×

வியாபாரியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு

 

கோவை, பிப். 24: வியாபாரியை தாக்கி பணம் மற்றும் செல்போன் பறித்து சென்ற 5 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். கோவை போத்தனூர் அருள்முருகன் நகரை சேர்ந்தவர் முகமத் உசேன் (30). இவர், கோவை தியாகி குமரன் மார்க்கெட்டில் காய்கறி கடை நடத்தி வருகிறார். இவர், கடந்த 21ம் தேதி பைக்கில் தனது நண்பர் சுப்பிரமணியன் என்பவருடன் சென்று கொண்டிருந்தார்.

குறிச்சி குளக்கரை அருகே சென்ற போது 5 பேர் கும்பல் இருவரையும் வழிமறித்தனர். பின்னர் இருவரையும் கத்திமுனையில் மிரட்டி பணம் கேட்டனர். முகமத் உசேன் பணம் கொடுக்க மறுத்ததால் அவரை தகாத வார்த்தைகளால் பேசி அடித்து உதைத்தனர். இதை தொடர்ந்து அவரிடம் இருந்த செல்போன் மற்றும் ரூ.3,500ஐ பறித்தனர். மேலும், அவரது செல்போனில் உள்ள கூகுள் பே மூலம் ரூ.9800ஐ தங்களது கணக்கிற்கு வரவு வைத்து மிரட்டி விட்டு சென்றனர்.

இதுகுறித்து முகமத் உசேன் குனியமுத்தூர் போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அதில், வியாபாரியை மிரட்டி பணம், செல்போன் பறித்தது குனியமுத்தூர் இடையர்பாளையத்தை சேர்ந்த முஜிபுர் ரகுமான் (33), கோவைப்புதூரை சேர்ந்த சுதீர்குமார் (30), பொள்ளாச்சியை சேர்ந்த ஹக்கீம் (30), குனியமுத்தூர் திருவள்ளுவர் நகரை சேர்ந்த முகமத் ஆசிக் (29), மற்றும் சாதிக்(30) என்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் 5 பேரையும் கைது செய்தனர்.

The post வியாபாரியை தாக்கி பணம், செல்போன் பறிப்பு appeared first on Dinakaran.

Tags : Coimbatore ,Mohammad Hussain ,Bothanur Arulmurugan ,Tyagi Kumaran Market ,Dinakaran ,
× RELATED கோவையில் மிக பிரமாண்டமான கிரிக்கெட்...