×

தேசிய நெடுஞ்சாலை நிதி விடுவிக்கப்படாததால் மதமாகும் மதுரவாயல்-துறைமுகம்பறக்கும் சாலை திட்டம்: ஒன்றிய அரசின் அலட்சியத்தால் அவதியுறும் மக்கள்

மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்திற்கு, ஒன்றிய அரசின் தேசிய நெடுஞ்சாலை துறையில் இருந்து நிதியை விடுவிப்பதில் அலட்சியம் காட்டுவதால் மக்கள் அவதியுறுகின்றனர். சென்னை நகரின் போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்துவதற்காகவும், சென்னை துறைமுகத்திலிருந்து கன்டெய்னர் சரக்கு லாரி போக்குவரத்து தடையின்றி செல்வதற்காகவும் கடந்த 2009 திமுக ஆட்சியில் மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டம் கொண்டுவரப்பட்டது. கடந்த 2009ம் ஆண்டு ஜனவரியில் அப்போதைய பிரதமர் மன்மோகன் சிங் அடிக்கல் நாட்டி இந்த திட்டத்தை தொடங்கிவைத்தார்.

ரூ,1,815 கோடி நிதியில் 20 கி.மீ தொலைவுக்குக் கூவம் ஆற்றின் வழியே அமைக்கத் திட்டமிடப்பட்டு, பணிகளும் முடுக்கிவிடப்பட்டன. மதுரவாயல், சேத்துப்பட்டு பகுதிகளிலும், கூவம் நதியிலும் உயர்மட்ட சாலைக்கான தூண்கள் முழுவீச்சில் கட்டப்பட்டு வந்தன.பறக்கும் சாலைத்திட்டத்தின் 15 சதவீத பணிகள் முடிந்த நிலையில், 2011ம் ஆண்டு ஆட்சி மாற்றம் ஏற்பட்ட போது கூவம் நதியில் அமைக்கப்படும் பறக்கும் சாலை திட்டத்தால் நதியின் நீரோட்டம் பாதிக்கப்படும், மழைக்காலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் எனக் கூறி பறக்கும் சாலைத் திட்டத்துக்கு அப்போதைய முதல்வர் ஜெயலலிதா தடை விதித்தார்.

மேலும், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அளித்த அனுமதியையும் எதிர்த்து தமிழக அரசு சார்பில், உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.இந்நிலையில் 2016ல் ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, முதல்வராகப் பொறுப்பேற்ற ஓ.பன்னீர்செல்வம், நீர்வளம் மற்றும் குடியிருப்புப் பகுதிகள் பாதிக்காத வகையில், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தில் சில மாற்றங்களைச் செய்து நிறைவேற்றலாம் என தமிழ்நாடு அரசு சார்பில் ஒன்றிய அரசுக்குப் பரிந்துரைத்தார்.

இதையடுத்து ஒன்றிய அரசு அந்த பரிந்துரைகள் ஆய்வு செய்து திட்டம் விரைவில் தொடங்கப்படும் என்றும் கூவம் நீரோட்டத்தைப் பாதிக்காத வகையில் திட்டத்தைச் செயல்படுத்துவது குறித்து ஆய்வு செய்யப்படும் என்றும் தெரிவித்தது. இதைதொடர்ந்து தேசிய நெடுஞ்சாலைத் துறை அதிகாரிகள், தமிழ்நாடு அரசு அதிகாரிகள் ஆலோசனை நடத்தி, கூவம் நதியின் நீரோட்டம் பாதிக்காத வகையில் பறக்கும் சாலை திட்டத்தின் பாதையை சற்று மாற்றியமைத்தனர்.

