×

பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் காலியாக உள்ள உதவி பேராசிரியர், நூலகர், உடற்கல்வி ஆசிரியர் தேர்வு தொடர்பான அறிவிப்பை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் காலியாக உள்ள உதவிப் பேராசிரியர், நூலகர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்று விளம்பரங்கள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில், அறக்கட்டளையை நிர்வகிக்க உயர் நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட இடைக்கால நிர்வாகிக்கு இந்த விளம்பரத்தை வெளியிட அதிகாரம் இல்லை எனக் கூறி முன்னாள் மாணவரான ராமமூர்த்தி என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கல்லூரி கல்வித்துறை அதிகாரிகளின் முன் அனுமதி பெறாமல் இந்த விளம்பரம் வெளியிடப்பட்டுள்ளதாக மனுதாரர் தரப்பில் வாதிடப்பட்டது. அரசுத் தரப்பில், விளம்பரம் வெளியிடும் முன் அரசின் அனுமதியை பெறவில்லை என்றாலும், காலியிடங்களை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்று வாதிடப்பட்டது. பச்சையப்பன் அறக்கட்டளை தரப்பில், தேர்வு தொடர்பான விளம்பரத்தை கல்லூரி குழு செயலாளர் தான் வெளியிட்டார். இடைக்கால நிர்வாகி வெளியிடவில்லை. ஆறு கல்லூரிகளில் 132 பணியிடங்கள் காலியாக உள்ளன என்று விளக்கமளிக்கப்பட்டது.

அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், தனியார் கல்லூரிகள் முறைப்படுத்தல் சட்டப்படி, விளம்பரம் வெளியிட கல்லூரி குழு செயலாளருக்கு அதிகாரம் உள்ளது. விளம்பரம் வெளியிடும் முன் அரசின் முன் அனுமதியை பெறத் தேவையில்லை. நீண்ட காலத்துக்கு பணியிடங்களை காலியாக வைத்திருக்க முடியாது. அது கல்லூரிகளின் கல்வித்தரத்தை பாதிக்கும். போதுமான ஆசிரியர்கள் இல்லாவிட்டால், இணைப்பு வாபஸ் போன்ற பல்கலைக்கழக நடவடிக்கையை கல்லூரிகள் எதிர்கொள்ள வேண்டி வரும். இந்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது என்று உத்தரவிட்டனர்.

The post பச்சையப்பன் அறக்கட்டளைக்கு சொந்தமான 6 கல்லூரிகளில் பணியிடங்கள் நிரப்பும் அறிவிப்பை எதிர்த்த வழக்கு தள்ளுபடி: உயர் நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan Trust ,Court ,CHENNAI ,Chennai High Court ,High Court ,Dinakaran ,
× RELATED நீதித்துறையின் நெறிமுறைகளை மாவட்ட...