×

மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை

சென்னை: தமிழ்நாடு மண்பாண்ட தொழிலாளர் குலாலர் சங்கத்தின் மாநில செயற்குழு கூட்டம் மாநில தலைவர் சேம.நாராயணன் தலைமையில் சென்னை, தி.நகரில் உள்ள பத்மாவதி வெங்கடேஸ்வரா மஹாலில் இன்று காலை நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் குறித்து மாநில தலைவர் சேம.நாராயணன் நிருபர்களிடம் கூறியதாவது:
மண்பாண்ட தொழிலாளர்கள் பருவமழை காலங்களில் தொழில் செய்ய முடியாத நிலை உள்ளது. இதை கருத்தில் கொண்டு மழைக்கால நிவாரண உதவித்தொகையாக தமிழக அரசு தலா ரூ.5 ஆயிரம் வழங்கி வருகிறது. இந்த உதவித்தொகையை ரூ.10,000ஆக உயர்த்தி வழங்க வேண்டும்.

மத்திய அரசும், மாநில அரசும் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுத்து, அதன் அடிப்படையில் இடஒதுக்கீடு செய்தால் மிகவும் பிற்படுத்தப்பட்ட மக்கள் பயன்பெறுவதோடு உண்மையான சமூகநீதிக்கு வழிவகுக்கும். தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக அரசு பச்சரிசி, சர்க்கரை, கரும்பு வழங்குவது போன்று புதுப்பானையில் பொங்கலிட களிமண்ணால் ஆன ஒரு புதுப்பானையும், புது அடுப்பும் விலையில்லாமல் வழங்க வேண்டும்.

மண்பாண்டங்களில் உணவை சமைத்து சாப்பிடும் நலன்களை பற்றி எதிர்கால சந்ததியினர்கள் தெரிந்துகொள்ளும் வகையில் தமிழக அரசு பாடப்புத்தகத்தில் ஒரு பாடப்பிரிவை ஏற்படுத்திட வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் நலவாரியத்தில் இதுநாள் வரை பதிவு செய்திட்ட அனைத்து தொழிலாளர்களுக்கும் மின்சாரத்தால் இயங்கக்கூடிய மின் சக்கரம் விலையில்லாமல் மத்திய, மாநில அரசுகள் வழங்க வேண்டும். பல ஆண்டு காலமாக மண்பாண்டம் செய்யும் தொழிலாளர்களின் இடத்திற்கு அடிமனை பட்டா வழங்க முதல்வர் முன்வர வேண்டும். மண்பாண்ட தொழிலாளர்கள் குடும்பத்தினர்களுக்கும் பசுமை வீடுகள் கட்டித்தர வேண்டும்.மண்பாண்ட தொழில் செய்கின்ற மக்கள் மாற்றுத்தொழிலாக தற்போது நாட்டு செங்கல் செய்வதற்குரிய களிமண் விலையில்லாமல் எடுக்க அரசு அனுமதி வழங்க வேண்டும். தமிழகத்தில் குலால சமூக மக்கள் 40 லட்சம் பேர் பரவலாக வசித்து வருகிறார்கள். இந்த சமூக மக்களுக்கு உரிய அரசியல் பங்களிப்பை வருகின்ற நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தலில் யார் தருகிறோர்களோ அந்த அரசியல் கட்சிக்கு ஆதரவு தர செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

The post மண்பாண்ட தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரண உதவித்தொகையை ரூ.10 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும்: தமிழக அரசுக்கு கோரிக்கை appeared first on Dinakaran.

Tags : TAMIL ,Chennai ,Executive Committee ,Tamil Nadu ,Manbandana Workers Guild Association ,President ,Sema. Narayanan ,Chennai, T. ,Padmavati Venkateswara Mahal ,Narayanan ,Tamil Nadu government ,
× RELATED மோடி மீது நடவடிக்கை எடுக்கக்கோரி கமிஷனரிடம் புகார்