×

விவிபேட் முறைமாற்றத்தில் சந்தேகம் தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்: தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதால் புதிய முறையை கைவிட வலியுறுத்தல்

சென்னை: தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து சென்னையில் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் நேற்று அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். அப்போது விவிபேட் நடைமுறைக்கு திமுக எதிர்ப்பு தெரிவித்தது. வெளிமாநில தேர்தல் பார்வையாளர்கள் நியமிக்க வேண்டும் என்று அதிமுக சார்பில் வலியுறுத்தப்பட்டது. நாடாளுமன்றத்துக்கு வருகிற மே மாதத்துக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டு, புதிய அரசு பதவி ஏற்க வேண்டும். இதனால் மார்ச் மாத தொடக்கத்தில் தேர்தல் அறிவிப்புகளை வெளியிடுவதற்கு ஏதுவாக தேர்தல் பணிகளை இந்திய தேர்தல் ஆணையம் தீவிரப்படுத்தி வருகிறது. இதற்காக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் என பல்வேறு பணிகள் முடிக்கப்பட்டன. தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநிலங்களிலும் தேர்தல் நடத்தும் வேலைகளில் இந்திய தேர்தல் ஆணையம் தற்போது தீவிரம் காட்டத் தொடங்கியுள்ளது.

கடந்த 6 மற்றும் 7ம் தேதி தமிழக தேர்தல் ஏற்பாடுகள் குறித்து தேர்தல் ஆணைய உயர் அதிகாரிகள் சென்னையில் ஆலோசனை நடத்தினர். இதை தொடர்ந்து, தமிழகத்தில் எந்த தேதியில், எத்தனை கட்டமாக தேர்தல் நடத்துவது என்பது குறித்து கருத்து கேட்பதற்காகவும், தேர்தல் பணிகள் மற்றும் தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்துவதற்காகவும் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் 2 நாள் பயணமாக நேற்று முன்தினம் இரவு சென்னை வந்தார். அவருடன், தேர்தல் ஆணையர் அருண் கோயல், மூத்த துணை தேர்தல் ஆணையர்கள் தர்மேந்திர சர்மா, நிதிஷ் வியாஸ், துணை தேர்தல் ஆணையர்கள் அஜய்பாது, மனோஜ்குமார் சாகு, முதன்மை செயலர் மலேய் மாலிக் மற்றும் உயர் அதிகாரிகள் நாராயணன், அனுஜ் சந்தக் ஆகியோரும் வந்தனர்.

தொடர்ந்து, சென்னை விமான நிலையத்திற்கு அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் ேநற்று காலை 10 மணியளவில் தமிழகத்தில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட 10 அரசியல் கட்சி நிர்வாகிகளுடன் இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தனித்தனியாக ஆலோசனை நடத்தினார். அதன்படி, திமுக, அதிமுக, காங்கிரஸ், பாஜ, ஆம் ஆத்மி, பகுஜன்சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், தேமுதிக, தேசிய மக்கள் கட்சியை சேர்ந்த பிரதிநிதிகளிடம் தனித்தனியாக தலா 9 நிமிடம் வரை ஆலோசனை நடத்தினார். அப்போது, நாடாளுமன்ற தேர்தலின்போது தங்கள் கட்சி சார்பில் பல்வேறு கருத்துகளை அவர்கள் தேர்தல் அதிகாரியிடம் எடுத்துக்கூறினர். இந்திய தலைமை தேர்தல் அதிகாரி ராஜீவ்குமார் தலைமையிலான குழுவிடம் ஆலோசனை நடத்திய பிறகு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த தேர்தலுக்கும் இந்த தேர்தலுக்கும் வித்தியாசம் என்னவென்று கேட்டால், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்துக்கும், கட்டுப்பாட்டு இயந்திரத்துக்கும் இடையில் தற்போது விவிபேட் இயந்திரத்தை நடுவில் கொண்டு வந்து வைக்கும் ஒரு புது நிலைப்பாட்டை கொண்டு வந்திருக்கிறார்கள். இது சட்டத்திற்கு புறம்பானது. பொதுமக்கள் அளிக்கின்ற வாக்கு நேரடியாக கண்ட்ரோல் யூனிட்டுக்கு போவதுதான் நம்பகத்தன்மையை உருவாக்கும். இடையிலே ஒரு விவிபேட் வைத்து, அதுவும் வாக்கு எண்ணும்போது விவிபேட்டில் உள்ள வாக்குகளை 100 சதவீதம் பார்க்க முடியாது, எண்ண முடியாது என்று சொல்வது மிகப்பெரிய தவறு, இது சந்தேகத்தை உருவாக்குகிறது. அதோடு மட்டுமல்ல, தேர்தல் ஆணையமே இதுபோன்ற வழிமுறைகளை பின்பற்றினால் ஒன்றில் இருந்து 2 சதவீதம் வரை தவறு நடப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது என்று அவர்களே ஒத்துக் கொள்கிறார்கள். அப்படி ஒத்துக்கொள்கின்றபோது, ஒரு நாடாளுமன்ற தேர்தலுக்கு 2 சதவீதம் என்றால் ஏறத்தாழ 40 ஆயிரத்தில் இருந்து 50 ஆயிரம் வாக்குகள்கூட வர இருக்கிறது. இந்த வாக்கு என்பது ஒரு தொகுதியினுடைய வெற்றியை எந்தளவுக்கு நிர்ணயிக்கக்கூடியது என்பதை எல்லோரும் அறிந்த ஒன்று. ஆகவே, இந்த நடைமுறைகளை மாற்றி அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம்.

