×

பெருங்குடி 185வது வார்டில் குப்பை மேடாக மாறிய காவல் உதவி மையம்: சீரமைத்து செயல்படுத்த வலியுறுத்தல்

ஆலந்தூர்: பெருங்குடி மண்டலத்துக்கு உட்பட்ட 185வது வார்டு பகுதியில் ஏற்கெனவே செயல்பட்டு வந்த காவல் உதவி மையங்கள், தற்போது எவ்வித பயன்பாடும் இன்றி கதவுகள் உடைந்த நிலையில் குப்பைமேடாக மாறி பரிதாபமாக காட்சியளிக்கிறது. இக்காவல் உதவி மையங்களை உடனடியாக சீரமைத்து, மீண்டும் கண்காணிப்பு பணி செயல்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர். சென்னை மாநகராட்சி, பெருங்குடி மண்டலப் பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுக்க கடந்த 2006ம் ஆண்டு ஆலந்தூர், ஆதம்பாக்கம், உள்ளகரம், புழுதிவாக்கம், மடிப்பாக்கம் பகுதிகளில் ஒரே நாளில் காவல் உதவி மையங்கள் திறக்கப்பட்டன. இந்த காவல் உதவி மையங்களில் ஒரு எஸ்ஐ தலைமையில் 3 போலீசார் சுழற்சி முறையில் இரவுபகலாகப் பணியாற்றி வந்தனர்.

இப்பகுதியில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த காவல் உதவி மையங்களில் ஒருசில தற்போது முறையாக இயங்கவில்லை. மேலும் சில காவலர் உதவி மையங்கள் பூட்டப்பட்டும் மேலும் பல கட்டிடங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. குறிப்பாக, மேடவாக்கம் பிரதான சாலை மற்றும் உள்ளகரம், ராஜரத்தினம் சாலை சந்திப்பில் உள்ள காவல் உதவி மையத்தின் கதவுகள் உடைந்து, தற்போது குப்பைமேடாக மாறி பரிதாபமாக காட்சியளித்து வருகிறது. இதனால் இந்த காவல் உதவி மையத்தில் இரவு நேரங்களில் பல்வேறு சமூகவிரோத செயல்கள் நடைபெற்று வருகின்றன.

மேலும், அப்பகுதியில் செயின் பறிப்பு உள்பட பல்வேறு குற்றச் சம்பவங்களும் அதிகரித்து வருகின்றன. ஒருகாலத்தில் அந்தந்த பகுதிகளில் குற்றச் சம்பவங்களை தடுப்பதற்காக அமைக்கப்பட்ட காவல் உதவி மையங்களில், தற்போது ஒருசில மையங்கள் எவ்வித பயன்பாடும் இன்றி மூடியே கிடக்கிது. இதில் பல மையங்கள் சேதமடைந்த நிலையிலும் உள்ளன. அங்கு ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளில் போலீசாரும் ஈடுபடுவதில்லை. உள்ளகரத்தில் சேதமான காவல் உதவி மையத்தில் குவிந்துள்ள குப்பைக் கழிவுகளால் அப்பகுதி முழுவதும் கடும் துர்நாற்றம் வீசி வருகிறது.

இதனால் அப்பகுதி மக்கள் பல்வேறு நோய்தொற்றுகள் பரவும் அபாயநிலை ஏற்பட்டிருக்கிறது. எனவே, உள்ளகரம் உள்பட பல்வேறு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாத காவல் உதவி மையங்களை உடனடியாக சீரமைத்து, அவற்றை மீண்டும் குற்றச் சம்பவங்களைத் தடுக்கும் கண்காணிப்பு மையங்களாக மாற்றுவதற்கு சம்பந்தப்பட்ட காவல்துறை தலைவர், ஆணையர் உள்பட காவல்துறை உயர் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

The post பெருங்குடி 185வது வார்டில் குப்பை மேடாக மாறிய காவல் உதவி மையம்: சீரமைத்து செயல்படுத்த வலியுறுத்தல் appeared first on Dinakaran.

Tags : Perungudi Ward 185 Police Help Center ,Alandur ,Police Help Centers ,185th Ward ,Perungudi Mandal ,Help ,Police Help Center ,Perungudi 185th Ward ,Dinakaran ,
× RELATED லாரி டயர் வெடித்து ஏட்டு உட்பட இருவர் படுகாயம்