×

மாநிலக்கல்லூரி மாணவனை தாக்கிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது

தண்டையார்பேட்டை: சென்னை கடற்கரை பேருந்து நிறுத்தத்தில் மாநிலக்கல்லூரி மாணவனை தாக்கிய பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்களை போலீசார் கைது செய்தனர். கொருக்குப்பேட்டையை சேர்ந்தவர் சாமுவேல் (20). இவர் மெரினா கடற்கரை பகுதியில் உள்ள மாநிலக் கல்லூரியில் படித்து வருகிறார். கடந்த மாதம் 12ம் தேதி கடற்கரை ரயில் நிலைய பேருந்து நிறுத்தத்தில் இவருக்கும், பச்சையப்பன் கல்லூரி மாணவர்களுக்கும் சண்டை ஏற்பட்டது. இதில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் சாமுவேலை சரமாரியாக தாக்கி விட்டு அங்கிருந்து தப்பி சென்றனர்.

இதுகுறித்து சாமுவேல் வடக்கு கடற்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து, அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அதில் பதிவான காட்சிகளை வைத்து பச்சையப்பன் கல்லூரியில் படிக்கும் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் மற்றும் சோழவாரத்தை சேர்ந்த புவியரசு (18), சஞ்சய் (17), சுஜித்குமார் (19) என்பது தெரியவந்தது. இதனையடுத்து 3 பேரையும் நேற்று வடக்கு கடற்கரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி இரண்டு பேரை சிறையிலும், ஒருவரை சீர்திருத்த பள்ளியிலும் அடைத்தனர். இச்சம்பவம் கல்லூரி மாணவர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

The post மாநிலக்கல்லூரி மாணவனை தாக்கிய வழக்கில் பச்சையப்பன் கல்லூரியை சேர்ந்த 3 மாணவர்கள் கைது appeared first on Dinakaran.

Tags : Pachaiyappan college ,Thandaiyarpet ,Chennai ,Samuel ,Korukuppet ,Marina Beach ,
× RELATED சினிமா ஸ்டண்ட் நடிகர் வீட்டில் திருட்டு