இதையடுத்து, 2018ம் ஆண்டு நான்குவழிச் சாலைக்குப் பதிலாக ஆறு வழிச்சாலையாக விரிவுபடுத்தப்படுவதாகவும், திட்ட மதிப்பீடு ரூ, 1,815 கோடியிலிருந்து ரூ,3,100 கோடியாக உயர்த்தப்படுவதாகவும் அறிவிப்பு வெளியானது. அதைத் தொடர்ந்து 2020ல், ஒன்றிய, மாநில அரசுகள் இரண்டு அடுக்கு பாலமாக ரூ,5000 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும் ஒன்றிய, மாநில அரசுகள் இணைந்து விரைவில் பறக்கும் சாலைத் திட்டத்தை நிறைவேற்றும் என தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில், 2021ம் ஆண்டு நடந்த தேர்தலில் திமுக அமோக வெற்றி பெற்று ஆட்சியை பிடித்தது. மு.க.ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றார். அதையடுத்து, 2022 மே 16ம் தேதி மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்தை விரைவாகச் செயல்படுத்துவதற்காக, முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், தமிழ் நாடு அரசு, தேசிய நெடுஞ்சாலை ஆணையம், சென்னை துறைமுகக் கழகம், இந்திய கடற்படை ஆகியவற்றுக்கிடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது. அதன்படி 20.56 கி.மீ நீளத்துக்கு, ரூ,5,855 கோடி செலவில் பறக்கும் சாலைத் திட்டத்தைச் செயல்பாட்டுக்குக் கொண்டுவருவது உறுதியானது.

அதைத் தொடர்ந்து, மே 26ம் தேதி பறக்கும் சாலைத் திட்டத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. கடந்த ஆட்சியாளர்கள் அரசியல் காரணங்களுக்காக இந்த திட்டத்தை நிறுத்திவைத்தால் திட்டச் செலவு 3 மடங்கு அதிகரித்துள்ளதாகவும், அப்போதே செயல்படுத்தி இருந்தால் செலவை குறைத்து இருக்கலாம் என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.இத்திட்டத்துக்கு கடலோர மண்டல மேலாண்மை அனுமதி வழங்க, ஒன்றிய அரசின் நிபுணர் மதிப்பீட்டுக் குழு ஒப்புதல் வழங்கியது. மேலும் கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் குழுவும் சில நிபந்தனைகளுடன் ஒப்புதல் வழங்கியது.

உயர்மட்ட பாலத்துக்காக எழுப்பப்படும் தூண்களால் மழை மற்றும் சாதாரண காலங்களில் நீரோட்டத்துக்குத் தடை ஏற்படக் கூடாது, கட்டுமானத்தின்போது அகற்றப்படும் கழிவுகளை நீர்நிலையிலோ அல்லது அதற்கு அருகிலோ கொட்டக் கூடாது. பாலம் அமைக்க தற்காலிகமாக அமைக்கப்படும் கட்டமைப்பு பணிகள் முடிந்த ஒரு மாதத்துக்குள் அகற்றப்பட வேண்டும், கூவம் நதியை மேலாண்மை செய்துவரும் பொதுப் பணித்துறையுடன் கலந்தாலோசித்து ஆற்றில் தூண்கள் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளை விதிக்கப்பட்டது.

இந்த நிலையில் நவீன தொழில்நுட்பத்துடன் இந்தியாவிலேயே முதல்முறையாக இரண்டு அடுக்கு சாலையாக இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் அடுக்கில் பேருந்துகள், இரு சக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் செல்லும் வகையில் ஆறு வழிச்சாலையாக அமைக்கப்படும். இரண்டாம் அடுக்கில் இடைநிறுத்தமின்றி சென்னை துறைமுகத்திலிருந்து மதுரவாயல் வரை கன்டெய்னர் லாரிகள் உள்ளிட்ட கனரக சரக்கு வாகனங்களின் போக்குவரத்துக்காக பிரத்யேகமாக நான்கு வழிச்சாலையாக அமைக்கப்படும்.

இந்த ஈரடுக்கு பறக்கும் சாலை மொத்தம் 604 தூண்களால் அமைக்கப்படுகிறது. இந்த பாலம் கட்டுமான பணிகள் நான்கு பகுதிகளாக நடைபெறும் என்றும் வரும் ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்களில் நிறைவடையும் என்றும் தெரிவிக்கப்பட்டது. மாநில அரசு நிதியில் பணிகள் நடைபெற்ற வரும் நிலையில் தேசிய நேடுஞ்சாலை தரப்பில் இருந்து வரவேண்டிய நிதி தாமதமாவதால் இந்த திட்டம் நிறைவடைய சில மாதங்கள் காலதாமதம் ஆகும் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சென்னை மெட்ரோ ரயில் 2ம் கட்ட பணிகளுக்கு நிதி ஒதுக்காமல் இருப்பதால் மெட்ரோ திட்ட பணிகள் தாமதமாகும் நிலையில் இந்த பறக்கும் சாலை திட்டத்திற்கு ஒன்றிய அரசு தரப்பில் நிதி விடுவிக்கப்படாமல் இருக்கிறது.

