×

கம்பத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் வார சந்தை திறப்பு

கம்பம், பிப். 25: கம்பத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய வாரச்சந்தையை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக துவக்கி வைத்தார். கம்பம் நகராட்சிக்கு சொந்தமான வாரச்சந்தை அரசு போக்குவரத்து பணிமனை எதிரே செயல்பட்டு வருகிறது. இங்கு வாரந்தோறும் செயல்படும் வாரச்சந்தையில் காய்கறிகள், பழங்கள், பலசரக்குகள் விற்பனை செய்யப்படுகின்றன.

கேரள மாநில எல்லையையொட்டி அமைந்துள்ளதால் இந்த வாரச்சந்தைக்கு உள்ளூர் பொதுமக்கள் மட்டுமின்றி கேரள மாநிலத்தை சேர்ந்த பொதுமக்களும் அதிகளவில் வந்து செல்கின்றனர். இந்நிலையில் கடந்த 2022ம் ஆண்டு கம்பம் நகராட்சி சார்பில் கலைஞர் நகர்ப்புற திட்டத்தின் கீழ் ரூ.7 கோடியே 75 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக 262 கடைகள், 23 வணிக வளாக கடைகள், வாகனங்கள் நிறுத்துமிடம், வியாபாரிகள், சுமை தூக்கும் தொழிலாளர்கள் ஓய்வெடுக்கும் அறை, கழிப்பறை கட்டிடங்கள் கட்டப்பட்டு பணிகள் நிறைவடைந்தன.

இதன் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. காணொலி வாயிலாக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலைஞர் நூற்றாண்டு விழா வாரச்சந்தையை திறந்து வைத்தார். கம்பம் சந்தை வளாகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கம்பம் நகர்மன்ற தலைவர் வனிதா நெப்போலியன் தலைமை வகித்தார். கம்பம் எம்எல்ஏ ராமகிருஷ்ணன், நகர்மன்ற துணை தலைவர் சுனோதா செல்வகுமார், நகராட்சி ஆணையாளர் வாசுதேவன், நகராட்சி பொறியாளர் அய்யனார் முன்னிலை வகித்தனர்.

முதல்வர் திறந்து வைத்த பின் வாரச்சந்தை வளாகத்தில் மரக்கன்றுகள் நடவு செய்யப்பட்டன. இந்நிகழ்ச்சியில் உதவி பொறியாளர் சந்தோஷ்குமார், சுகாததார அலுவலர் அரசகுமார், வருவாய் ஆய்வாளர் ஆரோக்கியம், கம்பம் திமுக தெற்கு நகர செயலாளர் பால்பாண்டிராஜா, வழக்கறிஞர் துரை நெப்போலியன் மற்றும் கவுன்சிலர்கள், கட்சி நிர்வாகிகள், வியாபாரிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.

The post கம்பத்தில் ரூ.7.75 கோடி மதிப்பீட்டில் வார சந்தை திறப்பு appeared first on Dinakaran.

Tags : Pillar ,Pole, Pip ,Chief Minister ,Pawar ,K. Stalin ,Warachandai Government Transport Workshop ,Gampam Municipality ,Dinakaran ,
× RELATED கோடை விடுமுறையையொட்டி, கொடைக்கானலில்...