×

சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 2 லட்சமாவது பணி நியமன ஆணை வழங்கப்பட்டது

சென்னை: வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் சார்பாக இன்று (24.02.2024) சென்னை ராணி மேரி கல்லூரி வளாகத்தில், கலைஞர் நூற்றாண்டு விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக 100வது மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சேகர்பாபு மற்றும் அமைச்சர் சி.வெ. கணேசன் இம்முகாமினை துவக்கி வைத்து, நேர்காணல் நடைபெற்ற அரங்குகளையும். துறையின் செயல்பாடுகளை விளக்கும் காட்சிக்கூடத்தையும் பார்வையிட்டார்கள். இத்துறையின் தனியார் துறையில் பணிவாய்ப்பு பெற்ற இரண்டு லட்சமாவது நபருக்கு பணி நியமன ஆணையினை அமைச்சர் பெருமக்கள் வழங்கி விழாப் பேருரை ஆற்றினார்கள்.

இந்நிகழ்ச்சியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பேசியபோது; கலைஞர் நூற்றாண்டு விழாவின் 100 வது வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு இலட்சமாவது பணி ஆணையை வழங்கி இரண்டு இலட்சம் குடும்பங்களில் விளக்கேற்றிய பெருமை இத்துறையைச் சேரும் என்று கூறினார்கள்.
தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர் பேசியபோது; “மாபெரும் வேலைவாய்ப்பு முகாம்களில் முதல் நிகழ்ச்சி காஞ்சிபுரம் 28.08.2021 அன்று நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 15.10.2022 அன்று சென்னை புதுக்கல்லூரியில் ஒரு இலட்சமாவது பணி ஆணையை வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து, 22.07.2023 அன்று சென்னை மாநிலக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் 1,50,000 ஆவது பணி ஆணையை வழங்கினார். தற்போது, இன்று நடைபெற்ற 100வது வேலைவாய்ப்பு முகாமில் இரண்டு இலட்சமாவது பணி ஆணை வழங்கப்படுகின்றது எனத் தெரிவித்தார்கள். மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் துவக்கி வைத்த நான் முதல்வன் திட்டத்தின் வழி இளைஞர்களுக்கு பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் மூலம் படித்த இளைஞர்களுக்கு போட்டித் தேர்வுகளுக்கான பயிற்சிகள் வழங்கப்படுவதாகவும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்களில் பெருமளவில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கி இளைஞர்களின் வாழ்வில் ஒளி ஏற்றப்படுகிறது எனவும் இதுபோன்ற வேலைவாய்ப்பு முகாம்களில் இளைஞர்கள் பங்கேற்று பயன்பெறுமாறு” கேட்டுக்கொண்டார்கள். இம்முகாமில் 260 தனியார்துறை வேலையளிக்கும் நிறுவனங்களும், 6,534 வேலைநாடுநர்களும் கலந்து கொண்டனர். 6 மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 1,062 வேலைநாடுநர்கள் தனியார்துறை நிறுவனங்களில் பணிநியமனம் பெற்றனர்.

மேலும் இம்முகாமில் முதல்கட்ட நேர்முகத்தேர்வில் 852 நபர்கள் தேர்ச்சி பெற்று இரண்டாம் கட்டத் தேர்வுக்கு தகுதி பெற்றனர். இந்நிகழ்ச்சியில் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையின் ஆணையர் .எ.சுந்தரவல்லி, சென்னை மாவட்ட ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே, தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை இயக்குநர் மு.வே. செந்தில்குமார், இராணி மேரி கல்லூரி முதல்வர் முனைவர் .பா.உமா மகேஸ்வரி, மற்றும் துறையின் உயர் அலுவலர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

The post சென்னையில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம்: 2 லட்சமாவது பணி நியமன ஆணை வழங்கப்பட்டது appeared first on Dinakaran.

Tags : Giant Private Sector Employment Camp ,Chennai ,Department of Employment and Training ,Giant Private Employment ,Camp ,Queen Mary ,College ,Artist Centennial Festival ,Minister ,Sekharbhabu ,C. Fri ,Dinakaran ,
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...