சிதைத்து வருகிறது. பாதுகாக்கப்பட்ட மலையாக கருதப்படும், மருந்துவாழ்மலையை உடைத்து பாறைகளும், கற்களும் கடத்தப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இங்கு பாறைகளை உடைக்க பயன்படுத்தும் வெடி பொருட்களால் மருந்துவாழ்மலையில் உள்ள வன விலங்குகள் ஊருக்குள் புகுந்து விடும் நிலை உள்ளது.

வருவாய்த்துறை, வனத்துறையில் இதற்கு முன் பணியாற்றிய அதிகாரிகள் பலரின் துணையுடன் ஆக்ரமிப்பாளர்கள் மலைய உடைத்து டன் கணக்கில் பாறைகளை கடத்தி சென்று உள்ளனர். இன்னும் மலையை சுற்றி பாறைகளை உடைக்கும் சம்பவங்கள் நடந்து வருவதாக புகார்கள் உள்ளன. மலையையொட்டி மண் வெட்டி எடுக்கிறார்கள். இது தொடர்பாக வருவாய்த்துறை, வனத்துறையிடம் புகார் அளித்தாலும் எந்த வித நடவடிக்கையும் இல்ைல. வனங்களை பாதுகாக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு வருகிறார். ஆனால் அதிகாரிகள் உடந்தையுடன் மகத்துவம் நிறைந்த மருந்துவாழ்மலை அழிக்கப்படுகிறது என சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் குற்றம் சாட்டி உள்ளனர்.

தற்போது இந்த மருந்துவாழ்மலையை காப்பாற்றக் கோரி பல்வேறு அமைப்புகள் களத்தில் இறங்கி உள்ளன. இயற்கை ஆர்வலர்களுடன், ஆன்மீக பக்தர்களும் இணைந்து மலையை காப்பாற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள். தற்போதைய தலைமுறைக்கு சித்த மருத்துவத்தின் அடையாளமாக மருந்துவாழ்மலை விளங்கி வருகிறது.

இந்த மலையை பாதுகாத்து பல்வேறு நோய்களை தீர்க்கும் இடமாக உள்ள மருந்துவாழ்மலையை அடுத்த தலைமுறைக்கு பாதுகாப்பாக ஒப்படைக்க வேண்டும். அதை விடுத்து பணத்துக்கு ஆசைப்பட்டு பொக்கிஷமாக கருதப்படும் மருந்துவாழ்மலையை வெடி வைத்து தகர்த்து அந்த மலையை மட்டுமல்ல. மலையில் உள்ள மூலிகைகளையும் அழிப்பது, தாயின் கருவறையை சிதைப்பதற்கு சமம் ஆகும் என இயற்கை ஆர்வலர்கள் வேதனையுடன் கூறி உள்ளனர். எனவே மாவட்ட நிர்வாகம், வருவாய்த்துறை, வனத்துறை இணைந்து இந்த மலையை பாதுகாக்க வேண்டும். மலையை சிதைப்பவர்கள் மீது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

லஞ்ச ஒழிப்பு போலீஸ் விசாரணை

மருந்துவாழ்மலையில் முறைகேடாக பாறைகள் வெடி வைத்து தகர்க்கப்படுவதாக லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு புகார் அனுப்பி வைக்கப்பட்டு இருந்தது. அதன்படி பேரில் லஞ்ச ஒழிப்பு போலீசாரும் தற்போது இது தொடர்பான விசாரணையை தொடங்கி உள்ளனர். இந்த புகாரில் குமரி மாவட்டத்தில் பணியாற்றிய சில அதிகாரிகளின் பெயர்களும் தெரிவிக்கப்பட்டு இருந்தன. அதன்படி அடிப்படையில் அவர்களையும் விசாரணைக்காக அழைப்பார்கள் என கூறப்படுகிறது.

மருத்துவம் நிறைந்த நீரூற்று

மருந்துவாழ்மலையில் தானாக வரும் நீரூற்று உள்ளது. எந்த நேரமும் தண்ணீர் வந்து கொண்டு இருக்கும். மலையில் இருந்து மூலிகைகள் கலந்து வருவதால், இந்த தண்ணீர் அதிக மருத்துவ குணம் நிறைந்த நீராக பார்க்கப்படுகிறது. இந்த நீரூற்றையும் பாதுகாக்க வேண்டும் என்பது மருந்துவாழ்மலை பாதுகாப்பு ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.

ஆராய்ச்சியாளர்கள் திகைப்பு

1986- 87 ல், மருந்துவாழ்மலையை 2 ஆக பிரித்து ஒரு பகுதியில் கல் உடைக்க முயற்சிகள் நடந்தன. அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். கவனத்துக்கு இந்த பிரச்சினை சென்றது. உடனடியாக ஆராய்ச்சியாளர்கள் குழு அமைக்கப்பட்டது. சென்னை பல்கலைக்கழகம், கேரள பல்கலைக்கழகம் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து ஆராய்ச்சியாளர்கள் வந்து ஆய்வு செய்தனர். ஆராய்ச்சியாளர்கள் திகைக்கும் வகையில் மகத்துவம் நிறைந்த மலை என்பது கண்டறியப்பட்டது. இதனால் மருத்துவாழ்மலையை பாதுகாக்க எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார் என்கிறார்கள்.

ஒரு வருடத்தில் ஒன்றும் இல்லாமல் போய் விடும்

மருந்துவாழ்மலை அழிக்கப்படுவதை தடுப்பதற்காக பல்வேறு அமைப்புகளும், ஆர்வலர்களும் களமிறங்கி உள்ளனர். இதில் கன்னியாகுமரி பொற்றையடி பகுதியை சேர்ந்த எம். கிருஷ்ணன் என்பவரும் ஒருவர் ஆவார். மருந்துவாழ்மலையின் தெய்வீக பேரவை பொது செயலாளராகவும் உள்ளார். மருந்துவாழ்மலை அழிக்கப்படுவதை தடுக்க கோரி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், உள்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, கனிமவளத்துறை செயலாளர் உள்பட உயர் அதிகாரிகளுக்கு மனு அனுப்பி உள்ளார்.

இது குறித்து பொற்றையடி கிருஷ்ணன் கூறுகையில், மருந்துவாழ்மலை பாதுகாக்கப்பட வேண்டிய பொக்கிஷம் ஆகும். ஆனால் அதிகாரிகள் சிலர் கையூட்டு பெற்றுக் கொண்டு, தனியாருக்கு தாரை வார்த்துள்ளனர். வெடிகள் வைத்து பாறைகள் தகர்க்கப்படும் போது இதயமே வெடிப்பது போல் உள்ளது. இந்த வெடி சத்தத்தால், வனவிலங்குகள் ஊருக்குள் புகுந்து மலையின் கீழ் உள்ள விளை நிலங்களை அழித்து வருகின்றன.

லாரிகளில், டன் கணக்கில் பாறைகளும், மணலும் கொண்டு செல்லப்படுகின்றன. அதிசயங்கள் நிறைந்த மருந்துவாழ்மலை காக்கப்பட வில்லை என்றால், இன்னும் ஒரு வருடத்தில் ஒன்றுமே இல்லாமல் அழித்து விடுவார்கள். அதிகாரிகள் உரிய விசாரணை நடத்த வேண்டும் என்றார்.

The post பாறைகள் வெடிகள் வைத்து தகர்ப்பு – மண் வெட்டி எடுப்பு அதிசய மூலிகைகள் நிறைந்த மருந்துவாழ்மலை அழிக்கப்படுகிறதா? appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Kanyakumari National Highway ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...