தமிழகத்தில் ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல்படுத்தப்படும் மெட்ரோ ரயில் உள்ளிட்ட திட்டங்களுக்கு ஒன்றிய அரசு நிதி விடுவிக்க தாமதமாக்குவதால் பல இடங்களில் திட்டம் முடங்கி இருக்கிறது. இதனால் பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படுகிறது. இதை உணர்ந்து ஒன்றிய அரசு உடனடியாக நிதி ஒதுக்க வேண்டும். ஒரு துறையின் திட்டத்திற்கு நிதி ஒதுக்காமல் இருப்பதால் மற்ற துறையின் திட்டங்களை செயல்படுத்த முடியாமல் இருக்கிறது என சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.

பொதுப்பணித்துறை அதிகாரிகள் கூறியதாவது: மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டத்திற்கான கட்டுமான பணிகள் மதுரவாயல் பகுதிகளில் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. மாநில அரசு நிதியில் இருந்து மேற்கொள்ளப்படும் பணிகள் நடைபெற்று வருகிறது. ஆனால் தேசிய நேடுஞ்சாலை தரப்பில் இருந்து விடுவிக்க வேண்டிய நிதி தாமதமாகிறது. நாடாளுமன்ற தேர்தல் வரவுள்ளதால் நிதி விடுவிப்பதில் தாமதம் ஏற்படுகிறது.

சில பகுதிகளில் கட்டுமான பணிகளுக்கான டெண்டர் இறுதி செய்யவும் அனுமதி வழங்கவும் ஒன்றிய நெடுஞ்சாலை அமைச்சகம் தாமதப்படுத்தியுள்ளது. ஆனால் நீண்ட நாட்கள் தாமதப்படுத்த முடியாது. குறிப்பிட்ட காலத்திற்குள் அனுமதி வழங்கப்பட வேண்டும். மேலும் சென்னையில் பல்வேறு பகுதிகளில் மெட்ரோ ரயில் பணிகள் நடைபெறுகிறது. இதனால் நகரின் பல பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதன் காரணமாக துறைமுகத்துடன் இணைக்கும் பகுதியில் எவ்வாறு பணிகளை மேற்கொள்ளலாம் என்பது தொடர்பாக ஆலோசித்து வருகிறோம்.

ஏற்கனவே மெட்ரோ பணிகளால் சிரமம் உள்ள நிலையில் மக்களுக்கு சிரமமின்றி திட்டதை எப்படி செயல்படுத்தலாம் என திட்டமிட்டு வருகிறோம். ஒரு திட்டத்திற்கு காலக்கெடு விதித்து அதற்குள் நிறைவேற்ற முடியவில்லை என்றால் அதன் பின் அந்த திட்டதை நிறைவு செய்ய ஒரு குறிப்பிட்ட அவகாசம் வழங்கப்படும். அதற்குள் திட்டத்தை நிச்சயம் முடிக்க வேண்டும். மேலும் நாடாளுமன்ற தேர்தல் முடிவுக்கு ஏற்ப திட்டம் பயன்பாட்டிற்கு வரும் நிலை மாறலாம். இந்தாண்டு இறுதிக்குள் கட்டுமான பணிகள் நிறைவடையும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post தேசிய நெடுஞ்சாலை நிதி விடுவிக்கப்படாததால் மதமாகும் மதுரவாயல்-துறைமுகம்பறக்கும் சாலை திட்டம்: ஒன்றிய அரசின் அலட்சியத்தால் அவதியுறும் மக்கள் appeared first on Dinakaran.

Tags : Maduravayal ,Airport ,Highway ,Union Govt ,Union Government ,National Highways Department ,Harbor ,Chennai ,Chennai port ,
× RELATED மதுரவாயலில் உயர்நீதிமன்ற உத்தரவின்படி ஆக்கிரமிப்புகள் அகற்றம்