×

கங்கை நதியில் புனித நீராட சென்றபோது பரிதாபம் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 22 பேர் பலி

கஸ்கஞ்ச்: உத்தரபிரதேசத்தில் டிராக்டர் குளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகினர். மகா பூர்ணிமாவை முன்னிட்டு நேற்று கங்கை நதியில் புனித நீராட ஏராளமானோர் குவிந்தனர். உத்தரபிரதேசம் கஸ்கஞ்ச் மாவட்டத்தில் பக்தர்களை ஏற்றி கொண்டு டிராக்டர் டிராலி சென்று கொண்டிருந்தது. இதில் அதிகளவில் பெண்கள், குழந்தைகள் சென்றனர். பாட்டியாலி – தரியவ்கஞ்ச் சாலையில் சென்று கொண்டிருந்தபோது முன்னால் சென்ற ஒரு வாகனத்தை டிராக்டர் ஓட்டுநர் முந்தி செல்ல முயன்றுள்ளார். இதில் கட்டுப்பாட்டை இழந்து நிலைதடுமாறிய டிராக்டர் அங்கிருந்த 8 அடி ஆழ குளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற மீட்பு குழுவினர் அப்பகுதி மக்கள் உதவியுடன் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 8 குழந்தைகள் உள்பட 22 பேர் பலியாகி விட்டனர். 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

விபத்து குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் தன் ட்விட்டர் பதிவில், “கஸ்கஞ்ச் சாலை விபத்து குறித்து அறிந்து மிகவும் வேதனை அடைந்துள்ளேன். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு என் இரங்கல். காயமடைந்தவர்களுக்கு முறையான இலவச சிகிச்சை அளிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. பலியானோர் குடும்பத்துக்கு ரூ. 2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 நிவாரணம் அளிக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

The post கங்கை நதியில் புனித நீராட சென்றபோது பரிதாபம் குளத்தில் டிராக்டர் கவிழ்ந்து 22 பேர் பலி appeared first on Dinakaran.

Tags : Paritapam pond ,Ganga ,Kasganj ,Uttar Pradesh ,river Ganga ,Maha Purnima ,Kasganj district ,Ganga river ,Dinakaran ,
× RELATED கொல்லிமலையில் குவிந்த சுற்றுலா...