×

இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம்

ராமேஸ்வரம்: இலங்கை சிறையில் உள்ள ஐந்து மீனவர்களை விடுவிக்க வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் நேற்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து கடந்த பிப்.4ம் தேதி பாக்ஜலசந்தி கடலுக்கு 2 படகுகளில் மீன் பிடிக்க சென்ற 23 தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இவர்களில் 20 பேருக்கு 18 மாதம் ஒத்திவைக்கப்பட்ட சிறை தண்டனை விதித்து விடுதலை செய்யப்பட்னர். மேலும், படகோட்டிகள் ராபர்ட், பெக்கர், மெல்சன் ஆகியோருக்கு அந்நாட்டு நீதிமன்றம் சிறை தண்டனை விதித்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தது.

2 விசைப்படகுகள் அரசுடைமையாக்கப்பட்டன. மேலும், கடந்த 8ம் தேதி சிறை பிடித்த 19 மீனவர்களில் 18 பேரை விடுதலை செய்தனர். படகோட்டி ஜால்சனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. ஒரு விசைப்படகும் அரசுடைமையாக்கப்பட்டது. ஏற்கனவே, நம்புமுருகன் இலங்கை சிறையில் உள்ளார். இந்த 5 பேரையும் விடுதலை செய்ய வேண்டும், அரசுடைமையாக்கிய 3 படகுகளையும் விடுவிக்கக் கோரி, ராமேஸ்வரம் மீனவர்கள் கடந்த 9 நாட்களாக காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

மீனவர்கள் மீன் பிடிக்க கடலுக்கு செல்லாததால், 10வது நாளான நேற்றும் ராமேஸ்வரம் துறைமுகத்தில் 500க்கும் மேற்பட்ட விசைப்படகுகள் கரை நிறுத்தம் செய்யப்பட்டன. இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி தங்கச்சிமடத்தில் பேருந்து நிறுத்தம் அருகில் நேற்று மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தை துவக்கினர். இதில், பெண்கள் உட்பட ஏராளமான விசைப்படகு மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். மேலும் கம்யூனிஸ்ட் கட்சியினர், அகில இந்திய மீனவர் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளை சேர்ந்தவர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். மீனவர்கை விடுவிக்கும் வரை போராட்டம் ெதாடருமென மீனவர்கள் தெரிவித்தனர்.

The post இலங்கை சிறையில் உள்ள 5 மீனவர்களை விடுவிக்க கோரி காலவரையற்ற உண்ணாவிரதம் appeared first on Dinakaran.

Tags : Lankan ,Rameswaram ,Tamil Nadu ,Bagjalasandi sea ,
× RELATED இலங்கை தமிழ் அகதிகளுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கக் கோரிய வழக்கு..!!