×

ஆக்ராவில் தொண்டர்கள் உற்சாகம் ராகுல் யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்றார்

ஆக்ரா: இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சமாஜ்வாடி இடையே தொகுதி பங்கீடு முடிவானதைத் தொடர்ந்து, ஆக்ராவில் நடந்த இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் ராகுல் காந்தியுடன், அகிலேஷ் யாதவ் பங்கேற்றார்.இந்தியா கூட்டணி கட்சிகளுடன் காங்கிரஸ் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் உத்தரப்பிரதேச மாநிலத்தில் அகிலேஷ் யாதவ்வின் சமாஜ்வாடி கட்சிக்கும், காங்கிரசுக்கும் இடையே சமீபத்தில் தொகுதி பங்கீடு உடன்படிக்கை ஏற்பட்டது. இந்நிலையில், ராகுலின் அழைப்பை ஏற்று அகிலேஷ் யாதவ் நேற்று இந்திய ஒற்றுமை நீதி யாத்திரையில் பங்கேற்றார்.

ஆக்ரா வந்தடைந்த ராகுலின் நீதி யாத்திரையில் இரு தலைவர்களும் கை கோர்த்து தொண்டர்களைப் பார்த்து கை அசைத்தனர். இதனால் இரு கட்சிகளின் தொண்டர்கள் உற்சாகமடைந்து ஆரவாரம் செய்தனர். ராகுல், அகிலேஷுடன் காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தியும் உடன் இருந்தார்.அப்போது பேசிய அகிலேஷ் யாதவ், ‘‘இன்று விவசாயிகள் ஒன்றிய அரசுக்கு எதிராக நிற்கிறார்கள். விவசாயிகளை பார்த்து அரசு பயப்படுகிறது.

வரும் காலத்தில் பாஜவை ஆட்சியில் இருந்து அகற்றிவிட்டு இந்தியா கூட்டணி புதிய அரசு அமைக்கும். அதில் விவசாயிகளுக்கு உரிய மரியாதை தரப்படும். விவசாயிகளைப் போலவே பிற்படுத்தப்பட்டோர், தலித், சிறுபான்மையினருக்கும் பாஜ அரசு உரிய மரியாதை தரவில்லை’’ என்றார். முன்னதாக அலிகாரில் யாத்திரை மேற்கொண்ட ராகுல் அங்கு பேசுகையில், ‘‘அலிகார் பூட்டு தொழிலுக்கு புகழ்பெற்றது.

ஆனால் சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்கள் இந்திய சந்தையில் குவிந்து கிடப்பதால் நமது கைவினைஞர்கள், குடிசைத் தொழில் செய்பவர்கள் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். இதை பயன்படுத்தி பெரிய நிறுவனங்கள் வளமான அறுவடை செய்கின்றன. அடுத்த முறை நான் இங்கு வரும் போது சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை பார்க்காமல், ‘மேட் இன் அலிகார்’ பொருட்களை பார்க்க விரும்புகிறேன். நாட்டில் அதிகரித்து வரும் வெறுப்புக்கு காரணம் அநீதி. ஏழைகள், விவசாயிகள், இளைஞர்கள், பெண்களுக்கு அநீதி இழைக்கப்படுகிறது. இந்த அநீதிக்கு எதிராக நீதி யாத்திரை நடத்துகிறோம்’’ என்றார்.

The post ஆக்ராவில் தொண்டர்கள் உற்சாகம் ராகுல் யாத்திரையில் அகிலேஷ் பங்கேற்றார் appeared first on Dinakaran.

Tags : AKILESH ,AGRA ,AKILESH YADAV ,SAMAJWADI ,INDIA ,Akhilesh ,Dinakaran ,
× RELATED அகிலேஷ் யாதவ் கன்னாஜ் தொகுதியில் போட்டி