×

சவுராஷ்டிராவுடன் ரஞ்சி காலிறுதி தமிழ்நாடு முன்னிலை

கோவை: சவுராஷ்டிரா அணியுடனான ரஞ்சி கோப்பை காலிறுதியில், தமிழ்நாடு அணி முதல் இன்னிங்சில் முன்னிலை பெற்றது. கேப்டன் சாய் கிஷோர், பாபா இந்திரஜித், பூபதி குமார் அரை சதம் விளாசினர். ராமகிருஷ்ணா கல்லூரி மைதானத்தில் நடக்கும் இப்போட்டியில், டாஸ் வென்று பேட் செய்த சவுராஷ்டிரா முதல் இன்னிங்சில் 183 ரன்னில் சுருண்டது. அடுத்து களமிறங்கிய தமிழ்நாடு முதல் நாள் ஆட்ட நேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 21 ரன் எடுத்திருந்தது (10 ஓவர்). கேப்டன் சாய் கிஷோர் 6 ரன், நாராயண் ஜெகதீசன் 12 ரன்னுடன் நேற்று 2ம் நாள் ஆட்டத்தை தொடங்கினர்.

இருவரும் 2வது விக்கெட்டுக்கு 54 ரன் சேர்த்தனர். ஜெகதீசன் 37 ரன் எடுத்து பார்த் பட் பந்துவீச்சில் வெளியேற, பிரதோஷ் ரஞ்சன் பால் 13 ரன்னில் பெவிலியன் திரும்பினார். பொறுப்புடன் விளையாடி அரைசதம் அடித்த சாய் கிஷோர் 60 ரன் (144 பந்து, 6 பவுண்டரி, 3 சிக்சர்) விளாசி ஆட்டமிழந்தார். தமிழ்நாடு 50.4 ஓவரில் 134 ரன்னுக்கு 4 விக்கெட் இழந்து சற்றே தடுமாறிய நிலையில், பாபா இந்திரஜித் – பூபதிகுமார் இணை பொறுப்புடன் விளையாடி ஸ்கோரை உயர்த்தினர்.

சதம் விளாசுவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், இந்திரஜித் 80 ரன் எடுத்து (139 பந்து, 6 பவுண்டரி, 1 சிக்சர்) தர்மேந்திரசிங் ஜடேஜா பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து அவுட்டானார். பூபதி குமார் 65 ரன் எடுத்து (134 பந்து, 11 பவுண்டரி) டோடியா பந்துவீச்சில் கிளீன் போல்டானார். இந்திரஜித் – பூபதி ஜோடி 5வது விக்கெட்டுக்கு 119 ரன் சேர்த்தது குறிப்பிடத்தக்கது. 2வது நாள் முடிவில் தமிழ்நாடு 6 விக்கெட் இழப்புக்கு 300 ரன் குவித்துள்ளது (100 ஓவர்). விஜய் சங்கர் 14, முகமது அலி 17 ரன்னுடன் களத்தில் உள்ளனர். கை வசம் 4 விக்கெட் இருக்க 117 ரன் முன்னிலை பெற்றுள்ள தமிழ்நாடு இன்று 3ம் நாளில் வலுவான நிலையை எட்டும் முனைப்புடன் களமிறங்குகிறது.

* விதர்பா 460 ரன் குவிப்பு

நாக்பூரில் கர்நாடகா அணியுடன் நடக்கும் காலிறுதியில், விதர்பா அணி முதல் இன்னிங்சில் 460 ரன் குவித்து ஆல் அவுட்டானது (143.1 ஓவர்). அதர்வா டெய்டே 109 ரன், யஷ் ரத்தோட் 93, கருண் நாயர் 90 ரன் விளாசினர். கர்நாடகா தரப்பில் கவரெப்பா 4, ஹர்திக் ராஜ் 2, கவுஷிக், வைஷாக், தீரஜ் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய கர்நாடகா, 2ம் நாள் முடிவில் 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன் எடுத்துள்ளது. ரவிகுமார் சமர்த் 43, நிகின் ஜோஸ் 20 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* முஷீர் இரட்டை சதம்

பரோடா அணிக்கு எதிராக பந்த்ரா குர்லா வளாக மைதானத்தில் நடக்கும் காலிறுதியில், மும்பை அணி முதல் இன்னிங்சில் 384 ரன்னுக்கு ஆட்டமிழந்தது. பிரித்வி ஷா 33, லால்வானி 19, சூர்யான்ஷ் 20 ரன், ஹர்திக் தமோர் 57 ரன், ஷர்துல் தாகூர் 17 ரன் எடுத்தனர். முஷீர் கான் 203 ரன்னுடன் (357 பந்து, 18 பவுண்டரி) ஆட்டமிழக்காமல் இருந்தார். பரோடா பந்துவீச்சில் பார்கவ் பட் 7, நினத் ரத்வா 3 விக்கெட் வீழ்த்தினர். 2ம் நாள் ஆட்ட முடிவில் பரோடா 2 விக்கெட் இழப்புக்கு 127 ரன் எடுத்துள்ளது. ஷாஸ்வத் ராவத் 69 ரன், கேப்டன் விஷ்ணு சோலங்கி 23 ரன்னுடன் களத்தில் உள்ளனர்.

* ஆந்திரா திணறல்

ஆந்திரா அணியுடன் இந்தூர் ஹோல்கர் ஸ்டேடியத்தில் நடக்கும் ரஞ்சி காலிறுதியில், டாஸ் வென்று பேட் செய்த மத்திய பிரதேசம் முதல் இன்னிங்சில் 234 ரன் குவித்து ஆல் அவுட்டானது (81.1 ஓவர்). யஷ் துபே 64, ஹிமான்ஷு 49, கார்த்திகேயா 29 ஹர்ஷ் 17 ரன் எடுத்தனர். சரன்ஷ் ஜெயின் 41 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். ஆந்திரா பந்துவீச்சில் சசிகாந்த் 4, நிதிஷ் குமார் 3, கிரிநாத், சோயிப் கான் தலா 1 விக்கெட் வீழ்த்தினர். அடுத்து களமிறங்கிய ஆந்திரா முதல் இன்னிங்சில் 172 ரன்னுக்கு சுருண்டது. 62 ரன் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய ம.பி. 2ம் நாள் முடிவில் விக்கெட் இழப்பின்றி 21 ரன் எடுத்துள்ளது.

The post சவுராஷ்டிராவுடன் ரஞ்சி காலிறுதி தமிழ்நாடு முன்னிலை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Ranji ,Saurashtra ,Coimbatore ,Ranji Trophy ,-final ,Sai Kishore ,Baba Indrajith ,Bhupathi Kumar ,Ramakrishna College ,Dinakaran ,
× RELATED தமிழ்நாடு, புதுச்சேரியில் நாளை...