×

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் இந்தியர்கள்: போரில் இருந்து விலகி இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல்

உக்ரைன்: உக்ரைனுக்கு எதிரான போரில் போரிட ஒரு சில இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் சேர்க்கப்பட்டுள்ளதாக வெளியான அதிர்ச்சி தகவலை தொடர்ந்து, இந்த போரில் இருந்து விலகி இருங்கள் என்று மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் இந்திய குடிமக்களுக்கு அறிவுறுத்தலை வழங்கியுள்ளது. ரஷ்யா – உக்ரைன் இடையிலான போர் கடந்த இரண்டு ஆண்டுகளாக நீடித்து வருகிறது. கடந்த 2022 பிப்ரவரி மாதத்தில் தொடங்கிய இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இரு நாடுகளும் எல்லை பகுதிகள் தொடர்ந்து மோதிக்கொண்டு வருகின்றனர். மாறி மாறி குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீப காலமாக உக்ரைன் மீது ரஷ்யா படைகள் தாக்குதலை தீவிரப்படுத்தியது. உக்ரைன் ராணுவத்துக்கு ஆதரவாக பல்வேறு நாடுகளை சேர்ந்த தன்னார்வலர்கள், அவர்களது பாதுகாப்பு படையில் இணைந்து செயல்பட்டு வருகிறார்கள்.

அதுபோன்று ரஷ்யாவுக்கு ஆதரவாக பலர் செயல்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது. இந்த போரை முடிவுக்கு கொண்டுவர உலக நாடுகள் முயற்சி மேற்கொண்டும் எந்த பலனும் இல்லை. இருப்பினும், தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரை முடிவுக்கு கொண்டுவர பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த சூழலில், சமீபத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய தரப்பில் இந்தியர்கள் சிலர் எல்லையில் போரிட்டு வருவதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி இருந்தது. அதாவது, உக்ரைனுக்கு எதிரான போரில் ஒரு சில இந்தியர்கள் கட்டாயப்படுத்தப்பட்டு ரஷ்ய ராணுவத்தில் பணியமர்த்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. அதில், குறைந்தது மூன்று இந்தியர்கள் ஒரு முகவரால் ஏமாற்றப்பட்டு ரஷ்யாவிற்கு “ராணுவ பாதுகாப்பு உதவியாளர்களாக” பணிபுரிய அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது. இவர்கள் உத்தர பிரதேசம், குஜராத், பஞ்சாப், ஜம்மு காஷ்மீர் பகுதியை சேர்ந்தவர்கள் எனவும் கூறப்பட்டது.

இந்த அதிர்ச்சியூட்டும் தகவலை தொடர்ந்து ரஷ்யா – உக்ரைன் இடையேயான போரில் இருந்து விலகி இருக்கவும், எச்சரிக்கையுடன் செயல்படவும் தனது குடிமக்களுக்கு இந்தியா அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் கூறியதாவது, ஒரு சில இந்தியர்கள் ரஷ்ய ராணுவத்தில் ஆதரவு வேலைகளுக்கு கையெழுத்திட்டுள்ளனர் என்பதை நாங்கள் அறிவோம். இந்த விஷயத்தை சம்பந்தப்பட்ட ரஷ்ய அதிகாரிகளிடம் எடுத்து சென்றுள்ளோம். எனவே, அனைத்து இந்திய குடிமக்களும் உரிய எச்சரிக்கையுடன் செயல்படுமாறும், இந்த மோதலில் இருந்து விலகி இருக்குமாறும் கேட்டுக்கொள்கிறோம் என கூறியுள்ளார். இந்த வார தொடக்கத்தில், ஏஐஎம்ஐஎம் தலைவர், அசாதுதீன் ஓவைசி, ரஷ்ய ராணுவத்தில் இருக்கும் மூன்று இந்தியர்களைக் காப்பாற்றுமாறு வலியுறுத்தினார். ஹைதராபாத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட ஒருவரின் குடும்பத்தினர் ஒவைசியை அணுகியதை அடுத்து, இந்த விஷயம் வெளிச்சத்திற்கு வந்ததாக கூறப்படுகிறது.

The post உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்ய படையில் இந்தியர்கள்: போரில் இருந்து விலகி இருக்க ஒன்றிய அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Indians ,Ukraine ,Union govt ,Ministry of External Affairs ,army ,Russia… ,Union government ,Dinakaran ,
× RELATED சமூக வலைதளமான எக்ஸ் தளத்தில் இருந்து 2...