×

வந்தவாசி அருகே நள்ளிரவில் வேலை முடித்து வந்த வாலிபரை வழிமறித்து செல்போன், பணம் பறித்து கத்தியால் வெட்டி காரில் தப்பிய கும்பல்

*100 கி.மீ துரத்தி சென்று போலீசார் பிடித்தனர்

வந்தவாசி : திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த விளாங்காடு கிராமத்தைச் சேர்ந்தவர் முருகேசன் மகன் தமிழரசன்(23). செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகர் பகுதியில் உள்ள கார் உதிரிபாக தொழிற்சாலையில் வேலை செய்து வருகிறார். நேற்று முன்தினம் நள்ளிரவு தமிழரசன் பணி முடித்துவிட்டு வீட்டிற்கு பைக்கில் வந்து கொண்டிருந்தார்.
நள்ளிரவு 12 மணி அளவில் வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமம் அருகே வந்தபோது அங்குள்ள பாஸ்புட் கடை அருகே நின்று கொண்டு இருந்த ஒரு கும்பல் தமிழரசன் வந்த பைக்கை வழிமறித்து கத்தியை காட்டி பணம், செல்போன் ஆகியவற்றை பறித்துள்ளனர்.

அதனை தொடர்ந்து பயத்தில் தமிழரசன் பைக்கில் கிளம்ப முயன்றுள்ளார். அப்போது மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த கத்தியால் தமிழரசன் தலைமீது வெட்டினர். அப்போது அவர் ஹெல்மெட் அணிந்து இருந்ததால் முதுகில் வெட்டு காயம் ஏற்பட்டது. இதனால் அதிர்ச்சியடைந்த தமிழரசன் உடனடியாக பைக்கில் மின்னல் வேகத்தில் 3 கி.மீ தூரம் உள்ள தனது கிராமமான விளாங்காடிற்கு வந்துள்ளார்.

பின்னர், நடந்த சம்பவத்தை தனது தந்தை முருகேசனிடம் கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த முருகேசன் தமிழரசனை உடனடியாக வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச்சென்றார். மேலும் இச்சம்பவம் குறித்து தொலைபேசி மூலமாக கீழ்கொடுங்கலூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனை தொடர்ந்து வந்தவாசி டிஎஸ்பி ராஜூ, கீழ்கொடுங்கநல்லூர் இன்ஸ்பெக்டர் பாலு ஆகியோர் சம்பவம் நடந்த பகுதிக்கு நேரில் சென்று பார்வையிட்டனர். மேலும் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்ததில் வழிப்பறி கும்பல் காரில் தப்பி சென்றது தெரியவந்தது.

உடனடியாக சேத்துப்பட்டு, போளூர், ஆரணி மற்றும் செய்யாறு முழுவதும் வயர்லெஸ் மூலமாக போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். மேலும் வழிப்பறி திருடர்கள் தப்பிச்சென்ற கார் எண் கலர் குறித்து தகவல் கூறியதால் போலீசார் தீவிர வாகன சோதனை மேற்கொண்டனர். கீழ்கொடுங்காலூர் போலீசார் கூறிய கார் போளூர் தாண்டி சென்றது தெரியவந்ததை தொடர்ந்து போளூர் டிஎஸ்பி கோவிந்தசாமி, கடலாடி இன்ஸ்பெக்டர் குமார் கொண்ட போலீஸ் குழுவினர் 100 கி.மீ. தூரம் காரை துரத்தி சென்றனர்.

கார் பருவதமலை அடிவாரத்திற்கு சென்றபோது போளூர் டிஎஸ்பி கடலாடி இன்ஸ்பெக்டர் ஆகியோர் சுற்றி வளைத்து மடக்கிப்பிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த கீழ்கொடுங்காலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலு தலைமையிலான போலீசார் விரைந்து சென்று அவர்களை கைது செய்து காவல் நிலையம் கொண்டு வந்து விசாரணை மேற்கொண்டனர்.

அதில் அவர்கள், ‘காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் டவுன் கம்மாளர் தெருவை சேர்ந்த அரிசி கடை உரிமையாளர் தயாளன் மகன் மணிகண்டன் (26), குளத்தங்கரை தெருவை சேர்ந்த ராமகிருஷ்ணன் மகன் முனிரத்தினம்(23), மேட்டு தெருவை சேர்ந்த ரவி மகன் பிரசன்னா (24), கருணீகர் தெருவை சேர்ந்த மஜித் மகன் இஷான்முகமது (24), அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்த வெங்கடேசன் மகன் விஜி (27) என தெரியவந்தது.

அதனை தொடர்ந்து அவர்கள் மீது வழக்குப்பதிந்து கைது செய்து செல்போன், வழிப்பறி செய்து தப்பியோட பயன்படுத்திய கார், 2 கத்திகளை போலீசார் பறிமுதல் செய்து அவர்களை சிறையில் அடைத்தனர். போலீஸ் விசாரணையில், மணிகண்டன் மீது உத்திரமேரூர் போலீஸ் நிலையத்தில் ஏற்கனவே வழிப்பறி வழக்கு நிலுவையில் உள்ளதும் தெரியவந்தது.
வாலிபரிடம் வழிப்பறி நடத்திய கும்பலை போலீசார் 100 கி.மீட்டர் தூரம் துரத்தி பிடித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post வந்தவாசி அருகே நள்ளிரவில் வேலை முடித்து வந்த வாலிபரை வழிமறித்து செல்போன், பணம் பறித்து கத்தியால் வெட்டி காரில் தப்பிய கும்பல் appeared first on Dinakaran.

Tags : Vandavasi ,Thiruvannamalai district ,Murugesan ,Tamilarasan ,Vilangadu ,Chiramalai Nagar ,Chengalpattu district ,Dinakaran ,
× RELATED அரசு பஸ் கவிழ்ந்து 18 பயணிகள் படுகாயம்; வந்தவாசி அருகே பரபரப்பு