சென்னை: நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் அக்கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். கட்சிக்குள் இருக்கும் சாதி பிரிவினை மற்றும் சமூக படுகொலையை கண்டு பயணிக்க விரும்பவில்லை என அறிவிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: நான் உங்களை விட்டு பிரிவது அதிர்ச்சி அளிக்கலாம்; வருத்தமடைய செய்யலாம். ஆனால், கட்சிக்குள் நடக்கும் சில விஷயங்களும், சாதி பிரிவினைகளும், சமூகப் படுகொலையையும் கண்டு என்னால் பயணிக்க விருப்பமில்லை. பொதுக்குழு என்ற பெயரில் வெற்று பக்கங்களில் மாநில ஒருங்கிணைப்பாளர்கள், மாவட்ட தொகுதி செயலாளர்களிடம் கையெழுத்து வாங்குவது, நான் பயணிக்கும் கட்சியில் யார் செயலாளர், யார் பொருளாளர் என்பதை அறியாமலும் வெளிப்படுத்தாமலும் பயணிக்க விரும்பவில்லை.
அதேபோல், தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட மாநில ஒருங்கிணைப்பாளரான எனக்கே தெரியாமல், கட்சியின் பொதுச்செயலாளர் என்று கூறப்படும் கருப்பையா என்பவர் யார், கட்சிக்கு என்ன செய்தார், நீங்கள் நிறுத்தியுள்ள வேட்பாளர்கள் பற்றி எல்லாம் உங்களுக்கு தெரியுமா, வேட்பாளர்கள் சிலரை தவிர பலபேரை எப்போதாவது களத்தில் பார்த்து உள்ளீர்களா, கட்சிக்குள் ஜாதி இல்லாமல் செயல்பட முடியுமா என்ற கேள்விக்கு விடைகள் கிடைக்காமல் சில நாட்களாக தவித்து வருகிறேன். மேலும், பாரதிமோகன், திருமால் செல்வன் போன்றோர் கட்சியின் பொருளாளராகவும் துணை செயலாளர் ஆகவும் நியமித்ததாக கூறப்படுவது உங்களுக்கு எல்லாம் தெரியுமா, கட்சியில் அண்ணன் விருப்பப்படி செயல்பாடுகள் உள்ளனவா, அண்ணன் அருகில் உள்ள 3 பேரை தவிர்த்து நீங்கள் அண்ணனை சகஜமாக பார்க்க முடிகிறதா என்பதை அறிந்து கொள்ளுங்கள். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
The post நாம் தமிழர் கட்சியில் இருந்து மாநில ஒருங்கிணைப்பாளர் ராஜா அம்மையப்பன் விலகல்: கட்சிக்குள் சாதி பிரிவினை, சமூக படுகொலையை கண்டு பயணிக்க விரும்பவில்லைஎன குமுறல் appeared first on Dinakaran.