×

ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை; `ஹிட் அண்ட் ரன்’ சட்டத்தை அமல்படுத்தாதது ஏன்?.. லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தால் பின்வாங்கிய ஒன்றிய அரசு

புதுடெல்லி: நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப் பட்ட 3 புதிய குற்றவியல் சட்டங்கள் வரும் ஜூலை 1-ம் தேதி முதல் அமல்படுத்தப்பட உள்ளதாக கூறியுள்ள ஒன்றிய அரசு, `ஹிட் அண்ட் ரன்’ சட்டப்பிரிவை அமல்படுத்துவதை நிறுத்தி வைத்துள்ளது. இந்திய தண்டனை சட்டம், இந்திய குற்றவியல் நடைமுறைசட்டம், இந்திய சாட்சியங்கள் சட்டம் ஆகியவை ஆங்கிலேயர்கள் ஆட்சி காலத்தில் கொண்டு வரப்பட்டவை. இந்தச் சட்டங்களை பின்பற்றித்தான், குற்றச் செயல்களில் ஈடுபடுவோருக்கு தண்டனை விதிக்கப்பட்டு வருகிறது. ஆனால், இந்தச் சட்டங்கள் காலமாற்றத்துக்கு ஏற்ற வகையில் இல்லை என புகார்கள் எழுந்தன. இதையடுத்து, அவற்றுக்கு மாற்றாக, பாரதிய நியாய சன்ஹிதா, பாரதிய நாகரிக் சுரக் ஷா சன்ஹிதா, பாரதிய சாக் ஷியா ஆகிய 3 திருத்தப்பட்ட சட்ட மசோதாக்களை ஒன்றிய அரசு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது. குடியரசுத் தலைவரும் இந்த புதிய மசோதாக்களுக்கு ஒப்புதல் அளித்தார்.

இந்நிலையில், 3 புதிய குற்றவியல் சட்டங்கள், வரும் ஜூலை 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வரும் என ஒன்றிய உள்துறை அமைச்சகம் நேற்று அறிவித்தது. தீவிரவாதம் குறித்து பாரதிய நியாய சன்ஹிதா சட்டத்தில் தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான விளக்கம் இந்திய தண்டனைச் சட்டத்தில் இடம்பெறவில்லை. மேலும், தேச துரோகப் பிரிவு நீக்கப்பட்டு, அரசுக்கு எதிரான குற்றங்கள் என்ற புதிய பிரிவு அந்தச் சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. சர்ச்சைக்குரிய ‘ஹிட் அண்ட் ரன்’ ெதாடர்பான சட்டப்பிரிவுக்கு வாகன ஓட்டுநர்கள் போராட்டம் நடத்தினர்.

அதாவது இந்திய தண்டனைச் சட்டமான புதிய பாரதிய நியாய சன்ஹிதாவில் `ஹிட் அண்ட் ரன்’ சட்டப்பிரிவில், சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. முன்பிருந்த இந்திய தண்டனைச் சட்டத்தின் ‘ஹிட் அண்ட் ரன்’ பிரிவில், சாலை விபத்தில் எதிர்பாராதவிதமாக ஒருவர் கொல்லப்பட்டால், ஓட்டுநருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்படும். ஆனால், தற்போது கொண்டு வரப்பட்டிருக்கும் திருத்தத்தின்படி, சாலை விபத்தில் எதிர்பாராத விதமாக ஒருவர் கொல்லப்பட்டால் ஓட்டுநருக்கு அபராதத்துடன் ஏழு ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை விதிக்க முடியும்.

அதுமட்டுமல்லாமல், குற்றவாளி தப்பித்துவிட்டாலோ அல்லது சம்பவம் குறித்து உடனடியாகப் புகாரளிக்கத் தவறினாலோ 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 7 லட்சம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படும். இதன் காரணமாகத்தான், குஜராத், ராஜஸ்தான், மகாராஷ்டிர, மத்தியப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் லாரி ஓட்டுநர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்று ஒன்றிய உள்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிவிப்பின்படி, ஜூலை 1 முதல் புதிய குற்றவியல் சட்டம் அமலுக்கு வரும் நிலையில், `ஹிட் அண்ட் ரன்’ சட்டப்பிரிவு மட்டும் அமல்படுத்தப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இச்சட்டப் பிரிவு குறித்து சம்பந்தப்பட்ட கனரக வாகன சங்கங்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர் அமல்படுத்தப்படும் என்று ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

The post ஜூலை 1 முதல் 3 புதிய குற்றவியல் சட்டங்கள் நடைமுறை; `ஹிட் அண்ட் ரன்’ சட்டத்தை அமல்படுத்தாதது ஏன்?.. லாரி ஓட்டுனர்களின் போராட்டத்தால் பின்வாங்கிய ஒன்றிய அரசு appeared first on Dinakaran.

Tags : Union Government ,NEW DELHI ,EU GOVERNMENT ,Dinakaran ,
× RELATED ஒன்றிய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வை தொடர்ந்து மேலும் சலுகை