×

சித்தூர் துர்கா நகர் காலனியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும்

*பொதுமக்கள் கோரிக்கை

சித்தூர் : சித்தூர் துர்கா நகர் காலனியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். சித்தூர் 38வது வார்டு துர்கா நகர் காலனி பகுதியில் அதிகளவில் குப்பை கழிவுகள் உள்ளது. இந்த குப்பை கழிவுகளை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் அகற்றாததால், துர்நாற்றம் வீசுகிறது என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறியதாவது: எங்கள் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. நாள்தோறும் எங்கள் பகுதியில் உள்ள பொதுமக்கள் வீட்டில் சேகரிக்கும் குப்பை கழிவுகளை அருகில் உள்ள குப்பை தொட்டிகளில் கொட்டி வந்தார்கள்.

மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் நாள்தோறும் காலை, மாலை என இரு வேலைகளில் வந்து குப்பை கழிவுகளை அகற்றி வந்தார்கள். ஆனால் கடந்த 4 நாட்களாக எங்கள் பகுதியில் தூய்மை பணியாளர்கள் குப்பை கழிவுகளை அகற்றாததால் மலை போல் குப்பை கழிவுகள் கொட்டி குவிந்துள்ளன. இதனால் இவ்வழியாக துர்கா நகர் காலனிக்கு வரும் பொது மக்கள் துர்நாற்றத்தால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள். அது மட்டுமல்லாமல் குழந்தைகள் கொசுக்கள் தொல்லையால் பெரும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

அதேபோல் முதியோர்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாத அவல நிலை ஏற்பட்டுள்ளது. எங்கள் பகுதிக்கு வரும் பொது மக்கள் அனைவரும் மூக்கை பிடித்துக் கொண்டு செல்லும் அவல நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து எங்கள் பகுதியை சேர்ந்த மக்கள் நேற்று முன்தினம் மாநகராட்சி அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். அதிகாரிகள் உடனடியாக குப்பை கழிவுகளை அகற்ற நடவடிக்கை எடுக்கிறோம் என தெரிவித்தார்கள்.

ஆனால் இதுவரை எங்கள் பகுதியில் குப்பை கழிவுகள் அகற்றாமல் உள்ளது. இதனால் எங்கள் பகுதியை சேர்ந்த மக்களுக்கு டெங்கு, மலேரியா உள்ளிட்ட நோய்கள் வர காரணமாக உள்ளது.
ஆகவே மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்கள் பகுதியில் மலை போல் கொட்டி கிடக்கும் குப்பை கழிவுகளை உடனடியாக அகற்றி சுத்தம் செய்ய வேண்டும் என்றனர்.

The post சித்தூர் துர்கா நகர் காலனியில் கொட்டப்பட்டுள்ள குப்பை கழிவுகளை அகற்ற வேண்டும் appeared first on Dinakaran.

Tags : Chittoor Durga Nagar Colony ,Chittoor ,Chittoor 38th Ward Durga Nagar Colony ,Dinakaran ,
× RELATED நடைபெற உள்ள பொதுத்தேர்தலில்...