×

கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை விற்பனை முலாம் பழத்திற்கு உரிய விலை கிடைக்குமா?

*தண்டராம்பட்டு விவசாயிகள் எதிர்பார்ப்பு

தண்டராம்பட்டு : கடந்த ஆண்டு ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.13வரை விற்பனையான முலாம் பழத்திற்கு தற்போது உரிய விலை கிடைக்குமா? என தண்டராம்பட்டு விவசாயிகள் எதிர்பார்ப்பில் உள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம் விவசாயம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள மக்கள் பிரதான தொழிலாக வேளாண்மை செய்து வருகின்றனர்.

தற்போது கோடைக்காலம் தொடங்க உள்ளதால் இதனையொட்டி தண்டராம்பட்டு, வாணாபுரம், காம்பட்டு, தானிப்பாடி, வேப்பூர், செக்கடி, மலமஞ்சனூர், தேவரெட்டியகுப்பம், பெருங்குளத்தூர் மற்றும் சாத்தனூர் உள்ளிட்ட கிராமங்களில் அதிக அளவில் முலாம்பழம் பயிர் செய்து உள்ளனர். பருவ கால பயிரான இது ஜனவரி மாதத்தில் நடவு செய்வார்கள்.அதற்கு முன்பாக வயல்வெளியில் நன்கு 3முறை உழவு செய்ய வேண்டும்.

விளைநிலத்தில் இரண்டு அடிக்கு ஒரு கால்வாய் அமைக்க வேண்டும். அந்த கால்வாயில் ஒரு அடிக்கு ஒரு முலாம் பழம் விதை நட வேண்டும். 100 கிராம் விதை ரூ.2,850 முதல் ரூ.3 ஆயிரம் வரை வெளிமார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது. இதனை வாங்கி வந்து நடவு செய்த நாள் முதல், இரண்டு தினங்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்ச வேண்டும்.

களை அதிகமாக இருந்தால் களை வெட்டி உரம் இடவேண்டும். பூச்சித்தாக்குதல் இருந்தால் 7 தினங்களுக்கு ஒரு முறை பூச்சி மருந்து அடிக்க வேண்டும். 55 நாட்கள் முதல் 60 நாட்களுக்குள்ளாக அறுவடை செய்யப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஆண்டு முலாம்பழம் ஒரு கிலோ ரூ.10 முதல் ரூ.13 வரை விற்பனையானது. இந்த ஆண்டு தற்போது ஒரு கிலோ ரூ.17 முதல் ரூ.27 வரை விற்பனை செய்யப்படுகிறது.

கோடைக்காலத்தையொட்டி, தண்டராம்பட்டு பகுதியில் அதிக அளவில் விலை போகும் என்ற எதிர்பார்ப்பில் விவசாயிகள் முலாம்பழம் பயிர் செய்து உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த முறை தண்டராம்பட்டு பகுதியில் முலாம்பழங்கள் விளைச்சல் அதிக அளவில் உள்ளதால் விவசாயிகள் மிகுந்த எதிர்பார்ப்புடன் உள்ளனர்.

The post கடந்த ஆண்டு ஒரு கிலோ ₹10 முதல் ₹13 வரை விற்பனை முலாம் பழத்திற்கு உரிய விலை கிடைக்குமா? appeared first on Dinakaran.

Tags : Dandarampattu ,Thandarampattu ,Tiruvannamalai district ,Dinakaran ,
× RELATED சுட்டெரிக்கும் வெயில் எதிரொலி...