எதற்கெடுத்தாலும் இங்கே கொடுக்கப்படுகிற மனுக்களை மத்திய தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி தான் அனுமதி பெற வேண்டும் என்ற நிலையை மாற்றி, எளிமைப்படுத்துகிற வகையில் மாநில தேர்தல் அதிகாரிகளுக்கு அதிகாரத்தை கொடுத்து, கொடுக்கப்படுகிற புகார் மீது உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்பட 15 பக்க மனுவை இந்திய தலைமை தேர்தல் ஆணையரிடம் கொடுத்திருக்கிறோம். தேர்தல் எத்தனை கட்டங்களாக நடத்தினாலும் அதை சந்திக்க திமுக தயாராக இருக்கிறது. ஜெயக்குமார் (அதிமுக முன்னாள் அமைச்சர்): தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் நியாயமான, அமைதியான, ஜனநாயக முறையில், விருப்பு வெறுப்பின்றி நடத்தப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளோம். வாக்காளர் பட்டியலில் உள்ள முரண்பாடுகள் முழுமையாக களைப்பட வேண்டும். இறந்தவர்கள், வீடு மாறியவர்கள் பெயர் இன்னும் வாக்காளர் பட்டியலில் மாறவில்லை. தகுதியுள்ளவர்கள் சேர்க்கப்படவில்லை. ஒரு குடும்பத்தில் உள்ளவர்கள் பல வாக்குச்சாவடி மையங்களில் வாக்களிக்கும் நிலை உள்ளதை களைய வேண்டும்.

தமிழ்நாட்டில் பதற்றமான வாக்குச்சாவடிகள் தேர்தல் ஆணையம் மூலம் கண்டறியப்பட வேண்டும். அந்த மையங்களில் கூடுதல் துணை ராணுவ படை, சிசிடிவி கேமரா வைத்து சுதந்திரமாக தேர்தல் நடத்துவதை உறுதி செய்ய வேண்டும். வாக்குச்சாவடிகளுக்கு கூடுதல் மத்திய பாதுகாப்பு வீரர்களை போட வேண்டும். உள்ளூர் காவல்துறை ஆளுங்கட்சிக்கு சாதகமாக உள்ளதால், மத்திய மற்றும் துணை ராணுவ வீரர்களை அதிகளவில் போட்டு சுதந்திரமாக மக்கள் ஓட்டுபோட ஏற்பாடு செய்ய வேண்டும். அனைத்து மாவட்டங்களிலும் தேர்தலுக்கு முன் கலெக்டர்கள், எஸ்பி முதல் கீழ்மட்டம் வரை அதிகாரிகளை மாற்றம் வேண்டும். சிறையில் இருந்து வெளியே வந்த குற்றவாளிகளால் சட்டம் -ஒழுங்கு பாதிக்கும் நிலை உள்ளது. அவர்களை கண்டறிந்து, கண்காணிப்பில் வைத்து நியாயமான தேர்தல் நடத்த வேண்டும். கடுமையான கோடை காலத்தில் தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் வாக்குச்சாவடி மையங்களில் தண்ணீர், துணி பந்தல் போட வேண்டும். தேர்தல் பார்வையாளர்களாக வெளிமாநிலத்தில் இருக்கிறவர்களை பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.

The post விவிபேட் முறைமாற்றத்தில் சந்தேகம் தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக புகார்: தவறுகள் நடக்க வாய்ப்பு இருப்பதால் புதிய முறையை கைவிட வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Dhimka ,Chief Electoral Commissioner ,Skeptical Skeptics ,Vivibet ,Chennai ,Chief Election Commissioner of ,India ,Tamil Nadu ,Dimuka ,ViviPad ,Chief Election Commissioner ,Skeptical ,Vivibed ,Dinakaran ,
× RELATED தேர்தல் பத்திரம் வாங்குவதில் புதிய...