×

நீடாமங்கலம் ரயில்வே கடவு சாலை மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு

நாகை: நீடாமங்கலம் ரயில்வே கடவு சாலை மேம்பால பணிகளுக்கு அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார். நீடாமங்கலம் நகர் பகுதிக்குள் நாகை கூடலூர் – மைசூர் தேசிய நெடுஞ்சாலை மற்றும் கும்பகோணம் – மன்னார்குடி மாநில நெடுஞ்சாலையும், தஞ்சாவூர் – நாகப்பட்டினம் மற்றும் நீடாமங்கலம் – மன்னார்குடி ஆகிய இரயில் பாதைகளும், நீடாமங்கலம் இரயில் நிலையம் மற்றும் இரயில்வே யார்டும் அமைந்துள்ளது. இதனால் நகருக்குள் செல்லும் வாகனங்கள் கடவு எண்.20 மற்றும் கடவு எண்.1-ல் நீண்ட நேரம் காத்திருந்து செல்ல வேண்டியுள்ளது. எனவே, மேற்படி இரயில்வே கடவுகளில் சாலை மேம்பாலத்தை கட்டுவதற்கு, நிலஎடுப்பிற்கான நிர்வாக அனுமதி ரூ.10.67 கோடிக்கு 23.10.2013 அன்று பெறப்பட்டு நில எடுப்பு ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வந்தது.

இந்த அரசு பொறுப்பேற்றவுடன் நில எடுப்பு பணிக்கு 29.11.2022ல், ரூ.16.62 கோடிக்கு திருத்திய நிர்வாக ஒப்புதல் கொடுக்கப்பட்டது. இப்பால கட்டுமானப்பணிக்காக ரூ.170.00 கோடிக்கு நிர்வாக அனுமதி 05.06.2023 அன்று, சி.ஆர்.ஐ.எப். சேது பந்தன் திட்டத்தின் கீழ் பெறப்பட்டது. இப்பாலத்தின் மொத்த திட்ட மதிப்பீடு – ரூ.170 கோடி மூன்று கரங்களுடன் (Arm) 30மீ விட்டமுள்ள சுற்றுச்சந்திப்புடன் (Roundana) அமைகிறது. பாலத்தின் மொத்த நீளம் 1437 மீ, அகலம் 12மீ. முதற்கட்டமாக சுற்றுச்சாலையுடன் கூடிய 1110 மீ நீளம் உள்ள பாலப் பணிகள் 80.00 கோடி செலவில் செயலாக்கப்படுகிறது.

இரண்டாம் கட்டப்பணியாக இரண்டு ரயில்வே பாலம் உள்பட மொத்தம் 327 மீ நீளமுள்ள பாலப்பணி மற்றும் இரண்டு சுரங்கபாலப்பணிகள் 90.00 கோடி செலவில் செயல்படுத்தப்படவுள்ளது. விரைவில் இரண்டாம் கட்ட பணிக்கும் ஒப்பந்தம் கோரப்பட்டு பணி துவங்கப்படும். அனைத்து பணிகளும் ஜனவரி 2026 க்குள் கட்டிமுடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை அமைச்சர் எ.வ.வேலு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்ச்சியில் தொழில்துறை அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, எஸ்.எஸ். பழநிமாணிக்கம், நாடாளுமன்ற உறுப்பினர், தஞ்சாவூர் மற்றும் பூண்டி கே.கலைவாணன், சட்டமன்ற உறுப்பினர், திருவாரூர் மற்றும் பிரதீப் யாதவ், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர், நெடுஞ்சாலை மற்றும் சிறுதுறைமுகங்கள்துறை, தலையாமங்கலம் ஜி.பாலு, மாவட்ட ஊராட்சி தலைவர், திருவாரூர், சோம. செந்தமிழ்ச் செல்வன், ஒன்றியக்குழு தலைவர் நீடாமங்கலம், ஆர்.ஆர். ராம்ராஜ், பேரூராட்சித்தலைவர், நீடாமங்கலம், ஆகியோர் கலந்து கொண்டனர். கு.சண்முகநாதன், மாவட்ட வருவாய் அலுவலர், ந.பாலமுருகன், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலை, திட்டங்கள், இரா.சந்திரசேகர், தலைமைப் பொறியாளர், நெடுஞ்சாலை, கட்டுமானம் மற்றும் பராமரிப்பு ஆகிய அரசு உயர் அலுவலர்களும் கலந்து கொண்டனர்.

The post நீடாமங்கலம் ரயில்வே கடவு சாலை மேம்பால பணிக்கு அடிக்கல் நாட்டினார் அமைச்சர் எ.வ.வேலு appeared first on Dinakaran.

Tags : Minister ,AV Velu ,Needamangalam Railway Crossing ,Nagai ,Needamangalam Nagar ,Nagai Gudalur ,Mysore National Highway ,Kumbakonam ,Mannargudi State Highway ,Thanjavur ,Nagapattinam ,Minister AV Velu ,Needamangalam Railway Crossing Bridge ,Dinakaran ,
× RELATED திமுக வேட்பாளர் சி.என்.அண்ணாதுரையை...