×

சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் கஞ்சா பறிமுதல்: புதுச்சேரி பயணிக்கு வலை

சென்னை: பாங்காக்கில் இருந்து சென்னைக்கு விமானத்தில் கடத்திக் கொண்டு வரப்பட்ட ரூ.7 கோடி மதிப்புடைய உயர்ரக கஞ்சாவை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதனை கடத்தி வந்த புதுச்சேரி பயணியை போலீசார் தேடி வருகின்றனர். தாய்லாந்து தலைநகர் பாங்காக்கில் இருந்து, தாய் ஏர்வேஸ் பயணிகள் விமானம், நேற்று முன்தினம் அதிகாலை சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. இந்த விமானத்தில் வரும் ஒரு பயணியின் சூட்கேசில் போதைப்பொருள் இருப்பதாக, பாங்காக் விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் கண்டுபிடித்து, போதை பொருள் இருக்கும் சூட்கேசில், அடையாள குறி போடப்பட்டுள்ளதாகவும், சென்னை விமான நிலையத்தில் அந்த சூட்கேஸை கன்வேயர் பெல்ட்டில் இருந்து எடுக்கும் பயணியை பிடித்து விசாரணை நடத்தும்படியும், தாய்லாந்து சுங்கத்துறை அதிகாரிகள், இந்திய சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, டெல்லியில் உள்ள சுங்கத்துறை தலைமை அலுவலகத்தில் இருந்து, சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில், சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், நேற்று முன்தினம் அதிகாலை, சென்னை சர்வதேச விமான நிலையம், வருகை பகுதியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது கன்வேயர் பெல்டில் வந்த லக்கேஜ்களை பயணிகள் எடுத்துச் சென்றனர். ஆனால் ஒரு சூட்கேசில், வெள்ளை கலர் ஷாக்பிஸ் மார்க் செய்யப்பட்டிருந்தது. அந்த சூட்கேஸை யாருமே எடுக்கவில்லை. எனவே, சுங்க அதிகாரிகள், அந்த சூட்கேசை திறந்து பார்த்தனர். அதனுள் மிகவும் உயர்ரக கஞ்சாவான ‘‘ஹைட்ரோ போனிக்” ரக கஞ்சா இருந்தது. இது வெளிநாடுகளில் தரையில் வளராமல், தண்ணீரிலே மிதந்து கொண்டு வளரும் உயர்ரக கஞ்சா ஆகும். அதில் மொத்தம் 14 கிலோ கஞ்சா இருந்தது. அதன் சர்வதேச மதிப்பு சுமார் ரூ.7 கோடி என தெரிய வந்தது.

இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், அந்த கஞ்சாவை பறிமுதல் செய்து, சூட்கேசில் இருந்த டேக் மூலம் விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த சூட்கேஸ் புதுச்சேரி மாநிலத்தை சேர்ந்த ஒரு பயணியுடையது என்று தெரியவந்தது. இதையடுத்து சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக வழக்குப்பதிவு செய்து, சென்னை விமான நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய போலீஸ், மத்திய தொழில் பாதுகாப்பு படை ஆகியோருக்கும் தகவல் கொடுத்து, சென்னை விமான நிலையத்தில் இருந்து தப்பி ஓடிய, புதுச்சேரியை சேர்ந்த பயணியை தீவிரமாக தேடி வருகின்றனர்.

The post சென்னை விமான நிலையத்தில் பரபரப்பு ரூ.7 கோடி மதிப்புள்ள கடத்தல் கஞ்சா பறிமுதல்: புதுச்சேரி பயணிக்கு வலை appeared first on Dinakaran.

Tags : Chennai airport ,CHENNAI ,Bangkok ,Thailand, Thailand ,Dinakaran ,
× RELATED பயணிகள் தங்களது உடமைகளை தானியங்கி...