×

சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைப்பதா? தோவாளையில் கனரக வாகன ஓட்டுனர்கள் மறியல்

*பொதுமக்களும் போராட்டம்

* போலீஸ் பேச்சுவார்த்தையில் தீர்வு

ஆரல்வாய்மொழி : கனிமவளம் ஏற்றி செல்லும் வாகனங்களை சோதனை என்ற பெயரில் பல மணி ேநரம் நிறுத்தி வைப்பதை கண்டித்து தோவாளை அருகே கனரக வாகன ஓட்டுனர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.குமரி மாவட்டத்தில் இருந்து கேரளாவுக்கு கனிம வளங்கள் கொண்டு செல்லும் லாரிகளால் தொடர்ந்து விபத்துக்கள் நடைபெற்று வருவதால், குமரி மாவட்டத்திற்குள் லாரிகள் வந்து செல்ல கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு கடந்த 20ம் தேதி முதல் அமலுக்கு வந்தது.

அதன் அடிப்படையில் கனிம வளங்களை ஏற்றி வருகின்ற காலி கனரக வாகனங்கள் இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை மட்டுமே இயங்க அனுமதிக்கப்படுவதாகவும், கனிம வளங்களை ஏற்றி செல்லும் சரக்கு வாகனங்கள் காலை 6 மணி முதல் காலை 10 மணி வரை மற்றும் பிற்பகல் 3 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் மாவட்டத்திற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டுள்ளது.

மேலும் புதிய உத்தரவு அமலுக்கு வந்த நாளிலிருந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் உத்தரவின் பேரில் சோதனை சாவடிகளில் இன்ஸ்பெக்டர்கள் தலைமையில் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மற்ற நேரங்களில் டாரஸ் லாரிகள் அனுமதிக்கப்படுவதில்லை. மேலும் சோதனைச் சாவடிகளில் கனரக வாகனங்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டு அதிக பாரம் ஏற்றி வருகின்ற வாகனங்கள் எடை போடப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆரல்வாய்மொழி சோதனைச்சாவடி வழியாக சென்ற டாரஸ் லாரிகளுக்கு சோதனை நடந்தது.அந்த லாரிகளில் முறையான அளவு பாரம் ஏற்றப்பட்டு உள்ளதா என்பது குறித்து சோதனை செய்வதற்காக மயிலாடி விலக்கு பகுதியில் உள்ள எடை மேடைக்கு கொண்டு செல்லப்பட்டன. ஒரே நேரத்தில் 150 க்கும் மேற்பட்ட லாரிகள் குவிந்த காரணத்தினால் பல கிலோ மீட்டர் தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் இருபுறமும் நின்றது.

மேலும் தொடர்ந்து லாரிகள் வந்த வண்ணம் இருந்ததால் நாகர்கோவிலில் இருந்து தோவாளை நெடுஞ்சாலை கடுமையான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. நாகர்கோவிலில் இருந்து திருநெல்வேலி செல்லும் பேருந்துகள் வெள்ளமடம் வரை வந்து பின்னர் குமரன்புதூர் சாலை வழியாக நான்கு வழிச்சாலைக்கு திரும்பி விடப்பட்டன, அங்கிருந்து தேவசகாயம்மவுண்ட் மங்கம்மா சாலை வழியாக ஆரல்வாய்மொழிக்கு வந்தது.

இதன் காரணமாக தோவாளை பகுதிக்கு போக்குவரத்து தடை செய்யப்பட்டது. இதனால் நேற்று முன்தினம் மாலையில் பள்ளி முடிந்ததும் மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் வீட்டுக்கு செல்ல முடியாமல் பல மணி நேரம் பேருந்துக்காக காத்து நிற்கின்ற நிலை ஏற்பட்டது. இதனிடையே தொடர்ந்து கனிம வளங்களை ஏற்றி வந்த வாகனங்கள் சோதனை என்ற பெயரில் நிறுத்தி வைக்கப்பட்டு காலதாமதம் ஏற்படுவதாகவும் இதனால் குறித்த நேரத்தில் செல்ல முடியாமல் காத்துக் கிடக்கின்ற சூழ்நிலை ஏற்படுவதாகவும் கூறி திடீரென்று கனரக வாகன ஓட்டுனர்கள் நாகர்கோவில்- தோவாளை நெடுஞ்சாலையில் மயிலாடி விலக்கு அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

டாரஸ் லாரிகளை சோதனை என்ற பெயரில் காலதாமதம் செய்யாமல் உடனடியாக வாகனங்களை சோதனையிட்டு குறித்த நேரத்திற்கு அனுப்பி விட வேண்டும். சோதனை என்ற பெயரில் காலதாமம் செய்வதால் குறித்த நேரத்திற்கு எங்களால் குறித்த இடத்திற்கு செல்ல முடியாமல் வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகிறது. என்று அவர்கள் வலியுறுத்தினர்.

தோவாளை பகுதிக்கு அரசு பேருந்து தடை செய்யப்பட்டதை கண்டிக்கும் விதமாக தோவாளை ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் துணைத் தலைவர் தாணு தலைமையிலான பொதுமக்களும் அங்கே கூடி சாலை மறியலில் ஈடுபட்டனர். உடனடியாக பொதுமக்களுக்கும் பள்ளி மாணவ மாணவிகளுக்கும் பாதிப்பு ஏற்படாதவாறு அரசு பேருந்துகள் தோவாளை வழியாக செல்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.

இத்தகவல் அறிந்ததும் கூடுதல் காவல் கண்காணிப்பாளர் சுப்பையா மற்றும் வடசேரி காவல் நிலைய ஆய்வாளர் காசிபாண்டி ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ஊராட்சி மன்ற தலைவர் நெடுஞ்செழியன் மற்றும் சாலை மறியலில் ஈடுபட்ட கனிமவளங்களை ஏற்றி வந்த கனரக வாகனஓட்டுனர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தையில் உடனடியாக தோவாளை வழியாக அரசு பேருந்துகள் இயக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்த அதன் அடிப்படையிலும் கனிம வளங்களை ஏற்றி வந்த டாரஸ் லாரி டிரைவர்களிடம் உடனடியாக ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு உடனடியாக வாகனங்களை அனுப்புவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்ததன் அடிப்படையில் போராட்டம் கைவிடப்பட்டது.

The post சோதனை என்ற பெயரில் பல மணி நேரம் காக்க வைப்பதா? தோவாளையில் கனரக வாகன ஓட்டுனர்கள் மறியல் appeared first on Dinakaran.

Tags : DOWALE ,Kumari ,Dhawala ,Dinakaran ,
× RELATED குமரி மாவட்டத்தில் பெய்து வரும்...