×

நாகர்கோவில் அருகே பெண் சார்பதிவாளரின் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

நாகர்கோவில் : நெல்லை மாவட்டம் வி.கே.புரம் பெண் சார்பதிவாளர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், குமரி மாவட்டத்தில் உள்ள அவரது மகள் வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு போலீசார் நேற்று சோதனை நடத்தினர்.திருநெல்வேலி மாவட்டம் வி.கே. புரம் சார் பதிவாளர் அலுவலகத்தில் சார் பதிவாளர் (பொறுப்பு) அலுவலராக இருப்பவர் வேலம்மாள். இவர் கடந்த 2014 ம் ஆண்டு முதல் 2021 ம் ஆண்டு வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக திருநெல்வேலி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிவு செய்து இருந்தனர். இந்த வழக்கின் அடிப்படையில் நேற்று திருநெல்வேலியில் உள்ள அவரது வீட்டில் அம்மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

சார்பதிவாளர் வேலம்மாளின் மகள் கிருஷ்ணவேணியின் வீடு நாகர்கோவில் அருகே உள்ள மருங்கூர் பகுதியில் உள்ளது. அங்கு நேற்று காலை 7 மணியளவில் குமரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு பிரிவு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஹெக்டர் தர்மராஜ் தலைமையில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சென்று சோதனை நடத்தினர்.அங்கு நடைபெற்ற சோதனையில் வங்கி பண பரிவர்த்தனைகள் செய்ததற்கான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. நேற்று மாலை வரை சோதனை நடந்தது. சோதனையின் போது வீட்டில் கிருஷ்ணவேணி மற்றும் அவரது குடும்பத்தினர் இருந்தனர்.

22 ஆவணங்கள் பறிமுதல்

கிருஷ்ணவேணி வீட்டில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணி வரை சோதனை நடைபெற்றது. இந்த சோதனையில் தனது மகள் கிருஷ்ணவேணிக்கு சார்பதிவாளர் வேலம்மாள் அனுப்பி வைத்த பணம் விபரம் அடங்கிய வங்கி பாஸ் புத்தகங்கள், கிருஷ்ணவேணி பெயரில் போடப்பட்டு இருந்த ரூ.5 லட்சம், 7 லட்சம் எல்.ஐ.சி. பத்திரங்கள் உள்பட சுமார் 22 ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. இவை அனைத்தும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படும் என போலீசார் கூறினர். கிருஷ்ணவேணியின் கணவர் சங்கர், இன்ஜினியர் ஆவார். 2 கொத்தனார்கள் வைத்து கட்டிட பணிகளை மேற்கொண்டு வருகிறார் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.

The post நாகர்கோவில் அருகே பெண் சார்பதிவாளரின் மகள் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை appeared first on Dinakaran.

Tags : Nagercoil ,Nellai district ,V.K.puram ,Kumari district ,district ,V.K. Puram ,Dinakaran ,
× RELATED நாகர்கோவில் அரசு பொறியியல்...