×

ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம்

*மார்ச் 3ல் கொடியேற்றத்துடன் தொடக்கம்

ஸ்ரீகாளஹஸ்தி : ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவ விழா மார்ச் 3ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.திருப்பதி மாவட்டம், ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவ விழா மார்ச் 3ம் தேதி தொடங்க உள்ளது. இதையொட்டி, அன்று மாலை 4 மணிக்கு கண்ணப்பர் மலை மீதுள்ள கண்ணப்பர் கோயில் வளாகத்தில் உள்ள கொடிமரத்தில் கண்ணப்பர் கொடியேற்றம் நடைபெறுகிறது. பின்னர், 4 மாடவீதிகளில் பஞ்ச மூர்த்திகள் உலா வந்து அருள்பாலிப்பர்.

2ம் நாள்(4ம் தேதி) காலை 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் மற்றும் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் உலா, மதியம் 12.30 மணி முதல் கோயிலுக்குள் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கொடியேற்றம், இரவு 9 மணிக்கு வெள்ளி அம்பாரிகளில் சுவாமி, அம்மையார் மாடவீதி உலா நடைபெறும்.

3ம் நாள்(5ம் தேதி) காலை 10 மணிக்கு சூரிய பிரபை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா, இரவு 9 மணிக்கு பூத வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா நடைபெறும்.

4ம் நாள்(6ம் தேதி) காலை 9 மணிக்கு அன்னபக்‌ஷி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானபிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா, இரவு ராவண வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், மயில் வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா நடைபெறும்.

5ம் நாள்(7ம் தேதி) காலை 9 மணிக்கு அம்ச வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், கிளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா, இரவு சேஷ வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், யாளி வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா நடைபெறும்.

6ம் நாள்(8ம் தேதி) மகா சிவராத்திரியன்று காலை 9 மணிக்கு இந்திர விமான வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சப்பரத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதி உலா, இரவு 10 மணிக்கு சிவபெருமானுக்கு மிகவும் உகந்த வாகனமான நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் மிக பிரமாண்டமாக உலா நடைபெறும்.

7ம் நாள்(9ம் தேதி) காலை 11 மணிக்கு தேர் திருவிழா, இரவு 9 மணிக்கு கோயில் அருகில் உள்ள நாரதர் புஷ்கரணியில் தெப்பல் உற்சவம் நடைபெறும்.
8ம் நாள்(10ம் தேதி) காலை 9 மணிக்கு அதிகார நந்தி வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் உலா நடைபெறும். இரவு 9 மணிக்கு யானை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் மணக்கோலத்தில் கோயில் திருமண மண்டபம் வரை ஊர்வலம், நள்ளிரவு சுவாமி
திருக்கல்யாண உற்சவம் தொடங்கும்

9ம் நாள்(11ம் தேதி) அதிகாலை 3 மணிக்கு சுவாமி, அம்மையாரின் திருக்கல்யாண உற்சவம் நடைபெறும். காலை 11 மணிக்கு ருத்ராட்ச அம்பாரி வாகனங்களில் மணக்கோலத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார், கோயில் மண்டபத்தில் இருந்து கோயில் வரை ஊர்வலம் நடைபெறும். இரவு 8 மணிக்கு நடராஜர் திருக்கல்யாண உற்சவம் கோயில் வளாகத்தில் நடைபெறும்.

10ம் நாள்(12ம் தேதி) காலை 8 மணி முதல் ஜனதா அம்பாரி வாகனங்களில் கைலாச கிரிவலம், இரவு 9 மணிக்கு குதிரை வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், சிம்ம வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் உலா நடைபெறும்.

11ம் நாள்(13ம் தேதி) காலை 10 மணிக்கு கேடிக வாகனங்களில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் உலா நடைபெறும். மதியம் 12.30 மணிக்கு மூலவர் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் சன்னதி எதிரில் உள்ள கொடிமரத்தில் இருந்து கொடியிறக்குதல் நடைபெறும். இரவு 9 மணிக்கு சிம்ம வாகனத்தில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர், காமதேனு வாகனத்தில் ஞானப்பிரசுனாம்பிகை தாயார் 4 மாடவீதிகளில் உலா நடைபெறும்.

12ம் நாள்(14ம் தேதி) இரவு 9 மணிக்கு பல்லக்கு சேவை, 13ம் நாள்(15ம் தேதி) இரவு 9 மணிக்கு ஏகாந்த சேவை நடைபெறும். தொடர்ந்து, 16ம் தேதி காலை 10 மணிக்கு கோயிலில் சாந்தி அபிஷேகங்களுடன் பிரமோற்சவ விழா நிறைவு பெறுகிறது.

கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சிறப்பாக விழாவை நடத்த அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்து பக்தர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் வகையில் பல நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

20 ஆயிரம் சதுர அடியில் தரிசன வரிசை, ஒரேநேரத்தில் 10 ஆயிரம் பேர் வரிசையில் நிற்கும் வகையில் திட்டமிடப்பட்டு உள்ளது. கோயிலின் உள்ளே 4 பகுதிகளிலும், வெளியில் 7 பகுதிகளிலும் குடிநீர் விநியோகம் செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்படுகிறது.

வாகனங்கள் நிறுத்தும் இடத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது. ஆந்திர மாநில விதைகள் சுத்திகரிப்பு நிலையம் அருகில், மண்டல வளர்ச்சி அலுவலகம்(எம்.பி.டி.ஓ), மார்கெட்டிங் கமிட்டி வளாகங்களில் பஸ் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது. ஒரே நேரத்தில் 480 பஸ்கள் நிற்கும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது. கார்களை சொர்ணமுகி ஆற்றில் நிறுத்த ஏற்பாடு செய்யப்படுகிறது.வி.ஐ.பிக்களுக்கு ஞானப்பிரசுனாம்பா சதனிலும், மோட்டார் சைக்கிள்களுக்கும் பார்க்கிங் வசதி செய்யப்பட்டுள்ளது. இத்தகவலை கோயில் நிர்வாக அதிகாரி எஸ்.வி.நாகேஸ்வர ராவ் தெரிவித்துள்ளார்.

The post ஸ்ரீகாளஹஸ்தி சிவன் கோயிலில் வருடாந்திர மகா சிவராத்திரி பிரமோற்சவம் appeared first on Dinakaran.

Tags : Annual Maha Shivratri Pramotsavam ,Srikalahasti Shiva Temple ,Srikalahasti ,Annual Maha Shivratri Brahmotsavam ,Srikalahasti Shiva Temple, Tirupati district ,Annual Maha Shivratri Brahmosavam ,
× RELATED விவசாயி டிராக்டரை எரித்த தெலுங்கு தேசம் கட்சியினர்