×

சென்னை வர்த்தக மையத்தில் யுமாஜின் 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

சென்னை: யுமாஜின் 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை சென்னை வர்த்தக மையத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தின் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் 500 முக்கிய இடங்களில் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தையும் தொடங்கி வைத்தார். தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (23.2.2024) நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில் இரண்டு நாட்கள் நடத்தப்படும் “Umagine TN” தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார்.

அனைத்தும் உள்ளடக்கிய மற்றும் புதுமையான தொழில்நுட்பங்களின் மூலம், சமத்துவச் சமுதாயத்துடன் கூடிய ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எய்திடும் நோக்கிலும், சமூக நிர்வாகம் மற்றும் சுற்றுச்சூழல் இலக்குகளை சமநிலைப்படுத்தும் அதேவேளையில், பொருளாதார வளர்ச்சியை வழங்கவல்ல தொழில்நுட்பங்களை மேம்படுத்துவதற்கான நோக்கத்தை முன்னெடுப்பதற்கான ஒரு தளமாக, தொழில் நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய தொழில்நுட்ப நிகழ்வைச் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு முடிவு செய்தது. 2021-2022 ஆம் ஆண்டிற்கான வரவு -செலவுத் திட்டக் கூட்டத்தொடரின் போது, “யுமாஜின் (UMAGINE) – வருடாந்திர தொழில்நுட்ப தலைமை உச்சி மாநாட்டை” சென்னையில் நடத்துவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டது. அதன்படி, முதலாவது “UmagineTN” மாநாடு 2023 ஆம் ஆண்டு மார்ச் 23 முதல் 25 வரை சென்னை வர்த்தக மையத்தில் நடைபெற்றது. மாபெரும் வெற்றியடைந்த இம்மாநாட்டில் 60 சர்வதேசப் பேச்சாளர்கள் உள்ளிட்ட, 320-க்கும் மேற்பட்ட பேச்சாளர்களால் 120 அமர்வுகளுடன் ஏழு பெரும் பிரிவுகளின் கீழ் வகைப்படுத்தப்பட்ட கருப்பொருள் குறித்த விவாதங்கள் நடைபெற்றன.

இந்நிகழ்வில், தகவல் தொழில்நுட்பத் துறையில் மாநிலம் அடைந்துள்ள வெற்றியை வெளிப்படுத்தும் வகையில் மகத்தான கண்காட்சியும் அமைக்கப்பட்டிருந்தது. அதன் தொடர்ச்சியாக, இந்த ஆண்டும், தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறையின் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் (எல்காட்) மூலம் “UmagineTN 2024” எனும் தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாடு சென்னை வர்த்தக மையத்தில் இன்றும் நாளையும் (23.2.2024 மற்றும் 24.2.2024) நடைபெறுகிறது. இந்திய தொழில் கூட்டமைப்புடன் (Confederation of Indian Industry-CII) இணைந்து நடத்தப்பெறும் இம்மாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) மற்றும் ஆழ்நிலைத் தொழில்நுட்பம் (Deep Tech), இணையப் பாதுகாப்பு (Cyber Security), இணைக்கப்பட்ட நுண்ணறிவு (Connected Intelligence), நிலைத்தன்மை (Sustainability), உலகளாவிய கண்டுபிடிப்பு மையங்கள் (Global Innovation Centres) மற்றும் உயிர்ப்பூட்டல் (Animation), காட்சி விளைவு (Visual Effects), விளையாட்டு (Gaming) மற்றும் களிப்படக் கதை (Comics) (AVGC) மெய்மை விரிவாக்கம் (Extended Reality) போன்ற முக்கியப் பொருண்மைகள் குறித்த விவாதங்கள் நடைபெறவுள்ளது.

இந்த UmagineTN 2024 நிகழ்வின் கருப்பொருள் AT’TN – அதாவது, தமிழ்நாட்டின் தொழில்நுட்ப முன்னேற்றத்தை விரைவுபடுத்தல் ஆகும். 120 தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் 10,000-க்கும் மேற்பட்டவர்கள் இந்நிகழ்வில் பங்கேற்கிறார்கள். இந்நிகழ்வின்போது வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடரில் வெளியிடப்பட்ட சென்னை, கோவை, மதுரை, திருச்சிராப்பள்ளி, சேலம் உள்ளிட்ட அனைத்து மாநகராட்சிகளிலும் 1000 முக்கிய இடங்களில் இலவச வைஃபை சேவைகள் வழங்கப்படும் என்ற அறிவிப்பின்படி, முதற்கட்டமாக சென்னையில் மக்கள் நடமாட்டம் அதிகமுள்ள இடங்களான பூங்காக்கள், பேருந்து நிலையங்கள் மற்றும் கடற்கரை ஆகிய முக்கிய 500 இடங்களில் தமிழ்நாடு மின்னணு நிறுவனம் மூலம் இலவச வைஃபை வசதி வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி வைத்தார்.

The post சென்னை வர்த்தக மையத்தில் யுமாஜின் 2024 தகவல் தொழில்நுட்ப உச்சி மாநாட்டை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.

Tags : Chief Minister ,MLA ,Yumajin 2024 ICT Summit ,Chennai Trade Center ,K. Stalin ,Chennai ,Tamil Nadu ,Chief Minister MLA ,UMAJ 2024 IT Summit ,Chennai Trade Centre ,Metropolitan ,UMAJIN 2024 Information Technology Summit ,
× RELATED புத்தகங்கள் மனிதச் சமுதாயத்தைத்...